மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

மறைந்தார் கலைஞரின் இந்திரஜித்

மறைந்தார் கலைஞரின் இந்திரஜித்

திமுகவின் முன்னோடித் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சென்னை ஆயிரம் விளக்கு உசேன் நேற்று (ஆகஸ்டு 6) காலமானார்.

மிசா சட்டத்தின்கீழ் இருமுறை சிறை சென்றவர் உசேன். மிசாவில் திமுக ஆட்சிக் கலைக்கப்பட்டதைக் கண்டித்து இந்திரா காந்திக்கு திமுக சார்பில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் பங்கேற்று, காவல்துறையின் லத்தி அடியை தன் முதுகில் தாங்கியவர். கலைஞர் அந்தக் காயத்தைக் கண்டு பதறி, உசேனின் முதுகில் பாசத்துடன் தடவிக்கொடுத்தார். “தலைவர் தடவிக் கொடுத்த அன்றிலிருந்து இன்றுவரை என் முதுகெலும்பு எதற்கும் அஞ்சாது சுயமரியாதையோடு நிமிர்ந்து நிற்கிறது” எனப் பெருமையுடன் சொல்லிக் கொள்வார் உசேன்.

கலைஞர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியபோது தீவிர தொண்டனாக செயல்பட்டு சட்டமன்ற உறுப்பினருக்கான பணிகளை எல்லாம் கவனிப்பார் உசேன். அதேபோல தனது தேர்தல் பிரச்சாரத்தை சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் முடிப்பது கலைஞரின் வழக்கம். அந்தப் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்வார் உசேன்

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் முரசொலியில், ’தம்பி உசேன் எனக்கு இந்திரஜித்தை போன்றவர்’ என்று குறிப்பிட்டார் கலைஞர். அதற்குக் காரணம் இருக்கிறது. 1994 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து வெளியேறிய சிலர் அறிவாலயத்தை கைப்பற்றுவேன் என்று சொன்னபோது அப்போதைய சென்னை மாவட்ட செயலாளர் சைதை கிட்டுவுடன் இணைந்து தினசரி இரவு அறிவாலயத்திலேயே படுத்துப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டவர் உசேன்.

புதன், 7 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon