மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் லொக்கேஷன் அண்ணா அறிவாலயம் காட்டியது. தயாராக இருந்த ஸ்டேட்டஸ்க்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மொத்தம் 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஏ.சி.சண்முகத்தை விட 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

நேற்று இரவோடு இரவாக துரைமுருகனும், கதிர் ஆனந்தும் சென்னைக்கு கிளம்பினார்கள். நள்ளிரவு இருவரும் கோட்டூர்புரம் வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்ட சமயத்தில் அப்செட்டில் இருந்த துரைமுருகன் பெரும்பாலும் கோட்டூர்புரம் வீட்டில் தங்காமல்தான் இருந்தார். முடிந்தவரை வேலூரில் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். அதன் பிறகு இப்போதுதான் ரிலாக்ஸாக கோட்டூர்புரத்துக்கு வந்திருக்கிறார்.

காலை சரியாக 10.30 மணிக்கு மகன் கதிர் ஆனந்துடன் அண்ணா அறிவாலயத்துக்குப் போனார். அவர்கள் அங்கே போய் சேர்ந்த பிறகுதான் திமுக தலைவர் ஸ்டாலின் வந்தார். அறிவாலயத்துக்குப் போனதும், துரைமுருகனும் கதிர் ஆனந்தும் கலைஞர் சிலைக்கு முன்பாக வைக்கப்பட்டு இருந்த அண்ணா, கலைஞர் படத்துக்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்கள். பிறகு பொருளாளர் அறைக்குப் போனார் துரைமுருகன். அறிவாலயத்துக்கு ஸ்டாலின் வந்ததும் அப்பாவும் மகனும் அவரது அறைக்குள் போனார்கள். அங்கே டி.ஆர்.பாலு, பொன்முடி, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட சிலர் இருந்தார்கள். வெற்றி சான்றிதழை ஸ்டாலின் கையில் கொடுத்தார் கதிர் ஆனந்த். ‘ஒருவழியாக ஜெயிச்சுட்டீங்க போல...’ என்று ஸ்டாலின் சொல்ல... துரைமுருகன் முகம் சற்று மாறி இருக்கிறது. ஸ்டாலினுக்கு கதிர் ஆனந்த், துரைமுருகன் இருவருமே சால்வை அணிவித்தார்கள். ‘ஜெயிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு போல இருக்கு. மதியம் வரைக்கும் எனக்கு சுத்தமா நம்பிக்கையே இல்லை. லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்துல ஜெயிச்சுட்டு இப்போ ஆயிரத்துக்கு வந்துட்டுமேன்னு எல்லோரும் பேசுறாங்க...’ என்று ஸ்டாலின் சொல்லவும், எதுவுமே பேசாமல் அமைதியாகவே இருந்திருக்கிறார் துரைமுருகன். அங்கே இருந்த யாரும் எந்த வார்த்தையும் பேசவில்லையாம். போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்திருக்கிறார் துரைமுருகன். அவரது அறைக்கு போனவரிடம், ‘கலைஞர் சமாதிக்கு போகணும். உங்களை தலைவர் கிளம்ப சொல்றாரு...’ என்று தகவல் சொன்னார்களாம்.

அண்ணா, கலைஞர் சமாதியில் ஸ்டாலின் சகிதமாக போய் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அங்கேயும் துரைமுருகன் எதுவும் பேசவில்லை. அதன் பிறகு பெரியார் நினைவிடத்துக்கு போய் அஞ்சலி செலுத்தினர். பிறகு பேராசிரியர் அன்பழகன் வீட்டுக்குப் போய் அவரிடம் வாழ்த்து பெற்றார்கள். வழக்கமாக மீடியாவிடம் கலகலவென பேசும் துரைமுருகன் இன்று டோட்டலாக அப்செட். யாரிடமும் எதுவும் வாய் திறக்கவே இல்லை.

கதிர் ஆனந்த் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் ஸ்டாலினுக்கு சந்தோஷம் இல்லையாம். இதை நேற்றே துரைமுருகனிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு பதில் சொல்லும் விதமாகத்தான் நேற்று மீடியாக்கள் முன்பு பேசும் போது, ’எந்த ஒரு வெற்றியையும் சாதாரணமாக நினைக்க முடியாது. அதுபோல இந்த வெற்றியும்’ என்று மட்டும் சொன்னார். மீடியா நண்பர்கள் பலரும் துரைமுருகனை பேட்டிக்காக தொடர்பு கொண்ட போதும், ‘நான் பேசுற மனநிலையில் இல்லை. பொன்முடிகிட்ட கேட்டுக்கோங்க. அவருகிட்ட என்ன பேசணும்னு நான் சொல்லி இருக்கேன்..’ என்று சொல்லி தவிர்த்து விட்டாராம். ” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.


மேலும் படிக்க


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!


புறக்கணிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?


அதிமுக தோல்விக்குக் காரணம் யார்? தலைமைக் கழகத்தில் நடந்த விவாதம்!


டிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?


சனி, 10 ஆக 2019

அடுத்ததுchevronRight icon