மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஆக 2019

தீரன் மூலம் ராமதாஸ் போடும் திட்டம்!

தீரன் மூலம் ராமதாஸ் போடும் திட்டம்!

பாமகவின் ஆரம்ப கால மாநிலத் தலைவராக இருந்து அக்கட்சியின் துடிப்பான அத்தியாயங்களுக்குத் தூண்டுகோலாக இருந்த பேராசிரியர் தீரன் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாமகவில் இணைந்துள்ளார். ஆகஸ்டு 4 ஆம் தேதி நண்பர்கள் தினத்தில் உண்மையிலேயே தனது இனிய நண்பரான தீரனை மீண்டும் தன்னோடு சேர்த்துக் கொண்டிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

அண்மையில் நடந்த தனது முத்துவிழாவை தனது பழைய நண்பர்களோடும், தனது பழைய தளபதிகளோடும் கொண்டாடவே விரும்பினார் ராமதாஸ். அதை ஒட்டியே இட ஒதுக்கீடு போராட்டவாதிகள் அழைக்கப்பட்டனர். அந்த அடிப்படையில்தான் பேராசிரியர் தீரனையும் அழைத்தார். பாமகவை ராமதாஸ் தொடங்கிய போது அதற்கு முழு காரணமாக உடனிருந்து அதன் முதல் மாநிலத் தலைவரானவர் பேராசிரியர் தீரன். 1996ல் பாமக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 தொகுதிகளில் ஆண்டிமடம் தொகுதியும் ஒன்று. ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராக பாமக சார்பில் தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர் தீரன் ராமதாசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தமிழ் பாமக என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். பின்னர் அரசியல் அலையில் அலைக்கழிக்கப்பட்டு பாஜக, காங்கிரஸ், அதிமுக என பல கட்சிகளில் பயணித்தார்.

அதிமுகவில் எஞ்சிய காலத்தை எப்படியாவது கழித்து விட நினைத்தவருக்கு ஜெயலலிதா மறைவுக்குப் பின் அங்கேயும் உரிய இடம் அளிக்கப்படவில்லை என்ற குறை இருந்தது. இந்த நிலையில்தான் சரியாக ராமதாஸின் முத்து விழாவும் வர, அவரது அழைப்பும் வர பழையதெல்லாம் மறந்து மீண்டும் பாமகவில் இணைந்தார்.

ராமதாஸுக்கும் இப்போது தீரன் தேவைப்படுகிறார். இதுகுறித்து பாமக வட்டாரங்களில் விசாரித்தோம்.

“தீரன் காலத்தில் பாமக துடிப்பு மிக்க வன்னியர் கட்சியாக இருந்தது. ஆனால் பற்பல முக்கிய நிர்வாகிகள் பாமகவில் இருந்து வெளியேறத் தொடங்கினர். அதற்கு அன்புமணிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்தான் காரணம். அன்புமணி உள்ளே வந்ததும் பாமகவின் வன்னிய வண்ணத்தை மாற்றி, அனைத்து சமுதாயத்துக்கும் உரிய கட்சி என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சித்தார். ஆனால் எவ்வளவோ செய்தும் எடுபடவில்லை.

இந்த நிலையில்தான், வன்னிய சமுதாயத்தின் ஆதரவையும் இழந்து மற்ற சமுதாயத்தினரின் ஆதரவையும் பெற முடியாமல் இருப்பதை விட, மீண்டும் பழைய முறையை கையிலெடுப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ராமதாஸ். ஆம்... ஒருங்கிணைந்த பழைய பாமகவை மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறார் ராமதாஸ்,. அதற்காகத்தான் பழைய பாமக தலைவர்களை எல்லாம் மீண்டும் தன்னோடு சேர்த்து வருகிறார். அந்த வரிசையில் முதல் ஆளாக தீரன் வந்திருக்கிறார். இப்போதே கட்சியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வன்னியர் அல்லாத நிர்வாகிகள் பலர் தேர்தலுக்குப் பிறகு மாற்றப்பட்டு வருகின்றனர். மீண்டும் வன்னியர் கட்சி என்ற அமைப்பு பலத்தை ஏற்படுத்தவே ராமதாஸ் விரும்புகிறார். தீரனைப் போல வேல்முருகன் போன்றவர்களும் பாமகவுக்குத் திரும்பவேண்டும் என்பதுதான் ராமதாஸின் விருப்பம். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல. அதேநேரம் தீரன் மூலம் பழைய பாமக புள்ளிகள் அனைவரிடமும் பேசி வருகிறார் ராமதாஸ்” என்கிறார்கள்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வேலூரில் எதிரொலித்த காஷ்மீர்


காஷ்மீர் பிரச்சினை: அரசியல் சாசனப் பிரிவு 370 - 35ஏ என்ன சொல்கிறது?


பழிவாங்கிய ராமானுஜம், ராஜேந்திரன்: ஜாங்கிட்


வீட்டுக் காவலில் தலைவர்கள்: காஷ்மீரில் தொடரும் பதற்றம்!


காஷ்மீர் - 370: மாநிலங்களவையில் கடும் அமளி!

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

செவ்வாய் 6 ஆக 2019