மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 14 டிச 2019

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொழில் மண்டலமா?: ராமதாஸ்

 நீர்ப்பிடிப்பு பகுதியில் தொழில் மண்டலமா?: ராமதாஸ்

புழல் ஏரியில் தொழில் மண்டலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொழில் மண்டலம் அமைக்க சிட்கோ நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக அனுமதி கோரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் விண்ணப்பித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தத் திட்டத்தை செயல்படுத்த அனுமதித்தால் அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று கூறி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில், “சிறுதொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தி வரும் சிட்கோ எனப்படும் சிறுதொழில் வளர்ச்சிக் கழகம், பெண் தொழில் முனைவோருக்காக தனி தொழில் மண்டலம் ஒன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளது. அதற்காக சிட்கோ நிறுவனம் தேர்வு செய்துள்ள இடம் சென்னை அருகே புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைந்திருக்கிறது. அந்த வளாகம் அமையவுள்ள 53 ஏக்கர் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதி என்பதிலிருந்து தொழில் செய்ய ஏற்ற இடமாக மாற்றித் தர வேண்டும் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் விண்ணப்பித்திருக்கிறது. ஆனாலும் அது ஏற்கப்படவில்லை.

வேலைவாய்ப்புகளையும், சிறுதொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில் தொழில் மண்டலங்களை அமைப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இதுபோன்ற சிப்காட் தொழிற்பேட்டைகளை அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு கட்டங்களில் வலியுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக மகளிர் தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்குடன் பெண்களுக்காக தனி தொழில் மண்டலத்தை அமைப்பது உன்னதமான திட்டம் ஆகும். ஆனால், அத்தகைய தொழில் மண்டலத்தை சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைப்பது தான் மிகவும் ஆபத்தானதாகும்.

இதற்கு முன் அம்பத்தூர் புதூர், திருப்பெரும்புதூரையடுத்த ஓரகடம் ஆகியவையும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக இருந்தவை தான். ஆனால், காலப்போக்கில் அவை தொழில்பகுதிகளாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் மாற்றப்பட்டன. அதன் விளைவு அந்தப் பகுதிகளில் சாதாரண மழை பெய்தாலே பெருவெள்ளம் ஏற்படுகிறது.

நீர்நிலைகளின் நீர்த்தேக்கப் பகுதிகள் மட்டுமின்றி, நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் பாதுகாக்க வேண்டும்; அந்தப் பகுதிகளில் எந்தவிதமான கட்டுமானங்களையும் அனுமதிக்கக் கூடாது என்று 2005-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. அதன்பின்னர் கடந்த 15 ஆண்டுகளில் இதேபோன்று பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தீர்ப்புகளுக்கு எதிரான வகையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளின் தன்மையை மாற்றும் வகையிலான எந்த ஒரு முயற்சியையும் எந்த காரணத்திற்காகவும், எந்த காலத்திலும் அரசு அனுமதித்துவிடக் கூடாது. புழல் ஏரியின் நீர்த்தேக்கப் பகுதி 4500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. ஆனால், காலப்போக்கில் ஏரியின் நீர்த்தேக்கப் பகுதி பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. ” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளங்களுக்கு நீர்நிலைகளின் நீர்த்தேக்கப் பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் செய்யப்பட்ட இத்தகைய ஆக்கிரமிப்புகள் தான் காரணம் என்றும். இந்த அனுபவங்களுக்கு மதிப்பளித்து புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை தொழில் மண்டலமாக மாற்றும் கோரிக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கு மாறாக நீர்நிலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பகுதிகளில் மிக அதிக எண்ணிக்கையில் தொழிற்பேட்டைகளையும், தொழில் மண்டலங்களையும் அரசு அமைக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கை மூலமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.


மேலும் படிக்க


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!


புறக்கணிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?


அதிமுக தோல்விக்குக் காரணம் யார்? தலைமைக் கழகத்தில் நடந்த விவாதம்!


டிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?


சனி, 10 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon