மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஆக 2019

புறக்கணிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?

புறக்கணிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?

மதரா

திரைப்படங்களுக்காக இந்திய அரசால் வழங்கப்படும் 66ஆவது தேசிய விருதுப் பட்டியல் நேற்று (ஆகஸ்ட் 9)வெளியாகியிருக்கிறது. எந்த விருது அறிவிப்புக்கு பின்னரும் பாராட்டுகள், கைகுலுக்கல்கள் ஆகியவற்றுக்கிடையே சில சர்ச்சைகளும் எட்டிப்பார்ப்பது வழக்கம். ஆனால் இந்த விருது அறிவிப்பு தமிழ்த் திரையுலகினர், பார்வையாளர்கள் மத்தியில் அதிகப்படியான சலசலப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மூன்றாவது பெரிய திரையுலகமாக இருப்பது தமிழ்த் திரையுலகம்தான். அதிகளவிலான கலைஞர்கள், தொழிலாளர்கள் பணியாற்றும் இதிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 200 படங்கள் வரை வெளியாகின்றன. பெரும் வணிகத்தை தன்னுள் வைத்துள்ள தமிழ்த் திரைத்துறையில் தரமான படங்களும் மற்ற மொழிகளைவிட அதிகமாகவே வெளியாகிவருகின்றன.

முன்பைவிட சர்வதேச தளத்தில் தமிழ்ப் படங்கள் விருதுகளை அள்ளிவருகின்றன. ஆனால் தேசிய விருது அறிவிக்கும்போது மட்டும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமா புறக்கணிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுவது வாடிக்கையாகிறது. சிறந்த படம், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் இந்திப் படங்களே கோலோச்சுகின்றன. இசை, பாடல், பாடகர், ஆடை வடிவமைப்பு போன்ற இதர துறைகளில் தமிழ் போன்ற பிராந்திய மொழிப்படங்கள் தேர்வாகின்றன. இது வழக்கமாக இருக்கும் குற்றச்சாட்டு. ஆனால் இந்த முறை எந்தப் பிரிவின் கீழும் ஒரு தமிழ்ப் படம்கூட தேர்வாகவில்லை. பிரியா கிருஷ்ணஸ்வாமி இயக்கிய பாரம் என்ற படத்திற்கு ஒரு விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த தமிழ்ப் படம் என்ற பிரிவின் கீழ் கட்டாயம் ஒரு தமிழ்ப் படத்திற்குதான் விருது கொடுக்கவேண்டும் என்பதால் அதற்கு அளித்துள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பாரம் திரைப்படம் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதை ‘மகா நடி’ என்ற தெலுங்கு படத்திற்காகப் பெற்றுள்ளார். தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த சண்டைப் பயிற்சி கலைஞர்கள் அன்பறிவ் கூட்டணிக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் தமிழ்ப் படத்திற்காக அல்ல. கேஜிஎஃப் என்ற கன்னட படத்திற்காக.

தமிழ் சினிமா பொழுது போக்கு அம்சத்திற்கே முக்கியத்துவம் அளிக்கிறது என்ற குற்றச்சாட்டை உதறித்தள்ளிவிட்டு தரமான படங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என அனைத்து தரப்பினராலும் சமீபகாலமாக பேசப்படுகிறது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக பரியேறும்பெருமாள், மேற்குதொடர்ச்சி மலை, 96, வட சென்னை, ராட்சசன் என பல நல்ல படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அப்படியிருக்க எந்தப் பிரிவின் கீழும் தமிழ்ப் படங்கள் தேர்வாகாதது ஏன் என விவாதங்கள் கிளம்பியுள்ளன.

“பத்து கோடி மக்கள் வாழும் ஒரு மாநிலத்தை, நல்ல சினிமாவுக்கான முயற்சி நடைபெறும் காலகட்டத்தில் புறக்கணிப்பது வேதனை மட்டுமல்ல,’விருது குழுவின் போதாமையும் கூட. தமிழ் சினிமா துறையினர் ஒற்றுமையாக இந்த பாகுபாட்டிற்கு எதிராக பேச வேண்டும். செயல்பட வேண்டும்.

பரியேறும்பெருமாள், மேற்குதொடர்ச்சி மலை உள்ளிட்ட படங்கள் கண்டிப்பாக விருதுப்பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்” என்கிறார் மாற்று சினிமாவுக்காக இயங்கிவரும் தமிழ்ஸ்டூடியோ அமைப்பின் நிறுவனர் அருண்.

அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார், “விருதுக்கு தேர்வான படங்களின் பட்டியலைப் பார்க்கும் போது மத அரசியல் திரைத்துறைக்குள்ளும் வந்துவிட்டதோ எனத் தோன்றுகிறது. ஒரு கட்சி மத அரசியலை பேசிவிட்டுபோகட்டும். ஆனால் ஒரு அரசு அதை முன்னெடுக்ககூடாதல்லவா? இவர்களது இந்த அரசியலையும் நாம் நம் படங்களில் பேச வேண்டும்.

பொதுவாக தமிழ் சினிமாவில் நிகழ்கால அரசியலைப் பேசும் படங்கள் அதிகளவில் வரவேண்டும். தமிழ் சினிமா புறக்கணிக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்புகிறோம்; இது போன்ற பல விஷயங்களுக்கு சேர்ந்து குரல் கொடுக்க இங்கு கலைஞர்கள் மத்தியில் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்படவேண்டும்” என்றார்.

இந்திய அரசு தமிழ் சினிமாவை மட்டுமல்ல அனைத்து துறைகளையுமே புறக்கணித்துவருவதாக கூறுகிறார் தமிழ் ஸ்டூடியோ அருண். “தமிழ்நாட்டை புறக்கணித்து தமிழ்நாட்டின் வளங்களை மட்டும் கொள்ளையடிக்க முடிவு செய்திருக்கிறது பாசிச பிஜேபி அரசு. ஏற்கெனவே மத்திய அரசிடமிருந்து பெறும் நிதியின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். இங்குள்ள வளத்தை அளிக்கும் வகையில் எட்டு வழிச்சாலை, நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுப்பது போன்ற நாசகார திட்டங்களைக் கொண்டுவருகிறார்கள். பள்ளிக் கல்வியிலிருந்து உயர் கல்வி வரை பாமர மக்களை அந்நியப்படுத்தும் பணியைச் செய்கிறார்கள். இப்போது கலைத்துறையிலும் கைவைத்துள்ளார்கள். ஒரு இன அழிப்புக்கு முன்னால் ஒர் அரசு என்னவெல்லாம் செய்து அதற்கு தயாராகுமோ அதையெல்லாம் இப்போது செய்கிறார்கள்” எனக் கூறும் அருண் அதேசமயம் தேர்வுக்குழுவின் ஆதிக்கத்தையும் சுட்டிக் காட்டினார்.

இந்த விவகாரம் குறித்து நாம் பேசிய பலரும் தேர்வுக்குழுவினரையே கைகாட்டுகின்றனர். “எந்த மாநிலத்தவர்கள் தேர்வுக்குழுவில் அதிகம் உள்ளனரோ அந்த மாநிலத்தவர்களுக்கு விருதுகள் அதிகம் கிடைக்கின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேர்வுக்குழு உறுப்பினர்களாக சென்ற போது நம்மவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதையும் மறுக்க முடியாது. இது கண்டிக்கப்படவேண்டிய முறை” என்று அருண் எடுத்துரைத்தார்.

இயக்குநர் அமீர், “கடந்த பத்தாண்டுகளில் தேசிய விருதுகள் வழங்குவதில் ஒரு அரசியல் சார்பு உள்ளது” என்றார்.

மேலும் அவர், “2007ஆம் ஆண்டு எனது பருத்திவீரன் திரைப்படம் சிறந்த நடிகை, சிறந்த படத்தொகுப்பு என இரு விருதுகளைப் பெற்றது. ஆனால் அப்போது நான் விருதுக்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. என் படமே முட்டி மோதி அதுவே தனக்கான விருதைப் பெற்றுக்கொண்டது.

நம்மவர்களும் தேர்வுக்குழுவில் இடம்பெற வேண்டும். சிறந்த நடிப்புக்கான விருது சிவாஜி கணேசனுக்கு வழங்கப்படவேயில்லை. பாலுமகேந்திரா போய்தான் ஸ்பெஷல் ஜூரி பிரிவின் கீழ் அவருக்கு விருதைப் பெற்றுத்தர முடிந்தது. அதற்காக அவர் தேர்வுக்குழுவில் கடும் வாக்குவாதம் செய்யவேண்டியிருந்தது. தேசிய விருது பெற்றது குறித்து சிவாஜி கணேசன் அப்போதே பேட்டியளிக்கும் போது, ‘எனக்கெங்கடா கொடுத்தாங்க.. நம்ம பயலுக போய் புடுங்கிட்டுல வந்தாங்க’ என்று சொல்வார். சிவாஜி கணேசனுக்கே போராடிதான் விருதுபெற முடிந்திருக்கிறது” என்றார்.

“அதே நேரம் இங்குள்ளவர்கள் தேர்வுக்குழுவில் இடம்பெற்றபோது, அரசில் பங்குபெற்ற போது தமக்கு சாதகமாக இருந்துள்ளனர். திமுக மத்தியில் கூட்டணியில் இருக்கும் போதுதான் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ஆடுகளம் படத்திற்கு ஆறு விருதுகள் வழங்கப்பட்டன” என்று அமீர் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ஜே.எஸ்.கே சதிஷ், பரதேசி, தங்கமீன்கள், குற்றம் கடிதல் உள்ளிட்ட தேசிய விருதுபெற்றப் படங்களைத் தயாரித்தவர்.

அவரிடம் பேசும் போது, “நம்மிடமிருந்து நல்ல படங்கள் சென்றுள்ளன. ஆனால் நமது மொழியை, கலாச்சாரத்தை புரிந்துகொள்ளக்கூடிய, உள்வாங்கக்கூடிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் அமையாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. இது தேர்வுக்குழுவினரின் போதாமையா என்றால் அதுவும் இல்லை. ஏனென்றால் தேசிய விருது பெற்றவர்கள்தான் தேர்வுக்குழுவுக்கு செல்ல முடியும். எனக்கும் கடந்தமுறை தேர்வுக்குழுவில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டது. ஆனால் எதிரபாராதவிதமாக கலந்துகொள்ள முடியாமல் போனது. நாமும் அதில் கலந்துகொண்டால் மற்ற உறுப்பினர்களிடம் படம் கூறும் விஷயங்களை எடுத்துச் சொல்லி அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்ல முடியும்” என்றார்.

“தமிழிலிருந்து நிறைய படங்கள் அனுப்பப்படவேண்டும். அதற்கான விழிப்புணர்வை, ஒருங்கிணைப்பை ஏற்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சிக்கும்” என்றும் தெரிவித்தார்.

“தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவுதான் இந்தப் பட்டியல் என்பது இருக்கட்டும். அவர்கள் எந்த அடிப்படையில் இவர்களை தேர்ந்தெடுத்தார்கள். போட்டியிட்ட மற்ற படங்கள் எதில் தவறியுள்ளன என்பது பற்றியும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போது படத்தைப் பார்த்த மக்களும் தெரிந்துகொள்வார்கள் தானே” என்று தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார் கோபி நயினார்.

தமிழ்ப் படங்களை ஏன் தேர்வு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை விடுத்து விருதுபெற்ற படங்களின் தரங்களைப் பற்றி பேசலாம் என்றாலும் அதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதையே பலரும் வலியுறுத்துவதைப் பார்க்க முடிகிறது.

தமிழ் ஸ்டூடியோ அருண், “இதில் வெகுஜனப்படங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் விருதுப்பட்டியல் வெளியானால் அதில் வெவ்வேறு மொழிகளில் பரவலாக அறியப்படாத நல்ல படங்கள் இடம்பெறும். மக்களைச் சென்று சேர வேண்டிய படங்களாக தேர்ந்தெடுப்பர். இப்போது திரையரங்கில் வெளியாகி வணிகரீதியாக வெற்றியடைந்த படங்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளன” என்று கூறியுள்ளார்.

விருதுகள் மட்டுமே ஒரு படத்திற்கான அங்கீகாரம் என்று சொல்லிவிடமுடியாது. அதைவிட மக்களிடம் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு முக்கியமானது. நாம் மேற்சொன்னப் படங்களை மக்கள் கொண்டாடியுள்ளனர். ஆனால் ஒரு அரசு விருது வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்பதே பலரின் கருத்தாகவும் இருக்கிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?


திமுகவை முந்தித் தள்ளிய முஸ்லீம்கள்: வேலூர் நிலவரம்!


கலைஞர் சிலை திறப்பு பொதுக்கூட்டம்: வருத்தத்தில் வைகோ


மணிகண்டனை கண்டு கொள்ளாத ஓ.பன்னீர்வருகிறார் 90’ஸ் ரஜினி?


கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

சனி 10 ஆக 2019