மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

காஷ்மீர் பிரச்சினை: அரசியல் சாசனப் பிரிவு 370 - 35ஏ என்ன சொல்கிறது?

காஷ்மீர் பிரச்சினை: அரசியல் சாசனப் பிரிவு 370 - 35ஏ என்ன சொல்கிறது?

கே.எஸ்.ராதா கிருஷ்ணன் ஃபேஸ்புக் பதிவு

காஷ்மீர் பிரச்சினையில் என்ன நடக்கப்போகிறதோ என்று தெரியவில்லை. மாநிலம் மூன்றாக ஜம்மு, காஷ்மீர், லடாக் என்று பிரிக்கப்படலாம். ஜம்மு மாநிலமாகவும், காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்படலாம் என்று யூகங்கள் உள்ளன. அரசியல் சாசனப்பிரிவு 370, விதி 35ஏ நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் கசிகின்றன. இன்று காலை அன்புக்குரிய நண்பர் பனாரஸ் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த விஸ்வநாத் பாண்டே, காஷ்மீர் பிரச்சினையில் 370, 35ஏ மாய மானா? என்று கூறினார்.

ஒரு நாட்டுக்குள்ளே தனி அரசியலமைப்புச் சட்டம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமே உண்டு. சுவிட்சர்லாந்தில் இருப்பதைப் போன்று மாநிலங்களுக்கு தனி சிறப்பு அந்தஸ்து போன்று இங்கே உள்ளது. இதே போல, வடகிழக்கு மாநிலங்களுக்கும் சிறப்புச் சலுகை அந்தஸ்து, அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவர்களுக்கு தனி அரசியலமைப்புச் சட்டம் கிடையாது. பிரிட்டன், இஸ்ரேல், நியூசிலாந்தில் எழுதப்பட்ட அரசியல் சட்டங்கள் (Constitution) நடைமுறையில் கிடையாது. மரபுகள், வழக்கங்களின்படி (Convention and Practices) அங்கு அரசியலமைப்பு முறைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்புச் சலுகைகளும், இப்படியான தனி அங்கீகாரம் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 - 1ன் கீழ், விதி 35ஏ வருகிறது. இது காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தரமான குடிமக்கள் யார் என்பதையும், அவர்களுக்கான பிரத்தியேக சலுகைகளையும் வரையறுக்கிறது.

இந்தப் பிரிவு முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியில், 1954ஆம் ஆண்டு மே 15இல், அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தின் ஆணைப்படி, 370ன் கீழ் சேர்க்கப்பட்டது. 35ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்.

* காஷ்மீர் பகுதியை 1947இல் இந்தியாவுடன் இணைப்பதற்காக, அப்போதைய மன்னர் ராஜா ஹரி சிங் வேண்டுகோளின்படி, அரசியல் சாசன சிறப்பு பிரிவு 370 ஏற்படுத்தப்பட்டது.

* காஷ்மீரில் வசிக்கும் நிரந்தர குடியுரிமையினர் தவிர நாட்டின் பிற மாநிலத்தவர் அங்கு நிலம் மற்றும் சொத்துகள் வாங்க முடியாது.

* காஷ்மீர் பெண், மற்ற மாநிலத்தவரை திருமணம் செய்தால், அந்தப் பெண்ணின் காஷ்மீர் குடியுரிமை ரத்தாகிவிடும். கடந்த 2002ஆம் ஆண்டில் காஷ்மீர் உயர்நீதிமன்றம், பெண்களுக்கு குடியுரிமை சலுகை உண்டு எனத் தீர்ப்பளித்தது. ஆனால், அவர்களது குழந்தைகளுக்கு, குடியுரிமை சலுகை கிடையாது.

* காஷ்மீர் மாநிலத்தை சாராதவர்கள், அம்மாநில அரசு வேலையில் இடம்பெற முடியாது.

* காஷ்மீர் மாநில அரசு கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களில் மற்ற மாநிலத்தை சார்ந்தவர்கள் சேர முடியாது.

* காஷ்மீர் அரசு வழங்கும் உதவித் தொகை, சமூக நலத்திட்டங்கள் என எந்த நிதியுதவியையும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே பெறமுடியும்.

* மாநில சட்டசபை இயற்றும் எந்தச் சட்டமும், அரசியல் சாசனத்துக்கோ, பிற சட்டத்துக்கோ முரணாக இருக்கிறது என, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது.

* ஒட்டுமொத்த இந்திய அரசியல் சாசனமும், இங்கு செல்லுபடியாகாது. ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு போன்ற சட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.

* புதிதாக சட்டம் ஏதும் நிறைவேற்ற வேண்டுமென்றால், மாநில அரசின் ஒப்புதல் அவசியம்.

* இந்தப் பிரிவை திருத்த வேண்டுமானால், அரசியல் நிர்ணய சபையைக் கூட்ட வேண்டும்.

* மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல்படியே, எந்த சட்டமும் இந்த மாநிலத்தில் செல்லுபடியாகும்.

* ஜம்மு – காஷ்மீருக்கு தனியாக அரசியல் சாசனமும் உண்டு.


மேலும் படிக்க


ரஜினிக்காக வருந்திய கமல்ஹாசன்


வீட்டுக் காவலில் தலைவர்கள்: காஷ்மீரில் தொடரும் பதற்றம்!


பழிவாங்கிய ராமானுஜம், ராஜேந்திரன்: ஜாங்கிட்


தினகரனின் புது எச்சரிக்கை!


திங்கள், 5 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon