மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

370 சட்டப்பிரிவு ரத்து: தேசிய மாநாட்டுக் கட்சி வழக்கு!

370 சட்டப்பிரிவு ரத்து: தேசிய மாநாட்டுக் கட்சி வழக்கு!

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019ஐ, செயலற்றது என்று அறிவிக்க வேண்டும் என கூறி ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு மறுசீரமைப்பு மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இன்று முதல் பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் காஷ்மீர் மறுசீரமைப்பு 2019 மசோதாவுக்கும் குடியரசு தலைவர் உத்தரவுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 10) வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில், முன்னாள் மக்களவை உறுப்பினர் முகமது அக்பர் லோன், ஓய்வு பெற்ற நீதிபதி ஹஸ்னன் மசூதி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்பட்ட சட்டமும், குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவை. இது சட்டவிரோதமானது. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அரசியலமைப்பின் 14 மற்றும் 21 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். எனவே இது செயலற்றது என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்குப் பிறகுத் தாக்கல் செய்யப்பட்ட நான்காவது மனு இதுவாகும். ஏற்கனவே மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சர்மா 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதுபோன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெஹ்சீன் பூனாவல்லா, குடியரசுத் தலைவர் உத்தரவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தார்.

நேற்று காஷ்மீரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷகிர் ஷபிர் தாக்கல் செய்த மனுவில், ”ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் உத்தரவைப் பெறாமல் குடியரசுத் தலைவர் மாநிலத்தின் சிறப்பு உரிமைகளை ரத்து செய்துள்ளார். இதனால் காஷ்மீரில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஒருதலை பட்சமானது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!


புறக்கணிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?


அதிமுக தோல்விக்குக் காரணம் யார்? தலைமைக் கழகத்தில் நடந்த விவாதம்!


டிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?


சனி, 10 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon