மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு எதிராக அமித் ஷாவிடம் பன்னீர் புகார்!

டிஜிட்டல் திண்ணை:  எடப்பாடிக்கு எதிராக அமித் ஷாவிடம் பன்னீர் புகார்!

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. லொக்கேஷன் டெல்லி காட்டியது.

“சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்த அடுத்த நாளான நேற்று (ஜூலை 21) துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவசர அவசரமாக டெல்லி பயணம் மேற்கோண்டார். வேலூர் தேர்தல் பணி கண் முன்னே இருக்க, துணை முதல்வர் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டது கட்சியின் நிர்வாகிகளுக்கே தாமதமாகத்தான் தெரிந்தது. தமிழக அரசு சார்பிலும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில் பன்னீரின் பயணம் முழுக்க முழுக்க பர்சனல்தான் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். தனது முதுகுவலி தொடர்பான மருத்துவ சிகிச்சையோடு, தனது மகன் ஓ.பி. ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி பெறுவதும்தான் இந்த பயணத்தின் நோக்கம் என்கிறார்கள் பன்னீர் வட்டாரத்தில்.

நேற்று மாலை டெல்லி சென்ற ஓ.பன்னீர் இன்று காலை உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். சென்னையில் இருந்து தனக்கு நெருக்கமான பாஜக பிரமுகர்களை கடந்த சில நாட்களாக பலமுறைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் பன்னீர். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்தான் சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்து டெல்லிக்கே கிளம்பிவிட்டார். அமித் ஷாவின் கைகளைப் பிடித்துக் கொண்ட ஓ.பன்னீர், ‘இப்பவும் சொல்றேன். நீங்களும் மோடிஜியும் கொடுத்த உத்தரவாதத்தை நம்பிதான் நான் அதிமுகவில் மறுபடி போய் சேர்ந்தேன். ஆனால், எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் எந்த வித மரியாதையும் இல்லை. என் மகன் ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சர் ஆக்க என் கட்சியில் இருந்தே தடைகள் வந்தன. . எடப்பாடி என்னை டோட்டலாக அவாய்டு பண்ணுகிறார். எனக்குக் கிடைத்த தகவலின்படி சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்துவிட்டால் எடப்பாடி, சசிகலாவோடு சமரசமாகிவிடுவார் என்று தெரிகிறது. இதற்கு மேல் நான் என்ன செய்யட்டும் என்று சொல்லுங்கள். எப்படியாவது என் மகனை மத்திய அமைச்சர் ஆக்குங்கள். அதுதான் எனக்கு அரசியலில் பிடிமானத்துக்கு வழியாக இருக்கும்’ என்று அமித் ஷாவிடம் கொட்டியிருக்கிறார் பன்னீர்செல்வம். அமித் ஷாவும் விரைவில் நல்ல முடிவெடுப்பதாக கூறியிருக்கிறார்” என்று முடிந்தது வாட்ஸ் அப் மெசேஜ்.

அதை ஷேர் செய்துகொண்ட ஃபேஸ்புக், “துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பார்த்ததை விட, பாஜகவின் செயல் தலைவராக அண்மையில் பொறுப்பேற்ற ஜே.பி. நட்டாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுதான் மீண்டும் அரசியல் அரங்கில் கவனம் பெற்றிருக்கிறது. சில மாதங்கள் முன்பு பன்னீர் பாஜகவில் சேரப் போகிறார் என்று வெளியான தகவல்கள் ஒரு கட்டத்தில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீரை மறுப்பு அறிக்கை வெளியிட வைக்கும் அளவுக்குப் போனது. இந்த நிலையில் இப்போது நட்டாவை பன்னீர் சந்தித்ததற்கும் வேறொரு காரணம் சொல்கிறார்கள்.

பாஜக தற்போது மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கிறது. மேற்கு வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு வந்த முகுல் ராய் மூலமாக பல மாற்றுக் கட்சித் தலைவர் பாஜகவுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். மேற்கு வங்காளத்துக்கு முகுல் ராய் போல தமிழ்நாட்டில் ஓ.பன்னீரைப் பயன்படுத்தலாமா என்ற சிந்தனை அமித் ஷாவுக்கு இருப்பதாகவும் அதனால்தான் கட்சியின் செயல் தலைவர் நட்டா தன்னுடன் இருக்கும்போது பன்னீரை வரவழைத்து சந்தித்ததாகவும் டெல்லி சோர்ஸுகள் சொல்கின்றன. பன்னீருக்கும் பாஜகவுக்கும் முடிச்சு போடும் முகாந்திரங்கள் மீண்டும் உருவாகிவிட்டன” என்ற தகவலை போஸ்ட் போட்டுவிட்டு ஆஃப் லைன் போனது ஃபேஸ்புக்.


மேலும் படிக்க


தளபதி உதயநிதி: தலைமை உத்தரவு!


பதவியிலிருந்து நீக்குவேன்: நிர்வாகிகளை எச்சரித்த தினகரன்


ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!


அதிமுகவுக்கு ஸ்டாலின் திடீர் அழைப்பு!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


திங்கள், 22 ஜூலை 2019

அடுத்ததுchevronRight icon