மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

மொழி நேர்த்தியின் முக்கியக் கூறுகள்

மொழி நேர்த்தியின் முக்கியக் கூறுகள்

ஒரு சொல் கேளீரோ! 39 - அரவிந்தன்

அன்றாடம் நாம் பயன்படுத்தும் மொழியை எப்படிக் கூடியவரையிலும் பிழைகள் இல்லாமல் பயன்படுத்துவது என்பதைப் பற்றிக் கடந்த மூன்று மாதங்களாக இந்தப் பத்தியில் பார்த்து வந்தோம். குறிப்பாக எழுத்து மொழிக்கான முறைகளைப் பல்வேறு கோணங்களில் அணுகினோம். ஒரு சில கூறுகள் மட்டுமே இந்தப் பத்தியில் அலசப்பட்டன. மொழியின் எல்லாக் கூறுகளையும் அலசுதல் சாத்தியமல்ல. இந்தப் பத்தியில் அலசப்பட்ட கூறுகளில் முக்கியமானவை இங்கே நினைவுகூரப்படுகின்றன.

இடைவெளிகள்

சொற்களைச் சேர்த்து எழுதுவது, பிரித்து எழுதுவதில் கவனம் தேவை. பல சொற்கள் தமக்கு முன்னால் உள்ள சொற்களுடன் இணைந்து மாறுபட்ட பொருளைத் தருகின்றன. இதுபோன்ற இடங்களில் இச்சொற்களை முன்னால் உள்ள சொற்களுடன் சேர்த்து எழுத வேண்டும்.

எடுத்துக்காட்டுகள்:

தான் என்பது நான் என்னும் பொருளைத் தருகிறது. ஆனால், அவ்வளவுதான், அதுதான் என்னும் இடங்களில் மாறுபட்ட பொருளைத் தருகிறது.

விடு என்றால் விடுதல். ஆனால், சொல்லிவிடு, தந்துவிடு என்னும்போது விடு என்பதன் பொருள் வேறு.

கொண்டு என்பது ஏதேனும் ஒன்றை ஒருவர் தம் வசம் வைத்திருத்தல். ஆனால், பார்த்துக்கொண்டு, கேட்டுக்கொண்டு போன்ற இடங்களில் இது உருமாறுகிறது.

வா, வந்தான், வருகிறாள் என்பவற்றின் பொருள் நமக்குத் தெரியும். வேலை செய்துவந்தான், வசித்துவந்தாள் என்றெல்லாம் சொல்லும்போது வா என்னும் சொல் உருமாறி வேறு பொருள் தருகிறது.

இதுபோல உருமாறும் இடங்களில் இச்சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.

ஒருமை – பன்மை

ஒருமை – பன்மை மயக்கம் தவிர்த்து எழுத வேண்டும் (பொருள்கள் வழங்கப்படுகிறது / வழங்கப்படுகின்றன).

ஒவ்வொரு என்று வந்தால் அதன் பிறகு ஒருமைதான் வர வேண்டும் (ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு மாநிலத்திலும்...)

எல்லா என்று வந்தால் பன்மை வர வேண்டும் (எல்லா உறுப்பினர்களும், எல்லா வீடுகளுக்கும்...)

எந்த என்று வந்தால் அதன் பிறகு ஒருமை வர வேண்டும் (எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்)

நிறுத்தக்குறிகள்

நிறுத்தக்குறிகளைத் தேவையான இடத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக காற்புள்ளியை (,) தேவையற்ற இடங்களில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

மற்றும், ஒரு...

And என்னும் சொல் ஆங்கிலத்தில் இயல்பாகப் புழங்குவதுபோலத் தமிழில் மற்றும் என்னும் சொல் புழங்காது. You and I, boys and girls, cricket, football and hocky எனப் பட்டியல் வரும் இடங்களில் எல்லாம் ஆங்கிலத்தில் and வரும். ஆனால், தமிழில் மற்றும் என்னும் சொல் இல்லாமலேயே பட்டியலிடும் வழக்கம் தமிழில் உண்டு. எடுத்துக்காட்டுகள்:

மா, பலா, வாழை

அவளும் நானும்

காடும் மலையும்

நிலம், நீர், வானம்

உனக்கும் எனக்கும்...

அதுபோலவே ஒரு என்னும் சொல்லையும் கூடியவரை தவிர்த்தல் நலம்.

எடுத்துக்காட்டுகள்:

அவள் ஒரு அழகான பெண் - அவள் அழகானவள்

அவர் ஒரு வயதான மனிதர் - அவர் முதியவர்

சுருக்கெழுத்துகள்

நன்கு பழக்கமான சுருக்கெழுத்துகளைக் கூடியவரை புள்ளிகள் இல்லாமல் எழுதலாம் (திமுக, அதிமுக, பாஜக, எம்ஜிஆர்...).

பழக்கமாகாத சுருக்கக்கெழுத்துகளைப் புள்ளிகள் இட்டு எழுதலாம். அப்படி எழுதுகையில் கடைசி எழுத்துக்குப் பின்னாலும் புள்ளி வைக்க வேண்டும் (எஸ்.டி.டி., ஐ.டி.பி.எல்., வெ.சா.வுக்கு, கி.ரா.வுக்கு...).

புள்ளிவைத்த சுருக்கெழுத்துகள் பட்டியலாகத் தரப்படும்போது கடைசிச் சுருக்கெழுத்துக்குப் பின் புள்ளி வைத்த பிறகு காற்புள்ளியைப் பயன்படுத்த வேண்டும்.

சுப.வீ., வெ.சா., மா.சு., பா.வே. ...

கேள்விக்குறிகள்

கேள்விக்குறிகளும் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. கேள்விக்குறி வந்ததுமே வாக்கியம் முடிந்துவிடும்.

காலையா? மாலையா? – தவறு.

காலையா, மாலையா? – சரி.

“உனக்கு என்ன வேண்டும்?” என்று அவர் கேட்டார் – இது நேர் கூற்று.

இதை அயல் கூற்றில் எழுதுவதாக இருந்தால்,

உனக்கு என்ன வேண்டும் என்று அவர் கேட்டார்

- எனக் கேள்விக்குறியே இல்லாமல் எழுத வேண்டும்.

ஒற்றெழுத்து

ஒற்றெழுத்து என்பது சிக்கலானது. ஆழமான இலக்கண அறிவு, பிழையற்ற உரைநடைகளுடன் கொண்ட அறிமுகம் ஆகியவற்றால் ஒற்றெழுத்துச் சிக்கலைப் பெருமளவில் போக்கலாம். ஐயம் ஏற்பட்டால் விவரம் அறிந்தவர்களைக் கேட்கலாம். முறையாக எழுதுபவர்களின் பதிவுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கலாம். சொல்லிப்பார்த்து முடிவுசெய்யலாம்.

கனமான சொற்கள்

கனமான சொற்கள் தேவையில்லாமல் பயன்படுத்தப்படும்போது தம் கனத்தை, செறிவை, வலிமையை இழக்கின்றன. வாழ்வியல், கருத்தியல், வழமை, பின்நவீனத்துவம் ஆகிய சொற்களைப் பொருளறிந்து தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

பாலினம், சாதி, தொழில், உறவுமுறை...

Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) ஆகிய சொற்களை

தன்பாலின ஈர்ப்பாளர், இருபாலின ஈர்ப்பாளர், மாற்றுப் பாலினத்தவர் எனச் சொல்லலாம்.

மாற்றுப் பாலினத்தவரைக் குறிப்பாகச் சொல்லும்போது திருநங்கை, திருநம்பி ஆகிய சொற்களையே பயன்படுத்த வேண்டும். பொதுவாகக் கூறும்போது திருநர் என்று எழுதலாம்.

பெட்டை, பேடி, கற்பழிப்பு ஆகிய சொற்கள் தவிர்க்கப்பட வேண்டியவை.

விபச்சாரம், விபச்சாரி ஆகியவற்றைத் தவிர்த்துப் பாலியல் தொழிலாளி என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

சாதி அடையாளம், தொழில் சார்ந்த இழிவான பொருள் ஆகியவை கொண்ட சொற்களைத் தவிர்க்க வேண்டும்.

கள்ளக் காதல், கள்ளக் காதலி, கள்ளக் காதல் ஆகிய சொற்களைத் தவிர்த்து, மண உறவுக்கு வெளியேயான உறவு / மண உறவைத் தாண்டிய காதல் எனக் குறிப்பிடலாம்.

ஹரிஜன் / அரிஜன் என்னும் சொல்லுக்கு மாற்றாக, தலித் என்னும் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.

இளைய சகோதரன், மூத்த சகோதரி ஆகியவற்ரைத் தவிர்த்து, அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, தமக்கை என்று எழுத வேண்டும்.

உறவு முறைகளைக் குறிக்கையில் சாதி வழக்குகளைத் தவிர்த்துவிட வேண்டும். (அம்மாஞ்சி, ஷட்டகர், அய்யா).

பிறமொழிச் சொற்கள்

பிறமொழிச் சொற்களை எழுதும்போது மூல மொழியில் அவற்றின் சரியான உச்சரிப்பை அறிந்து, தமிழ் ஒலிப்பண்புக்கும் உரைநடை மரபுக்கும் ஏற்ப அதைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும் (ராட்சசன், கங்கை, கேரளம், இங்கிலாந்து)

தமிழ் ஊர்களின் பெயர்களை ஆங்கில எழுத்து வடிவத்தை அடியொற்றி எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் (Triplicane - ட்ரிப்ளிகேன் - திருவல்லிக்கேணி).

திரைப்படங்கள், மனிதர்கள், அமைப்புகள் ஆகிய பெயர்களை எழுதும்போது, இவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் எப்படி எழுதுகிறார்களோ அப்படியே எழுத வேண்டும். அங்கே நமது இலக்கண அறிவைக் காட்டக் கூடாது.

துறை சார்ந்த சொற்கள்

துறை சார்ந்த சொற்களைக் கூடியவரை தமிழில் எழுத வேண்டும்.

வணிக அடையாளப் பெயர்களை (Brand Names) மொழிபெயர்க்க வேண்டாம்.

நிலைபெற்ற சொற்களை மாற்ற வேண்டாம்.

பொருள்கள் / கருவிகளின் பெயர்கள் (Mouse, Launch Pad…), செயல்பாடுகள் (Welding, processing, tuning…) ஆகியவற்றை அவற்றின் சரியான பொருள் தமிழில் வரும்வண்ணம் மொழிபெயர்க்க வேண்டும்.

எளிமை என்னும் சிறப்பு

நீளமான வாக்கியங்கள், கூட்டு வாக்கியங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்

கூடியவரை சிறிய பத்திகளை அமைத்தல் நல்லது.

மக்களிடையே புழங்கும் சொற்களையே கூடியவரையிலும் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பிட்ட குழு / பிரிவினர் மத்தியில் மட்டும் புழங்கும் சொற்களைக் கூடியவரையில் தவிர்க்க வேண்டும்.

கனமான சொற்களைத் தேவையற்ற இடங்களில் பயன்படுத்த வேண்டாம்.

கூறியது கூறலலைத் தவிர்க்க வேண்டும்

சொற்சிக்கனம் தேவை.

பொதுவாகத் தவறாக எழுதப்படும் சொற்களையும் குழப்பம் தரும் சொற்களையும் தெளிவுபடுத்திக்கொள்வதற்கான பட்டியலைப் பத்தியின் நிறைவுப் பகுதியான அடுத்த பகுதியில் பார்ப்போம்.

ஒரு சொல் கேளீரோ! – 38


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திமுக இல்லாமல் 100 எம்.எல்.ஏ.க்கள் - அழகிரி பேச்சு!


முடிவுக்கு வந்த நேர்கொண்ட பார்வை பிசினஸ்!


தற்கொலைக் கடிதமும் வருமான வரித் துறை விளக்கமும்!


முதல்வரைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி


சித்தார்த்தா தற்கொலை: ரெய்டு பின்னணி!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


வெள்ளி, 2 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon