மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஆக 2019

திரை தரிசனம் 12: லச்சோ ட்ரோம்

திரை தரிசனம் 12: லச்சோ ட்ரோம்

ஒரு போதும் முடிவுபெறாத நடனம்!

முகேஷ் சுப்ரமணியம்

ஆயிரம் வருடங்களுக்கும் முன், குறிப்பிடமுடியாத காரணங்களால் வடமேற்கு இந்தியாவிலிருந்து ஸ்பெயினுக்கு இடம்பெயர்ந்த ‘ஜிப்ஸிக்கள்’ என அழைக்கப்படும் ரொமேனியா மக்களின் பயண வரலாற்றை அடிப்படையாக வைத்து, சமகாலத்தில் அந்த ஜிப்ஸிக்களின் வாழ்க்கை நிலையை அதே பயணத்தின் வழி கூறும் படமே லச்சோ ட்ரோம் (Latcho Drom). லச்சோ ட்ரோம் என்றால் “பாதுகாப்பான பயணம்”.

ராஜஸ்தானிலுள்ள தார் பாலைவனத்தில் கல்பெலியா மக்கள் ஒரு திருமணக் கொண்டாட்டத்துக்காகக் கூடுகிறார்கள். தன் குடும்பத்துடன் பாலையைக் கடக்கும் சிறுவன் அவர்களைக் களைப்படையாமல் வைக்க, பாடலொன்றைப் பாடிய படியே வருகிறான். வண்டி கட்டிக்கொண்டு வரும் அந்தக் குடும்பத்தின் காட்சியுடன் தொடங்குகிறது ‘பாதுகாப்பான பயணம்’.

இந்தப் பாலைவனத்தில் என் பாரவண்டி

மிக மெதுவாகவே நகர்கிறது.

என் குடும்பத்தை நோக்கி

அது என்னை இழுத்துப் போகிறது.

ஜோதிடரிடம் கேளுங்கள்,

நான் ஏன் இவ்வாறு விதிக்கப்பட்டேன் என்று..

ஜோதிடரிடம் கேளுங்கள்,

நான் ஏன் இவ்வளவு தொலைவில் திருமணம் செய்தேன் என்று..

என் ஜாதகத்தை எரிக்க வேண்டும்

நான் நேசித்தவர்களிடமிருந்து

என்னை நாடு கடத்தியதற்காக!

பாடலைப் படியே நடந்து வந்துகொண்டிருக்கிறார்கள். கழுதை மேல் உறங்கிக்கொண்டிருக்கும் பிள்ளைக்கு நா வறண்டதால் பானையில் கடைசியாக மிச்சமிருக்கும் ஒரு சொட்டுத் தண்ணீரை அதன் தாய் ஊட்டுகிறாள். அடுத்த காட்சியில் கிணற்றிலிருந்து நீரை இறைக்கிறார்கள். அவர்கள் வந்து சேர வேண்டிய ஊரை அடைந்துவிட்டார்கள்.

தனித்துவமான கலாச்சாரம் கொண்ட கல்பெலியா குழுவின் திருமணத்துக்கான முன் தயாரிப்புகள் காட்டப்படுகிறது. மாட்டின் கொம்புக்கு வர்ணம் தீட்டுவது, உலோகங்களைத் தயார் செய்வது, இளைப்பாறலுக்கு நடுவிலும் பாடுவது, வாய்வழியாக இளம் தலைமுறையினருக்குக் கடத்தப்படும் பாடல்கள், சடங்குகள், பிரார்த்தனைகள், திருமணத்தை ஒட்டிய அற்புதமான நடனமும் இசையுமென நாமும் அந்தப் பாலைவனத் திருமணத்தில் கலந்துகொண்ட விருந்தினர்களாக மாறுகிறோம். திருமணம் முடிந்ததும் மீண்டும் பாடலைப் பாடியபடியே வந்த சுவடே தெரியாமல் தங்கள் பயணத்தை மீண்டும் தொடருகிறார்கள் ஜிப்ஸிக்கள். தார் சாலையில் வெற்றுக் கால்களில் நடந்து செல்லும் பெண்ணின் கால்களிலிருந்து அண்ணனைத் தேடி ஓடிவரும் எகிப்திய சிறுமி தோன்றும் அடுத்த பிரதேசத்துக்குள் நுழைகிறோம்.

இவ்வாறு ராஜஸ்தானில் தொடங்கி எகிப்து, துருக்கி, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, பிரான்ஸ் வழியாகப் பயணிக்கும் இந்த இசைப்பயணம் ஸ்பெயினில் முடிவடைகிறது. பயணத்தின் நடுவே நிறுத்தம் போல அவர்களது வாழ்வின் ஒரு துண்டை நாம் ஒவ்வொரு நாட்டிலும் இசை இடைவெளியில் காண்கிறோம். இசை அவர்களது கலாச்சாரத்தின் தொப்புள்கொடி ரேகையை அடைகாத்து இத்தனை காலத்தையும் கடந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

ரொமேனியர்களின் உலகளாவிய சின்னம் போல சக்கரம், தீ, பயணப்படுதல், ஒருபோதும் முடிவடையாத அவர்களது இசையும் நடனமும், அத்துடன் உருவாகும் அரசியல், கலாச்சார மற்றும் சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றின் உருவங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறது. இதையொட்டி தேசம், மேலாதிக்கம், எல்லைகள், அன்றாடம் அவர்கள் சந்திக்கும் பாகுபாடு ஆகியவற்றின் கருத்துகளை மறைமுகமாகவும் வெளிப்படையான விமர்சனமாகவும் லச்சோ ட்ரோம் வைக்கிறது.

கற்பித்தல் - கற்றல் செயல்முறை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. ஜிப்ஸிகள் வாய்வழியாகக் கலாச்சார மரபுகளை இளைய தலைமுறையினருக்குத் தொடர்ந்து கடத்துகின்றனர். இந்தப் பயணத்தின் வெவ்வேறு அத்தியாயங்களுக்கும் இடையிலான; மாற்றம் உடைக்கப்படாத அந்த கவிதை தொடர்ச்சியை ஜிப்ஸிகள் தக்கவைத்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். இசை - நடனம் வழியாக, இளைஞர்களும் முதியவர்களும் குடும்பம், பயணம், அன்பு, தனித்தன்மை, இன்பம், துன்பம் ஆகியவற்றின் கலாச்சார விழுமியங்களைக் கொண்டாடுகிறார்கள், வடிவமைக்கிறார்கள், கற்பிக்கிறார்கள்.

இஸ்தான்புல் நகரத்தில் துர்கிஷ் ஜிப்ஸி சிறுவன் ஒருவன் பூக்களை விற்று வரும் காசில் டெலஸ்கோப்பில் நிலவைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். சேற்றில் தெரியும் பகல் நிலவை ரொமேனியா தேசத்துச் சிறுவன் ஒருவன் மிதித்தபடி தனது கிராமத்துக்குள் நுழைகிறான். இப்படியாக ஒவ்வொரு ‘சீக்யூவன்ஸும்’ கவித்துவமான காட்சிகள் மூலம் இணைக்கப்பட்டு அடுத்தடுத்த நிலப்பரப்பில் விரிகின்றன.

பனி சூழ்ந்த ஸ்லோவோக்கியாவில், மூதாட்டி ஒருத்தி நடுங்கியபடி ஹிட்லரின் வதை முகாமில் நிகழ்ந்த கொடுமைகளைப் பாடலாகப் பாடிக் கொண்டிருக்கிறாள். அவளது கையில் ‘Z-9267' என பச்சைக் குத்தப்பட்டிருக்கிறது. இந்த முகாமில் தான் யூதர்களை விட கம்யூனிஸ்டுகள், ருஷ்யப் போர்க் கைதிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், சிலாவ் இனத்தவர்கள், நாடோடிகள் என ஏராளமான எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

ஸ்பெயினில் கிட்டானோஸ் என அழைக்கப்படும் ஜிப்ஸிகள் நிகழ்த்தும் அற்புதமான ஃபிளெமெங்கோ நடனத்துக்குக் கடைசி பயணமாக வருகிறோம். ஆட்கள் வெளியேறிய குடியிருப்புகளை அவர்கள் தங்கள் வீடுகளாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்க, அரசாங்கம் அவர்களை வெளியேற்றுகிறது. படத்தில் வரும் அந்த நகரமே ஆள் அரவமற்று பொலிவிழந்த நகரமாகக் காட்சியளிக்கிறது. வாயில் சுவர்கள், ஜன்னல்கள் என அனைத்தும் இனி யாரும் உள்நுழையாதபடி செங்கற்களால் மூடப்படுகின்றன. கட்டடங்கள் சவப்பெட்டி போல காட்சியளிக்கின்றன. கூட்டமாய் கிட்டானோஸ் வெளியேறுகிறார்கள். லா கெய்டா என்ற பிரபல கிட்டானோ பாடகியும் தன் மகனுடன் வெளியேறுகிறாள்.

நகரத்துக்கு வெளியே பல நூற்றாண்டு துன்புறுத்தல்களைப் பற்றி கோபம் கலந்த துக்கத்துடன் பாடுகிறாள் லா கெய்டா, "உங்கள் வாய் ஏன் என் மீது உமிழ்கிறது?" என்ற அவளுடைய கேள்வி நகரம் முழுவதும் எதிரொலிக்கிறது.

1993ஆம் ஆண்டு டோனி கட்லிஃப் (Tony Gatlif) இயக்கத்தில் லச்சோ ட்ரோம் (Latcho Drom) வெளியானது. இவரது ஜிப்ஸி வரிசையின் இரண்டாவது படமாக இது வெளியானது. 1948ஆம் ஆண்டு, செப்டம்பர் 10 அன்று அல்ஜீரியாவில் பிறந்தார். அல்ஜீரிய சுதந்திரப் போரைத் தொடர்ந்து 1960ஆம் ஆண்டு கட்லிஃப் பிரான்சில் குடியேறினார். திரைப்படத் துறையில் நுழைவதற்குப் பல ஆண்டுகளாகப் போராடி வந்த இவர், அல்ஜீரியாவை மையப்படுத்தி தன் முதல் இரண்டு படங்களை எடுத்தார்.

1981ஆம் ஆண்டு வெளியான கோரே, கிடானோ திரைப்படத்திலிருந்து, கட்லிஃபின் படைப்புகள் ஐரோப்பாவின் ரொமேனியா மக்கள் மீது கவனம் செலுத்தத் தொடங்கின. “நான் எனது அசைவின் மூலமும் பயணத்தின் மூலமும் என்னை வெளிப்படுத்துகிறேன். நான் ஒரு பயணத் திரைப்பட இயக்குநர். ஒரு நாடோடியாக இருப்பதையே நான் விரும்புகிறேன்” எனக் கூறும் இவர், இதுவரை இருபது படங்களை இயக்கியிருக்கிறார். லச்சோ ட்ரோம் திரைப்படம், இவரது படைப்புகள் மீது சர்வதேச கவனத்தை விழச் செய்தது.

இப்படத்தில் லா கெய்டா நகரத்தை நோக்கிப் பாடும் ஒரு முக்கியமான காட்சி

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து ரொமேனியர்கள் மேற்கு நோக்கி குடியேறிய பாதையை லச்சோ ட்ரோம் படமும் பின்பற்றுகிறது. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பா முழுவதும் குடியேறினர். இன்று ஜிப்ஸிகள் கிழக்கு ஐரோப்பாவில், குறிப்பாக ருமேனியாவில் அதிகளவில் வாழ்கிறார்கள். இரண்டு வருட தயாரிப்பிலிருந்த லச்சோ ட்ரோம் படத்தில் நிஜ ஜிப்ஸிக்கள் மட்டுமே நடித்துள்ளனர். இன்றும் அவர்களது இசையும் நடனமும் அனைத்து அரசியல் இறுக்கங்களுக்கு மத்தியிலும் முடிவுபெறாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

*

தி டின் ட்ரம்

லோலா மவுன்டஸ்

மார்கெட்டா லாசரோவா

பாரிஸ், டெக்சாஸ்

பிளைண்ட் பீஸ்ட்

கம் அண்ட் சீ

டாக் டே ஆஃப்டர்னூன்

24 ஃப்ரேம்ஸ்

நைஃப் இன் தி கிளியர் வாட்டர்

அவ் ஹசர்ட் பேல்தஸார்

துவிதா

பேலட் ஆப் நரயாமா


மேலும் படிக்க


சேரனை மீட்க கிளம்பும் இயக்குநர்கள்: மன்னிப்பு கேட்ட சரவணன்


பழிவாங்கிய ராமானுஜம், ராஜேந்திரன்: ஜாங்கிட்


வெள்ளைக்கொடியுடன் வந்து பிணங்களை எடுத்துச்செல்லுங்கள்: இந்தியா!


குடும்பங்களைக் குறிவைக்கும் சசிகுமார்


தினகரனின் புது எச்சரிக்கை!


கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

திங்கள் 5 ஆக 2019