மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

காஷ்மீர்: மக்களவையில் தாக்கல்; மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

காஷ்மீர்: மக்களவையில் தாக்கல்; மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 ஐ நீக்கும் மசோதா மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான அரசியல் சாசனம் 370 பிரிவை நீக்குவதாக இன்று (ஆகஸ்ட் 5) காலை 11 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவை ஒத்திவைக்கப்பட்டது. “சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும்” என்று அமித் ஷா அறிவித்தார். அதன் பின்னர் மாலை 5.30 மணியளவில் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான விவாதங்கள் நாளைய தினத்தில் நடைபெறவுள்ளன.

அதன் பின்னர் மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, “வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுடனும் தீர்மானத்துடனும் நான் இங்கு வந்துள்ளேன். நிறையப் பேர் இதுகுறித்துத் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். நான் அனைவருக்கும் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்; நீண்ட காலமாக ரத்த வெள்ளத்தில் மிதந்த காஷ்மீருக்கு இப்போது விடிவு காலம் பிறந்துள்ளது. ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகத்தான் சட்டப்பிரிவு 370 அழிக்கப்பட்டது. பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த பலர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வந்தனர். ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு வந்தவர்கள் இதுவரையில் குடியுரிமை பெறவே இல்லை. அவர்களால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கவுன்சிலராகக் கூட ஆக முடியாது.

சட்டப்பிரிவு 370ஆல் வளர்ச்சி ஏற்படவில்லை. அது தலித், பெண்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக உள்ளது. அங்கு தீவிரவாதத்தின் வேராகவே சட்டப்பிரிவு 370 இருந்தது. இச்சட்டத்தால் அங்கு பஞ்சாயத்து மற்றும் உள்ளூர் தேர்தல்கள் நடப்பதில்லை. எனவே 370 சட்டப்பிரிவு சரியாக இருந்தால் அனைவருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும். அது மோசமாக இருந்தால் அனைவருக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளின் தாக்கத்தை நான் கூற விரும்புகிறேன். இவற்றால்தான் ஜம்மு காஷ்மீரில் மக்களாட்சி முழுவதுமாக அமலாகவில்லை. ஜம்மு காஷ்மீரில் இவற்றால்தான் ஊழல் பெருகியது. எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு ரூ.2,77,000 கோடி ஒதுக்கியது. ஆனால் வளர்ச்சித் திட்டங்கள் அங்கே முடங்கிக்கிடப்பது ஏன்? ஏனெனில் 370 சட்டப்பிரிவானது ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துகிறது. 370, 35ஏ ஆகிய இரண்டு சட்டப்பிரிவுகளால்தான் ஜம்மு காஷ்மீரில் வறுமை நீடிக்கிறது” என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் காஷ்மீர் பிரிப்பு மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 61 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து காஷ்மீர் பிரிப்பு மசோதா நிறைவேறியதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு அறிவித்தார். மக்களவையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால் அங்கு இம்மசோதா எளிதில் நிறைவேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


காஷ்மீர் பிரச்சினை: அரசியல் சாசனப் பிரிவு 370 - 35ஏ என்ன சொல்கிறது?


பழிவாங்கிய ராமானுஜம், ராஜேந்திரன்: ஜாங்கிட்


வீட்டுக் காவலில் தலைவர்கள்: காஷ்மீரில் தொடரும் பதற்றம்!


ரஜினிக்காக வருந்திய கமல்ஹாசன்


காஷ்மீர் - 370: மாநிலங்களவையில் கடும் அமளி!


திங்கள், 5 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon