மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஆக 2019

ரஜினி ரசிகர்களுக்கு ஜெயம் ரவி அறிக்கை!

ரஜினி ரசிகர்களுக்கு ஜெயம் ரவி அறிக்கை!

கோமாளி படம் குறித்து வலம்வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோமாளி. பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் கோமாளி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.

இந்தப் பட டிரெய்லரில், ரஜினிகாந்தின் அரசியல் வருகையை பகடி செய்யும் காட்சிகள் இடம்பெற்றதையடுத்து ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இது தொடர்பாக கமல்ஹாசன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷைத் தொடர்பு கொண்டு பேசியதையடுத்து அக்காட்சிகள் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் இதன் டிரெய்லரை பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவைப் பாராட்டி உள்ளார். மேலும், அக்காட்சிகளை நீக்க வேண்டிய அவசியமில்லை என ரஜினிகாந்த் படக்குழுவை உற்சாகப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், கோமாளி படத்தின் நாயகனான ஜெயம் ரவி இச்சர்ச்சைகள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

‘கோமாளி’ திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் அளித்த பேராதரவினால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். இந்த முன்னோட்டத்துக்கு மாபெரும் வரவேற்பைத் தந்த எனது ரசிகர்களுக்கும், என்னுடன் நடித்த நடிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இருப்பினும் அந்த முன்னோட்டத்தில் மரியாதைக்குரிய ரஜினி சார் தொடர்பான காட்சி, அவரின் ரசிகர்களின் உணர்வுகளை துரதிர்ஷ்டவசமாகக் காயப்படுத்திவிட்டது. அந்த விஷயம் நேர்மறையாகச் சித்திரிப்பதற்காகவே சேர்க்கப்பட்டிருந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவருடைய ரசிகர்களைப் போலவே, அவரது அரசியல் பிரவேசப் பயணத்தை மிக ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும், ரஜினி சாரின் அதி தீவிர ரசிகன் என்ற முறையில் காணக் காத்திருக்கிறேன். நாங்கள் அனைவரும் அவரது திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள். அப்படி இருக்கும்போது அவரையோ, அவருடைய ரசிகர்களையோ எந்த விதத்திலும் அவமதிக்கும் எண்ணம் துளியும் எங்களுக்குக் கிடையாது.

ரஜினிகாந்த் ‘கோமாளி’ படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு எங்கள் குழுவை மனமாரப் பாராட்டினார். எங்களது குழுவின் படைப்பாற்றல் திறனையும், அலாதியான கருத்தாக்கலையும் மனமாரப் பாராட்டினார். இருந்தபோதும், எந்தவிதமான உள் நோக்கமும் இன்றி அமைக்கப்பட்டிருக்கும் அந்தக் காட்சியால் அவருடைய ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதற்கு மதிப்பளித்து, அக்காட்சியைப் படத்திலிருந்து நீக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவ்வறிக்கையில் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


தீரன் மூலம் ராமதாஸ் போடும் திட்டம்!


டிஜிட்டல் திண்ணை: நண்பர் சிலை திறக்க வருவாரா ஃபரூக் அப்துல்லா?


காஷ்மீர் கட்சிகளின் பதவி வெறியும் ஒரு காரணம்!


கோமாளி டிரெய்லர்: ரஜினி ரியாக்ஷன்!


கார்ப்பரேட்டுகள் கைக்குப் போகிறதா காஷ்மீர்? - தமிழகக் குரல்!


ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

புதன் 7 ஆக 2019