மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 31 மே 2020

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை திட்டிய மணிகண்டனின் ஆடியோ ஆதாரம் - நீக்கம் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை:  எடப்பாடியை திட்டிய மணிகண்டனின் ஆடியோ ஆதாரம் - நீக்கம் பின்னணி!

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“தமிழக தகவல் தொழில் நுட்ப அமைச்சர் மணிகண்டன் நேற்றிரவு நீக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதுவும் ஓ.பன்னீரை பகைத்துக் கொண்டு முதல்வரான பின்னர் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும், ஒவ்வொரு அமைச்சரும் நமக்குத் தேவை என்று கருதியே எடப்பாடி ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார். தற்போது வரைக்கும் அப்படியே போய்க் கொண்டிருந்தது. ஆனால் மணிகண்டனை நீக்கும் அளவுக்கு என்ன நடந்திருக்கிறது என்று விசாரித்ததில் பல தகவல்கள் தெரியவருகின்றன.

தயாநிதிமாறனுக்கும், மு.க. அழகிரிக்கும் இடையே மூண்ட மோதலையடுத்து கலைஞர் டிவியை தொடங்கினார் கலைஞர். அதுமட்டுமல்ல, அதுவரை கேபிள் தொழிலில் தமிழகம் முழுதும் கோலோச்சிக் கொண்டிருந்த சன் குழுமத்தை அடக்கும் வகையில் அரசு கேபிள் தொடங்கப்படும் என்று கலைஞர் அறிவித்தார். ஆனால் இதயம் இனித்து, கண்கள் பனித்ததும் அரசு கேபிள் அப்படியே விடப்பட்டது. அரசு கேபிள் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு அன்றைய முதல்வர் அரசு கேபிள் அடக்கமாக செயல்படுகிறது என்று பதிலளித்தார்.

இதையெல்லாம் சுட்டிக் காட்டித்தான் 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் அனைத்து கேபிள் இணைப்புகளும் அரசுடையாக்கப்படும் என்று அறிவித்தார் ஜெயலலிதா. ஆட்சி அமைத்ததும் 2012 ஆம் ஆண்டு அரசு கேபிளை முழுமையாக செயல்படுத்தத் தொடங்கினார். சிறு குறு கேபிள் ஆபரேட்டர்களை எல்லாம் அரசு கேபிளில் இணைத்து அவர்களுக்கு சலுகைகள் கொடுத்து அரசு கேபிளில் சுமார் 70 லட்சம் கனெக்‌ஷன்கள் என்ற நிலை இருந்தது. அரசு கேபிள் டிவி ஆதிக்கம் செலுத்தினாலும் அந்த தொழிலில் ஏற்கனவே ஈடுபட்டிருந்த எஸ்.சி.வி., பாலிமர் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் தங்களிடம் ஏற்கனவே இருக்கும் உட்கட்டமைப்பை வைத்து தொழிலைத் தொடர்ந்துகொண்டிருந்தன.

இந்த நிலையில் கேபிள் டிவிகள் செட்டாப் பாக்ஸ் மூலமாகவே இயக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் டிராய் அமைப்பு கட்டாயமாக்கியது. செட்டாப் பாக்ஸ் முறையை எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள் என்று மத்திய அரசு தமிழக அரசிடம் எச்சரிக்கையாகவே கேட்டது. இதிலிருந்துதான் தமிழகத்தில் அரசு கேபிள் வைத்திருந்த இணைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கிட்டத்தட்ட 50 சதவிகிதம் அளவுக்கு இப்போது வீழ்ச்சியடைந்துவிட்டது.

தனியார் கேபிள் நிறுவனத்தார் தேவைப்படுகிற அளவுக்கு செட்டாப் பாக்ஸை எளிதில் பர்ச்சேஸ் செய்துவிட முடியும். ஆனால் அரசு கேபிள் நிறுவனம் பல்வேறு விதிமுறைகளை, வரம்புகளைப் பின்பற்றிதான் செட்டாப் பாக்ஸ் வாங்க டெண்டர் விட வேண்டும். இந்த பொதுவான நிலையை பயன்படுத்தி அமைச்சர் மணிகண்டன், அரசு கேபிள் நிறுவனத்தின் பெருவாரியான இணைப்புகளை குறையச் செய்துவிட்டார் என்பதுதான் அவர் மீதான முதல் புகார். மேலும் கடந்த ஒரு வருட காலத்துக்குள் அரசு கேபிள் எம்.டி.யாக குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்., மாத்யூ ஐ.ஏ.எஸ்., சங்கர் ஐ.ஏ.எஸ். என்று மூன்று அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்.

கடந்த ஜூன் மாதம் சங்கர் ஐ.ஏ.எஸ். அரசு கேபிள் டிவி எம்டியாக பொறுப்பேற்ற பின்னர் அனைத்து மாவட்ட கேபிள் தாசில்தார்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அரசு கேபிளை மேம்படுத்த என்ன வழி, கேபிள் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு என்ன பிரச்சினை, மக்களுக்கு என்ன தேவை என அறிக்கை கேட்டுள்ளார். மேலும் அவர் நடத்திய ஆய்வில் முதல்வரின் சேலம் மாவட்டத்திலேயே அரசு கேபிளின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சி அடைந்திருப்பதாக அறிந்தார். இதையெல்லாம் மொத்தமாக ஜூன் இறுதிவாரத்திலேயே முதல்வரிடம் அறிக்கையாக கொடுத்திருக்கிறார். மேலும் சேலம் மாவட்டத்தில் தனியார் கேபிள் தரப்பில் தன்னையே மாற்றிக்காட்டுவதாக சொல்கிறார்கள் என்றும் முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார் சங்கர் ஐ.ஏ.எஸ்.

ஏற்கனவே அமைச்சர் மணிகண்டன் மீது பொதுவான புகார்கள் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வந்துகொண்டிருந்த நிலையில்தான் , அரசு கேபிளில் கடந்த ஒரு வருட காலத்துக்கும் மேலாக ஏற்பட்ட வருமான இழப்பையும் அதன் மூலம் யார் யார் வருமானம் அடைந்தார்கள் என்பதையும் அறிந்து அதிர்ந்துவிட்டாராம் எடப்பாடி.

இந்த நிலையில் சட்டசபைக் கூட்டம் நடந்தபோது கேபிள் கட்டணம் உயர்ந்துவிட்டது என்று எதிர்க்கட்சியினர்கள் கேள்விகள் எழுப்பியபோது, தானும் ஒரு கேபிள் நிறுவன உரிமையாளர் என்பதால் அதுபற்றிய விவரங்கள் தெரிந்ததால் உடுமலை ராதாகிருஷ்ணன் பதில் கொடுத்துள்ளார். அன்று சட்டமன்றம் கூட்டம் முடிந்தவுடனே முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த அமைச்சர் மணிகண்டன் சற்று கோபமாகப் பேசியுள்ளார். ஏடாகூடமாகப் பேசியுள்ளார், முதல்வரும் சிரித்தபடி, ‘பரவாயில்ல போயிட்டு வாங்க பாத்துக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகுதான் மணிகண்டனை மட்டுப்படுத்தி வைப்பதற்காக அரசு கேபிள் கழக தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணனை நியமித்தார் முதல்வர். இதுபற்றி துறை அமைச்சரான தன்னிடம் முதல்வர் ஆலோசனை நடத்தவில்லை என்று கோபமானார் மணிகண்டன். இதுபற்றி தன்னிடம் தெரிவித்தவர்களிடம், ‘என்கிட்ட வந்திருக்கிற ரிப்போர்ட்டுக்கு நான் எடுத்திருக்குறது சாதாரண நடவடிக்கைதான்’ என்று சொல்லியிருக்கிறார். இருவாரங்களுக்கு முன் உடுமலை ராதாகிருஷ்ணன் கேபிள் கழக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, அமைச்சர் மணிகண்டனுக்கும் அவருக்கும் எவ்வித ஆலோசனையும் நடைபெறவில்லை. இதுவும் முதல்வருக்குத் தெரியவந்தது.

இதற்கிடையில் ராமநாதபுரத்தில் இருந்து கடந்த வாரம் முதல்வருக்கு ஒரு தகவல் சென்றிருக்கிறது. அதாவது தூர்வாருதல் உள்ளிட்ட குடிமராமத்து பணிகளுக்கு கமிஷன் வாங்க வேண்டாம், ஏன்னா இதுல நாம நல்ல பேர் வாங்கியே ஆகணும் என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் கான்ட்ராக்டர்களுக்கும், ‘கமிஷன் கொடுக்க வேணாம்.வேலைய நல்லா செய்ங்க’ என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

ஆனாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் எல்லாம் வழக்கப்படியேதான் நடக்கவேண்டும் என்று கான்ட்ராக்டர்களிடம் கூறியிருக்கிறார் அமைச்சர். அதற்கேற்றபடி நடக்காத கான்ட்ராக்டர்கள் மாற்றப்பட்டு வேறு கான்ட்ராக்டர்களிடம் அந்த வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக சில கான்ட்ராக்டர்கள் மணிகண்டனிடம் பேசியிருக்கிறார்கள். ‘சி.எம்.மே சொல்லியிருக்கும்போது நீங்க இப்படி கேட்கலாமா?’ என கேட்டிருக்கிறார்கள். அதற்கு மணிகண்டன், ‘எடப்பாடி சி.எம்மா? ராம்நாட்டுக்கு நான் தான் சி.எம்’ என்று சொல்லியிருக்கிறார். இது ‘அப்படியே’ எடப்பாடியின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் பிறகு தனக்கு நெருக்கமான அரசியலுக்கு அப்பாற்பட்ட சில நண்பர்களிடம் ஆலோசித்த முதல்வர் அதன் பிறகுதான் மணிகண்டனை நீக்கும்படி நேற்று காலை ஆளுநர் மாளிகைக்கு தகவல் அனுப்பியிருக்கிறார். இதை எப்படியோ தெரிந்துகொண்ட அமைச்சர் மணிகண்டன், ஆகஸ்டு 7 பகலில் பரமக்குடி அருகே தேசிய கைத்தறி தின விழாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உடுமலை ராதாகிருஷ்ணன் மீது புகார்களை அடுக்கிய மணிகண்டன், சம்பந்தமே இல்லாமல், ‘இந்த அமைச்சர் பதவி எனக்கு அம்மா கொடுத்தது’ என்றும் கூறினார். இதில் இருந்தே, தான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகிறோம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்கிறார்கள் ராமநாதபுரம் அதிமுகவினர். அமைச்சர் மணிகண்டனை நீக்கியதற்கு ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவினர் பலரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அதிமுகவை பாஜக வளைத்தது எப்படி? சசிகலா வெளியிடும் பகீர்!


வருகிறார் 90’ஸ் ரஜினி?


மணிகண்டன் பதவிபறிப்பு ஏன்? பி.ஏ.க்கள் வெளியிடும் ஆடியோ ரகசியம்!


அமைச்சர் மணிகண்டன் நீக்கம்: எடப்பாடியின் முதல் ஆக்ஷன்!


இனி நண்பர்களை ஏற்க முடியாது: லடாக் எம்.பி


வியாழன், 8 ஆக 2019

அடுத்ததுchevronRight icon