மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

எந்தச் சொல் சரி, எது தவறு?

எந்தச் சொல் சரி, எது தவறு?

ஒரு சொல் கேளீரோ! 40 - அரவிந்தன்

பொதுவாகத் தவறாக எழுதப்படும் சொற்களையும் குழப்பம் தரும் சொற்களையும் தெளிவுபடுத்திக்கொள்வதற்கான பட்டியல் இது.

இடப்புறம் உள்ளது தவறு அல்லது தவிர்க்க வேண்டியது.

அருகாமை – அருகில், அருகமை

அதிருஷ்டம் – அதிர்ஷ்டம்

ஆச்சர்யம் – ஆச்சரியம்

ஆவண செய்க – ஆவன செய்க

அர்ஜூன் - அர்ஜுன்

அறுவருப்பு - அருவருப்பு

அறுகம்புல் - அருகம்புல்

இருபத்தி மூன்று - இருபத்து மூன்று

இவைகள் - இவை

இயக்குனர் – இயக்குநர்

இறுக்கம் - இருக்கம்

உடற்கூறாய்வு - உடற்கூராய்வு

உத்திரவாதம் – உத்தரவாதம்

உளமாற - உளமார

எண்ணை – எண்ணெய்

ஏற்கனவே – ஏற்கெனவே

ஒருசில – சில

ஓட்டுனர் – ஓட்டுநர்

கத்திரிக்கோல் – கத்தரிக்கோல்

கடைபிடித்தல் - கடைப்பிடித்தல்

கருப்பு - கறுப்பு

கறுமை - கருமை

காணல் நீர் - கானல் நீர்

காலணி - காலனி – (குடியிருப்பு)

காலனி - காலணி – (செருப்பு)

காலம்காலமாக - காலங்காலமாக

காலாற – காலார

கீழ்க்கண்ட – கீழ்க்காணும்

கைமாறு - கைம்மாறு

கொப்பளம் – கொப்புளம்

கோர்வை – கோவை

கோர்த்தல் – கோத்தல்

சன்னதி - சன்னிதி

சித்தரிப்பு - சித்திரிப்பு

சுயேட்சை – சுயேச்சை

சுமூகம் - சுமுகம்

சுவற்றில் - சுவரில்

சுறுக்குதல் - சுருக்குதல்

தகறாறு - தகராறு

திருமணம் செய்தார் - திருமணம் செய்துகொண்டார்

தொலைப்பேசி - தொலைபேசி

தற்கொலை செய்தார் - தற்கொலை செய்துகொண்டார்

தூரம் – தொலைவு

நஞ்சை – நன்செய்

நடத்துனர் - நடத்துநர்

நாகரீகம் - நாகரிகம்

நியாபகம் - ஞாபகம்

நிருத்தம் - நிறுத்தம்

நினைவுகூறுதல் - நினைவுகூர்தல்

பதட்டம் – பதற்றம்

பிரச்சனை / பிரச்னை - பிரச்சினை

புஞ்சை – புன்செய்

புள்ளிவிபரம் - புள்ளிவிவரம்

பெருநர் - பெறுநர்

பெறுனர் – பெறுநர்

பெறும்பாடு - பெரும்பாடு

பொருமல் - பொறுமல்

பொருத்தவரை - பொறுத்தவரை

மனதாற - மனதார

மறுகுதல் - மருகுதல்

மறுவிவருதல் - மருவிவருதல்

மாதாந்திர – மாதாந்தர

முஸ்லீம் - முஸ்லிம்

வம்சாவழி - வம்சாவளி

வலது புறம் – வலப்புறம்

வரையரை - வரையறை

வாராந்திர - வாராந்தர

வாழ்த்துக்கள் – வாழ்த்துகள்

வெய்யில் – வெயில்

குழப்பங்கள், விதிவிலக்குகள்

சில்லறை, சில்லரை ஆகிய இரண்டுமே வழக்கில் இருக்கின்றன. எனவே இவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்துக்கொள்ளலாம். ஏதேனும் ஒன்றைச் சீராகப் பயன்படுத்துவதே முறையானது.

பொரித்தல், பொறித்தல் ஆகிய சொற்களில் உள்ள ‘றி’, ‘ரி’ வேறுபாட்டின் பொருளை அறிந்து பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு:

எண்ணெயில் பொறித்த பண்டம்

கல்லில் பொரித்த எழுத்து

கட்டிடம், கட்டடம் இரண்டும் பயன்படுத்தும் இடங்களைப் பொறுத்த அளவில் சரி.

கட்டடம் (building) கட்டப்படுகின்ற இடம் கட்டிடம் (site). அங்கு எழுப்பப்பெறுவது கட்டடம் (building).

வேறுபாடு உணர்ந்து சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

விதிகள், வழக்குகள்

கிலோமீட்டர், மீட்டர், சென்டிமீட்டர் ஆகிய சொற்களை அப்படியே பயன்படுத்த வேண்டும்.

மைல் என்னும் சொல் வழக்கொழிந்தது.

பவுண்டு என்பது தற்போது புழக்கத்தில் இல்லை. கிலோகிராம் என்னும் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.

மேலே உள்ள சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்கள் இல்லை. தவிர, அந்தச் சொற்கள் தமிழில் இயல்பாகப் புழங்கிவருகின்றன. எனவே தமிழில் அவற்றை உள்ளடக்கிவிடலாம். ஆனால், அங்குலம் என்னும் சொல் தமிழில் புழக்கத்தில் உள்ள சொல். எனவே இஞ்ச் என்பதற்குப் பதில் அதையே பயன்படுத்தலாம்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ளவை வெறும் எடுத்துக்காட்டுகள்தாம். இந்தப் பட்டியலை நிறைவுசெய்ய இயலாது. அடிக்கடி பயன்படுத்தப்படும் முக்கியமான சில சொற்கள் உள்ளன எனக் கருதும் வாசகர்கள் அவற்றை [email protected], [email protected] minnambalam.com ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம்.

மொழிநடை குறித்த கேள்விகள், ஆலோசனைகள், சிந்தனைகள் இருப்பின் அவற்றையும் மின்னஞ்சலில் அனுப்பலாம்.

தவறின்றித் தமிழ் எழுதும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம் தற்காலிகமாகத் தற்போது நிறைவடைகிறது.

இந்தப் பயணத்தில் ஆலோசனைகள், கருத்துகள் மூலம் துணைபுரிந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

(முற்றும்)

ஒரு சொல் கேளீரோ! 39


மேலும் படிக்க


தீரன் மூலம் ராமதாஸ் போடும் திட்டம்!


டிஜிட்டல் திண்ணை: நண்பர் சிலை திறக்க வருவாரா ஃபரூக் அப்துல்லா?


காஷ்மீர் கட்சிகளின் பதவி வெறியும் ஒரு காரணம்!


கோமாளி டிரெய்லர்: ரஜினி ரியாக்ஷன்!


கார்ப்பரேட்டுகள் கைக்குப் போகிறதா காஷ்மீர்? - தமிழகக் குரல்!


புதன், 7 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon