மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஆக 2019

அதிமுக தோல்விக்குக் காரணம் யார்? தலைமைக் கழகத்தில் நடந்த விவாதம்!

அதிமுக தோல்விக்குக் காரணம் யார்? தலைமைக் கழகத்தில் நடந்த விவாதம்!

வேலூர் தேர்தல் முடிவுகள் வெளியாகத் துவங்கியதும் முதலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் முன்னிலையில் இருந்துவந்தார். இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். ஆனால், 8வது சுற்று வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியதும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெறத் துவங்கினார். அடுத்தடுத்த சுற்றுகளின்போதும் முன்னிலை தொடர கதிர் ஆனந்தின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் களையிழந்தனர். அத்துடன் வேலூர் தொகுதிக்கு இன்சார்ஜாக இருந்த முதல்வருக்கு மிகவும் நெருக்கமான ஆத்தூர் இளங்கோவனை வெளிப்படையாகவே குற்றம்சாட்ட ஆரம்பித்தனர்.

“இந்த ஆத்தூர் இளங்கோவன ஏன் எடப்பாடியார் இவ்ளோ நம்பிகிட்டு இருக்கார்னு தெரியல. போன எலக்‌ஷன்லயே அவர சேலம், கள்ளக்குறிச்சினு ரெண்டு தொகுதிக்கு இன்சார்ஜா போட்டாங்க. அங்க நாம தோத்துட்டோம். முதல்வரோட சொந்த மாவட்டத்துல தோத்துட்டோம்கிற பேருதான் அவரால வந்தது. இதுக்கு அப்புறமும் ஏன் அவர வேலூருக்கு இன்சார்ஜா போட்டாங்க...இப்ப பாருங்க அவரால ஜெயிக்க வேண்டிய வேலூர்லயும் நாம தோத்துட்டோம்” என்று அங்கு குழுமியிருந்த நிர்வாகிகளில் ஒருவர் கூற, அருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் ஆமாம், ஆமாம் நீங்க சொல்றது சரிதான் என்று ஆமோதித்திருக்கிறார்கள்.

அப்போது அவ்வழியாக சென்ற மாவட்டச் செயலாளர் ஒருவர் இதனைக் கேட்டுவிட்டு அவர்களுடனான உரையாடலில் கலந்தார். தன் பங்குக்கு அவரும், “பிரச்சார சமயத்துல இளங்கோவனோட செயலால பல பேர் கோவத்துலதான் இருந்தாங்க. எடப்பாடியோட பேர சொல்லிகிட்டு அவர் போட்ட ஆட்டம் இருக்கே... அமைச்சருங்க என்ன பன்றாங்க, எங்க தங்கியிருக்காங்க, எப்ப தூங்குறாங்க மொதக்கொண்டு எல்லாத்தையும் வாட்ச் பன்னிட்டு இருந்தாரு. இதனால் சரியான கோபமாயிட்ட சீனியர் மினிஸ்டர் திண்டுக்கல் சீனிவாசன், ஒருநாள் இளங்கோவன புடிச்சி சத்தம் போட்டுட்டாரு.

அதவிடுங்க லோக்கல் மினிஸ்டர் வீரமணிய கூட அவர் விட்டுவைக்கல. இளங்கோவன் ஏதோ சொல்ல, அதனால் கடுப்பான வீரமணி, ‘இது எங்க மாவட்டம். இங்க இருக்குற சூழல் எங்களுக்குத்தான் தெரியும். எங்க மாவட்டத்துக்கு வந்துட்டு எங்களுக்கே கிளாஸ் எடுக்குறியான்னு?’ சொல்லி நேருக்கு நேராவே சண்டைக்கு போய்ட்டாரு. அதுமட்டுமில்லாம ரொம்பவும் அப்செட்டாயிட்ட வீரமணி ஒருநாள் முழுக்க தேர்தல் வேலை செய்யாமலே இருந்துட்டாருப்பா. இப்படிலாம் பண்ணா நாம எப்படி ஜெயிக்க முடியும்” என்று இளங்கோவன் குறித்து புகார் சொல்லியிருக்கிறார்.

விவாதத்தில் ஆத்தூர் இளங்கோவனுக்கு வேண்டியப்பட்ட ஒருவரும் இருந்திருக்கிறார். இதனைக் கேட்டு இளங்கோவனுக்கு ஆதரவாக அவர் பேச ஆரம்பித்துவிட்டார். “அதெல்லாம் இல்லங்க. நானும் வேலூர்ல தேர்தல் வேலை பாத்தவன்தான். இளங்கோவன் நல்லாத்தான் வொர்க் பன்னாரு. ஜெயிக்காததுக்கு அவர மட்டும் குத்தம் சொல்லாதீங்க. எல்லாருக்கும்தான் அதுல பொறுப்பு இருக்கு. எல்லாத்துக்கு காரணம் இந்த காஷ்மீர் பிரச்சினதான். எலெக்‌ஷன் தேதியிலதான் காஷ்மீர ரெண்டா பிரிக்குறத்துக்கான அறிவிப்ப மோடி வெளியிட்டாரு. காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்தையும் ரத்து பன்னிட்டாரு. அதுவரைக்கு ஓட்டு போடாம இருந்தா பாய்மாருங்க எல்லாம் இதக்கேள்விபட்ட உடனயே குடும்பத்தோட போய் ஓட்டு போட்டுட்டு வந்தாங்க. அவங்க யாருக்கு ஓட்டு போட்டுருப்பாங்கனு உங்களுக்கு சொல்லியா தெரியனும். அதனால் இளங்கோவன மட்டும் குத்தம் சொல்றதுல நியாயம் இல்ல” என்று பாஜக மீது பழியை சுமத்திவிட்டு அமைச்சர்கள் மேல் குற்றம் சொல்ல ஆரம்பித்தார்.

“மந்திரிங்க மட்டும் வாயவச்சுகிட்டு சும்மாவா இருந்தாங்க. நம்ம ராஜேந்திர பாலாஜி பாய்ங்க அதிகம் இருக்குற வாணியம்பாடில போய் நின்னுகிட்டு, நம்ம வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மோடிக்கு ரொம்ப க்ளோஸ் பிரண்ட். அவரு ஜெயிச்சா மோடிகிட்ட பேசி உங்களுக்கு நெறைய செய்வாருன்னு சொன்னாரு. மோடியோட பிரண்டுக்கு பாய்மாருங்க எப்படி ஓட்டு போடுவாங்கனு நீங்களே சொல்லுங்க” என்று கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு மா.செ, “அட, நாம தோப்போமுன்னு சிஎம்முக்கு முன்னாலயே தெரியும்பா...எலெக்‌ஷன் நடந்த அன்னைக்கே உளவு துறை அவருகிட்ட கொடுத்த ரிப்போர்ட்ல அதிமுக தோக்கும்னுதான் சொல்லிருக்கு. அதுவும் காஷ்மீர் விவகாரத்துக்கு அப்புறம்தான் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டுதுனு எடப்பாடிக்கு நல்லாவே தெரியும். போய் அடுத்த வேலையப் பாருங்கப்பா” என்று சொல்லியிருக்கிறார்.

வேலூரில் அதிமுக தேர்தல் தோல்விக்குக் காரணம் ஆத்தூர் இளங்கோவனா, பாஜகவா என்ற உரையாடல் அத்தோடு முடிவுக்கு வந்திருக்கிறது. அதையடுத்து கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவராக கலைந்து செல்ல ஆரம்பித்தனர். பிற்பகலுக்கெல்லாம் அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகம் வெறிச்சோடியது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?


திமுகவை முந்தித் தள்ளிய முஸ்லீம்கள்: வேலூர் நிலவரம்!


கலைஞர் சிலை திறப்பு பொதுக்கூட்டம்: வருத்தத்தில் வைகோ


மணிகண்டனை கண்டு கொள்ளாத ஓ.பன்னீர்வருகிறார் 90’ஸ் ரஜினி?


கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

சனி 10 ஆக 2019