மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஆக 2019

காஷ்மீர் கட்சிகளின் பதவி வெறியும் ஒரு காரணம்!

காஷ்மீர் கட்சிகளின் பதவி வெறியும் ஒரு காரணம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அம்மாநிலத்தின் முக்கியக் கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி போன்றவையும் காரணம் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஆகஸ்ட் 5) ஜம்மு காஷ்மீர் குறித்து இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட அறிவிப்பை, முற்பகல் உள் துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் வெளியிட்டார். அதில் ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள தனி உரிமைகள் கொண்ட உறுப்பு 35ஏ மற்றும் 370 உட்பிரிவுகள் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மற்ற அரசியல் தலைவர்களைக் காட்டிலும் சற்று ஆழமாக, வேறொரு கோணத்தில் கருத்து தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவரான பெ.மணியரசன்.

“ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டையும் ஒன்றிய அரசின் நேரடி ஆளுகைக்குட்பட்ட யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளது. அதிலும், லடாக் பிரதேசத்துக்குச் சட்டமன்றம் கிடையாது. ஜம்மு காஷ்மீர் மக்களின் தேசிய இன உரிமைகளைப் பறித்து பாஜக ஆட்சி நிகழ்த்தியுள்ள ஜனநாயகப் படுகொலையைத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ள மணியரசன், காஷ்மீரின் வரலாற்றைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மன்னர் ஹரிசிங் - இந்தியா ஒப்பந்தம்

“ஆங்கிலேய ஆட்சியின் காலனி நாடாக இந்தியா இருந்தபோது, ஜம்மு காஷ்மீர் மன்னராட்சியின் கீழ் தனிநாடாக இருந்தது. இந்திய விடுதலையின் போது, ஜம்மு காஷ்மீரைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள பாகிஸ்தான் கேட்டது; இந்தியா தன்னுடன் இணைத்துக் கொள்ளக் கேட்டது. பாகிஸ்தானிலிருந்து படையெடுத்து வந்த ஒரு பிரிவினர் – காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்து வைத்துக் கொண்டனர். அந்தப் பகுதிதான் இப்போது பாகிஸ்தானில் உள்ள ’ஆசாத் காஷ்மீர்’. காஷ்மீரைக் கைப்பற்ற இந்தியப் படைகளும், பாகிஸ்தான் படைகளும் மோதிக் கொண்டன.

அந்த நேரத்தில், காஷ்மீர் மன்னர் ஹரிசிங்கிற்கும் இந்திய அரசுக்கும் இடையே இணைப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. மன்னர் ஹரிசிங் அந்த ஒப்பந்தத்தில் 26.10.1947 இல் கையெழுத்திட்டார். இந்தியா சார்பில் அன்றைய வைசிராய் மவுன்ட் பேட்டன் 27.10.1947இல் கையெழுத்துப் போட்டார். அதில் தனி நாடாக இருந்த ஜம்மு காஷ்மீரின் தன்னுரிமைக்கு – தன்னாட்சிக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று கூறப்பட்டது.

சலுகைக்குப் பின்னால் இருக்கும் சங்கதி

அன்றைய இந்தியத் தலைமையமைச்சர் ஜவகர்லால் நேரு, ஜம்மு காஷ்மீரிலிருந்து இந்தியப் படையை விடுவித்துக் கொள்வோம். காஷ்மீர் யாருடன் இருப்பது என்பதை காஷ்மீர் மக்களே முடிவு செய்யட்டும்” என்று உறுதி கூறினார். இந்த உறுதிமொழியை அன்றைய பாகிஸ்தான் தலைமையமைச்சர் லியாகத் அலிகானுக்கு நேரு 31.10.1947 அன்று தந்தியாகக் கொடுத்தார். பின்னர், 1953ஆம் ஆண்டு ஆகஸ்டு 20 அன்று புதுதில்லியில் இந்தியத் தலைமையமைச்சர் பண்டித நேரும், பாகிஸ்தான் தலைமையமைச்சர் முகமது அலி போக்ராவும் வெளியிட்ட கூட்டறிக்கையில் காஷ்மீர் மக்கள் இந்தியாவோடு இருக்க விரும்புகிறார்களா, பாகிஸ்தானோடு இருக்க விரும்புகிறார்களா அல்லது தனிநாடாக இருக்க விரும்புகிறார்களா என்பது பற்றி ஜம்மு காஷ்மீரிலும், ஆசாத் காஷ்மீரிலும் “கருத்து வாக்கெடுப்பு” (Plebiscite) நடத்தப்படும் என்று உறுதியளித்தார்கள்.

இந்தப் பின்னணியிலிருந்து ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 35A மற்றும் 370 உட்பிரிவுகள் கொடுத்த தனிச்சிறப்புரிமைகள் பற்றி பகுப்பாய்வு செய்ய வேண்டும். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை – அம்மாநிலத்தின் அரசமைப்பு அவையும் (அரசியல் நிர்ணய சபையும்) ஆகும். சம்மு காஷ்மீருக்கு இந்திய அரசுக் கொடியும் உண்டு, மாநில அரசின் தனிக்கொடியும் உண்டு. ஜம்மு காஷ்மீரில் வெளி மாநிலத்தவர் நிலம் போன்ற சொத்துகளை வாங்க தடை, வெளி மாநிலத்தவர் குடியுரிமை பெறத் தடை உள்ளிட்ட சிறப்புரிமைகள் இருக்கின்றன.

பிரதமரைப் பறித்தது காங்கிரஸ், முதல்வரைப் பறித்தது பாஜக

இவற்றைவிடக் கூடுதல் உரிமைகள் ஜம்மு காஷ்மீருக்கு ஏற்கெனவே இருந்தன. 1952இல் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் தலைமையமைச்சர் (பிரதமர்) என்று அழைக்கப்பட்டார். அங்கு ஆளுநர் பதவி இல்லை! இவற்றையும் இன்னபிற காஷ்மீர் அதிகாரங்களையும் காங்கிரசு ஆட்சி பறித்துவிட்டது. இப்போது, இதர இந்திய மாநில அரசுக்குள்ள மிகக்குறைந்த அதிகாரங்களையும் பாஜக அரசு பறித்துவிட்டது.

ஜம்மு காஷ்மீரை இரண்டு மாநிலங்களாக்கி - யூனியன் பிரதேசமாக மாற்றியதை இப்போது நாம் கண்டிக்கிறோம். இனி, தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களையும் இதேபோல் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றும் முயற்சியின் முன்னோட்டம் தான் ஜம்மு காஷ்மீர் பிரிவினையும் உரிமைப்பறிப்பும்!

காஷ்மீர் கட்சிகளின் பதவி வெறி

ஜம்மு காஷ்மீரில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி போன்றவை தங்களின் பதவி வெறிக்காக காங்கிரஸ், பாஜக. கட்சிகளுடன் மாறிமாறிக் கூட்டணி சேர்ந்து இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளன. இன்னொருபக்கம், மக்களுக்கு வெளியே வெடிகுண்டு விடுதலைப் போராளிகள் நடத்தும் தீவிரவாதச் செயல்கள், மக்களின் மீதான அரசின் அடக்குமுறையை தீவிரப்படுத்தத்தான் பயன்படுகின்றன.

காஷ்மீரின் அவ்விரு கட்சிகளைப் போன்றவைதான் தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும். காஷ்மீருக்கு ஏற்பட்டது போன்ற ஆபத்துகள் தமிழ்நாட்டுக்கு வந்தால் இவ்விரு கழகங்களாலோ, இவைபோல் முதலமைச்சர் – அமைச்சர் அதிகாரத்துக்காக மூச்சை வைத்துக் கொண்டிருக்கும் கட்சிகளாலோ தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்க முடியாது, பதவி ஆசையற்ற லட்சியத் தமிழ்த் தேசியத்தின்பால் லட்சோப லட்சம் வெகுமக்கள் திரண்டு அறப்போராட்டம் - ஜனநாயகப் போராட்டம் நடத்தும் ஆற்றல் வளர்ந்தால்தான் தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்க முடியும் என்ற படிப்பிணையைத் தமிழர்கள் பெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் மணியரசன்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வேலூரில் எதிரொலித்த காஷ்மீர்


காஷ்மீர் பிரச்சினை: அரசியல் சாசனப் பிரிவு 370 - 35ஏ என்ன சொல்கிறது?


பழிவாங்கிய ராமானுஜம், ராஜேந்திரன்: ஜாங்கிட்


வீட்டுக் காவலில் தலைவர்கள்: காஷ்மீரில் தொடரும் பதற்றம்!


காஷ்மீர் - 370: மாநிலங்களவையில் கடும் அமளி!


ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

செவ்வாய் 6 ஆக 2019