மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

காஷ்மீர் - 370: மாநிலங்களவையில் கடும் அமளி!

காஷ்மீர் - 370: மாநிலங்களவையில் கடும் அமளி!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370ஐ நீக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 5) மாநிலங்களவையில் பேசிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், அவர் பேசுகையில், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதி அதிக மக்கள் தொகையுடன் வேறுவிதமான நிலப்பரப்பைக் கொண்டது. லடாக் பகுதியைத் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். ஆகவே லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகச் செயல்படும்.

காஷ்மீர் மாநிலத்தில் தற்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பாதுகாப்புப் பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு அது தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்படுகிறது. அது சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகச் செயல்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த அறிவிப்பை கேட்ட நொடியிலேயே எதிர்க்கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். அவர்கள் மாநிலங்களவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு காஷ்மீர் பிரிக்கப்படுவதற்கு எதிராக முழக்கங்கள் எழுப்ப ஆரம்பித்தனர்.

மாநிலங்களவை உறுப்பினர் வைகோ எழுந்து ஆவேசமாக, “மீண்டும் எமர்ஜென்சி வந்திருக்கிறது” என்று குரல் எழுப்ப அவரை இருக்கையில் அமரச் சொன்ன மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு, “எமர்ஜென்சி இல்லை அர்ஜென்சி” என்று பதிலளித்தார்.

இதற்கிடையே பிடிபி எம்.பி.க்கள் மிர் பயாஸ், நசீர் அகமது ஆகியோர் அரசியலமைப்புச் சட்ட நகலை கிழிக்க முயற்சி செய்ததைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் அவையிலிருந்து வெளியேற்ற வெங்கைய்ய நாயுடு உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிர் பயாஸ் தனது உடையைக் கிழித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், “அரசியலமைப்புச் சட்ட நகலை கிழிக்க முயன்ற இரண்டு எம்.பி.க்களுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அரசியலமைப்புக்கு நாங்கள் துணை நிற்கிறோம். ஆனால் பாஜக அரசியலமைப்பு சட்டத்தையே கொன்றுவிட்டது” என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அமித் ஷா, “நாடாளுமன்றத்தில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கப்படுவதை இனி ஒரு நொடி கூட தாமதிக்கக் கூடாது. ஏனெனில் இந்தப் பிரிவின் மூலம் மூன்று குடும்பங்கள் ஜம்மு காஷ்மீரில் சுரண்டலில் ஈடுபட்டது. 370 பிரிவு ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார். ஆனால், அதில் உண்மையில்லை. பிரிவு 370 காரணமாக ஜம்மு காஷ்மீர் மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். தலித்துகளுக்கும், பெண்களுக்கும் நீதி கிடைக்கவில்லை” என்று பதிலளித்தார்.

பகுஜன் சமாஜ் எம்.பி சதிஷ் சந்திர மிஷ்ரா பேசுகையில், “அரசின் முடிவுக்கு எங்களுடைய முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து விவாதம் நடைபெற்றுவருகிறது.

370வது பிரிவு நீக்கப்படுவது தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 370ஆவது சட்டப்பிரிவை நீக்கும் உத்தரவு உடனே அமலுக்கு வருவதாகவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அரசியல் சட்டத் திருத்தங்கள் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும் எனவும், இதனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.


மேலும் படிக்க


காஷ்மீர் பிரச்சினை: அரசியல் சாசனப் பிரிவு 370 - 35ஏ என்ன சொல்கிறது?


ரஜினிக்காக வருந்திய கமல்ஹாசன்


வீட்டுக் காவலில் தலைவர்கள்: காஷ்மீரில் தொடரும் பதற்றம்!


பழிவாங்கிய ராமானுஜம், ராஜேந்திரன்: ஜாங்கிட்


தினகரனின் புது எச்சரிக்கை!


திங்கள், 5 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon