மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

அழிவின் விளிம்பில் ஆர்டிஐ: சோனியா விமர்சனம்!

அழிவின் விளிம்பில் ஆர்டிஐ: சோனியா விமர்சனம்!

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2005ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் திருத்தம் செய்யும் விதத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதா மூன்று நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் தகவல் ஆணையர்களின் சம்பளம், பதவிக்காலத்தில் மாறுதல் கொண்டுவருவது உள்ளிட்டவைகளுக்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.

ஆனால், இந்த மசோதாவானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் விதத்தில் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின. மக்களவையில் நேற்று விவாதத்திற்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில் 218 வாக்குகள் மசோதாவுக்கு ஆதரவாகவும் 78 வாக்குகள் எதிராகவும் விழுந்ததாக தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, மசோதா நிறைவேறியதாக அறிவித்தார்.

மசோதா மீதான விவாதத்தில் பேசிய மக்களவை திமுக கொறடா ஆ.ராசா, “இந்திய அரசு மக்களிடம் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அரசு வெளிப்படைத்தன்மையாக இயங்க வேண்டும், முன்னேற்றத்தை நோக்கி நகர வேண்டும், தான் தேர்ந்தெடுத்த அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் இருப்பதால் இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுமேயானால் இன்று ஜனநாயகத்தின் இருண்ட நாள். ஜனநாயகம் என்பது தேர்தலோடு முடிந்துவிடுவதில்லை. அது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு” என்று விமர்சித்தார்.

இதுதொடர்பாக இன்று (ஜூலை 23) அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, “தகவல் அறியும் உரிமைச் சட்ட மசோதா கடந்த 2005ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அது தற்போது அழிவின் விளிம்பில் நிற்கிறது. கடந்த 10 வருடங்களில் 60 லட்சம் பேர் ஆர்டிஐயை பயன்படுத்தி பயனடைந்துள்ளனர். அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத் தன்மை, நிர்வாகத்தில் பொறுப்புடமை என புதிய கலாச்சாரத்தை அது கொண்டுவந்தது. இதன் விளைவாக நமது ஜனநாயகத்தின் அடித்தளம் என்பது அளவிட முடியாத அளவு பலப்படுத்தப்பட்டது. ஆர்டிஐ செயற்பாட்டாளர்கள் மூலமாக சமூகத்தின் பின் தங்கியவர்கள் மிகவும் பயன்பெற்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஆனால், தற்போதைய மத்திய அரசு ஆர்டிஐ சட்டத்தை தொல்லையாக பார்க்கிறது. அதனால்தான் தேர்தல் ஆணையம், மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையத்துக்கு இணையான அதிகாரங்களுடன் செயல்பட்டு வரும் மத்திய தகவல் ஆணையத்தின் அந்தஸ்தையும் சுதந்திரத்தையும் சீர்குலைக்க முயற்சி செய்கிறது” என்று குற்றம்சாட்டியவர், நாடாளுமன்றத்தில் தனக்கிருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்தி தனது நோக்கத்தை அடைய முயற்சி செய்கிறது. ஆனால், இந்த செயல்பாடுகளானது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குமுள்ள அதிகாரத்தைக் குறைப்பதே ஆகும் என்றும் விமர்சித்துள்ளார்.


மேலும் படிக்க


மின்னம்பலம் செய்தி: தங்கத்துக்கு போன் போட்ட ஸ்டாலின்


தளபதி உதயநிதி: தலைமை உத்தரவு!


டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு எதிராக அமித் ஷாவிடம் பன்னீர் புகார்!


ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


செவ்வாய், 23 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon