மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

காதலெனும் கைகூடாத பரிசோதனைக் களம்!

காதலெனும் கைகூடாத பரிசோதனைக் களம்!

திரை தரிசனம் 11: லோலா மவுன்டஸ்

முகேஷ் சுப்ரமணியம்

உண்மையையும் புனைவையும் பிரிக்க முடியாத அளவுக்குப் பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்த ஒரு நடனக்கலைஞர், தன் வாழ்வின் உச்சத்தில் பேரரசியாகவும் சரிவில் சர்க்கஸ் விலங்காகவும் மாறிய உண்மைக் கதை.

19ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில், அமெரிக்காவிலுள்ள நியூ ஓர்லியன்ஸ் நகரில் சர்க்கஸ் நிகழ்ச்சியொன்று நடக்கிறது. ரிங் மாஸ்டர் சர்க்கஸை இவ்வாறு தொடங்குகிறார், “சுவாரஸ்யம், உணர்ச்சிகள், ஆக்‌ஷன், வரலாறு போன்றவை நிறைந்த இந்த நூற்றாண்டின் மிகவும் பரபரப்பான ஒரு பகுதியை பார்க்கப் போகிறோம். இங்கிருக்கும் மிருகங்களை விட நூறு மடங்கு ஆபத்தான ஓர் உயிரினம், தேவதையின் கண்கள் கொண்ட ரத்தவெறி பிடித்த அரக்கி இதோ உங்கள் பார்வைக்கு. லோலா மவுன்டஸ்!”

தங்க நிறத்தில் ஆடையணிந்த லோலா மவுன்டஸ் எனும் நடிகை பார்வையாளர்கள் முன் சர்க்கஸ் வீரர்களால் தூக்கி வரப்படுகிறாள். மேலும், அவள் காதலர்களின் எண்ணிக்கையில் உலக சாதனை படைத்துள்ளதாகவும் வர்ணிக்கப்படுகிறாள். லோலா சர்க்கஸ் அரங்கின் மையத்தில் காட்சிப்படுத்தப்படுகிறாள். ரிங் மாஸ்டர் பார்வையாளர்களிடம் ‘உங்களுக்கு லோலாவைப் பற்றி என்ன கேள்விகள் கேட்க வேண்டுமென்றாலும் அவளிடமே கேட்கலாம், அந்தரங்கமான கேள்வியாக இருந்தாலும்’. ரிங் மாஸ்டர் சாட்டையைச் சுழற்றுகிறார். பார்வையாளர்கள் கேள்விகளால் லோலாவை கூறுபோடத் துவங்குகிறார்கள். ஒரு பெண்மணி, ‘இன்னும் இந்த வேசி கடந்த காலத்தை நினைவு வைத்திருக்கிறாளா?’ எனக் கேட்கிறாள். கேமரா லோலாவின் அருகில் செல்கிறது. லோலா மவுன்டஸின் கடந்த காலத்திற்குள் நாம் பயணிக்கத் தொடங்குகிறோம்.

ஐரிஷ் நாட்டில் பிறந்த நடனக் கலைஞரான லோலா மவுன்டஸ் சந்தித்த காதல் கதைகளாக, அதன் வழி அவர் அடைந்த வளர்ச்சியும் வீழ்ச்சியுமாக விரிகிறது ஒவ்வொரு ஃப்ளாஷ்பேக்கும். எந்த நிலையிலும் தன்னை விட்டுக்கொடுக்காத, வசீகரமான பேரழகும், அன்புக்காக ஏங்கும் தனிமையும், எளிதாக அனைவரையும் நம்பும் குணம் கொண்டவள் லோலா. அவளது முரட்டுத் தனமான செயல்களாலும், குழந்தைக்கே உரிய பிடிவாதத்தாலும், மனதில்பட்டதைப் பேசும் தொனியாலும், அகங்காரமும் அழகும் ஒருசேரக் கொண்ட லோலாவை ஆண்கள் எப்படியாவது அடையத் துடிக்கிறார்கள். முதலாவதாக இசைக்கலைஞர் பிரான்சு லிசித்துடனான காதலில் இருக்கும் லோலா மனக் கசப்பால் பிரிகிறார். பின் தன் தாயின் தோழனை மணக்கும் அவர், கணவரின் குடி போதை, திருமணத்தை மீறிய உறவினால் ஏமாற்றப்பட்டு பிரிகிறார். அதற்குப் பின் நீண்ட காதல் கதையாக வருவது, பவேரியாவின் மன்னரான முதலாம் லுட்விக்குடனான காதல்.

லோலாவின் திறமையினாலும் அழகினாலும் ஈர்க்கப்பட்ட 60 வயதைக் கடந்த மன்னன், லோலாவின் அரங்கேற்றம் முடிந்தும் அனுப்ப மறுக்கிறார். லோலாவும் அவர் மீதான அன்பில் சம்மதிக்கிறாள். அறிவிக்கப்படாத மன்னரின் அரசியாக அரண்மனையிலேயே தங்கத் தொடங்குகிறாள் லோலா. லோலாவினால் ஆட்சி நிர்வாகத்திலும் மாற்றம் ஏற்படுகிறது. அவளது மனப்போக்கில் எடுக்கும் முடிவுகளை மன்னரும் மயக்கத்தில் நிறைவேற்ற, பாதிப்படையும் குடிமக்கள் மன்னன் மீது கோபடைகிறார்கள். லோலாவை சாத்தான் என வர்ணித்து நோட்டீஸ் ஒட்டுகிறார்கள். கலகத்தின் நடுவே லோலாவை மன்னர் நாட்டை விட்டு பத்திரமாக அனுப்புகிறார். வரலாற்றில் 1848ஆம் ஆண்டு மாணவர்களினால் தொடங்கப்பட்ட அந்த மார்ச் புரட்சியில் பவாரியா மன்னனின் ஆட்சி வீழ்ச்சியடைகிறது.

தன் விருப்பப்படிதான் தன் வாழ்க்கை இயங்குகிறது என்ற அதீத கற்பனையில் வாழும் லோலா மான்டஸ், இந்த நிகழ்ச்சிக்குப் பின் காதல், வாழ்வு போன்றவற்றின் மீதான நம்பிக்கைகளை இழக்கிறார். நோய்மையும் அவளை அடைய விரும்பியது. அமெரிக்காவிலிருந்து வரும் சர்க்கஸ் மேனேஜர், அவளது தனிப்பட்ட வாழ்க்கையையே காட்சிப்படுத்தப்படுத்தலாம் என தன்னுடன் அழைக்கிறான். அவனது வசீகரமான வார்த்தைகளில் மயங்குகிறாள் லோலா. அவன் நிகழ்த்தவிருப்பது சுரண்டல் எனத் தெரிந்தும் சம்மதிக்கிறாள்.

கதை ஆரம்பிக்கும் முன் நிகழ்ந்த சர்க்கஸ், முடிவடையும் தருவாய்க்கு வருகிறது. அந்தரத்தில் நிறுத்தப்படும் லோலா கீழே வலையின்றி, தரையில் கிடக்கும் சிறிய மெத்தையில் விழுவதற்குத் தயாராகிறாள். உலகம் அறியப்படும் ஒரு நடனக் கலைஞராக வாழ்ந்த லோலா, தன் வீழ்ச்சியை தானே பார்த்தபடி குதிக்கிறார். சாம்ராஜ்ஜியத்தையே ஆட்டுவித்தவளை, வெறும் ஒரு டாலர் கொடுத்தால் லோலாவின் கைகளில் முத்தமிடலாம், தொடலாம் என அறிவிக்கிறான் ரிங் மாஸ்டர். லோலா ஒரு கூண்டுக்குள் அடைக்கப்படுகிறாள். கோமாளி வேடமணிந்த சிறுவர்கள் பார்வையாளர்களிடம் பணத்தை வசூல் செய்ய தொப்பிகளுடன் செல்கின்றனர். கேமரா பின்னோக்கி நகர, திரளான ஆண்கள் கூட்டம் லோலா அடைக்கப்பட்டுள்ள கூண்டை நோக்கி ஈ போல மொய்க்கத் தொடங்குகிறது.

ஒரு சிறந்த இயக்குநரின் அறிகுறிகளில் ஒன்று, படம் முழுவதும் ஒரு நிலையான தனிப்பட்ட தொனியைத் தக்கவைக்கும் திறனே. அத்திறன் கைவரப்பட்ட இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் மாக்ஸ் ஓபலஸ். 1955ஆம் ஆண்டில் மாக்ஸ் ஓபலஸ் (Max Ophuls) இந்தப் படத்தை வெளியிட்டபோது லோலா மான்டஸ் (Lola Montès) வணிக ரீதியாகத் தோல்வியடைந்தது. தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மனக்கசப்பால், ஆரம்பத்தில் மோசமான ‘பிரின்ட்’ வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. படம் வெளியான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓபலஸ் இறந்தார். அதன்பின் இந்தப் படம் 1968, 2008 ஆகிய இரண்டு காலத்திலும் மீட்டமைக்கப்பட்டுத் திரையிடப்பட்டது. ஓபலஸின் கடைசி படைப்பான லோலா மவுன்டஸ் அதன் பின்னர் மெல்ல கவனம் பெற்று பின்னாட்களில் முக்கியமான படைப்பாகக் கொண்டாடப்பட்டது.

லோலா மவுன்டஸ் என்று வரலாற்றில் வாழ்ந்த பெண்ணின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம் இது. ஒரு காதல் புராணத்தின் மீதான இயக்குநரின் பரிசோதனையாக முயற்சியாக இந்தப் படத்தைப் பார்க்கலாம். இது வழக்கமான வாழ்க்கை வரலாற்றுப் படமல்ல. லோலா மவுன்டஸ் மூலம் அனைத்து சுயசரிதைகளின் ஊகங்கள், வரம்புகள் பற்றிய ஆழமான தியானத்தை ஓபலஸ் நம்மிடம் பகிர்கிறார். அதன் வழியே உண்மை, அதிகாரம், பாலினம், சமரசம், சுய விற்பனைக்கு ஆளாகும் நிலை என தன் பார்வையையும் பிரதிபலிக்கிறார் .

வரலாற்றில் மோசமாக உள்ள லோலாவின் பெயருக்குப் பின்னுள்ள அறியப்படாத கதையை ஓபலஸ் சுதந்திரமாக தன் பார்வையுடன் கையாண்டிருக்கிறார். ஒரு வேசியால் சாம்ராஜ்ஜியமே அழிந்திருக்கிறது என்ற இகழ்ச்சிக்கு நடுவில், வற்புறுத்தலே இல்லாமல் அதிகாரம் எப்படி ஒரு பெண்ணை பாலியல் கைதியாக மாற்றுகிறது? என்பதையும் பேசுகிறார் இயக்குநர். அவர்கள் காதலில் விழுந்த போதும், சமூகத்தின் முதல் கல் லோலாவின் மீது தான் எறியப்படுகிறது. படம் வழியே லோலாவுக்குள்ளிருக்கும் அன்பிற்காக ஏங்கும் அந்த பலவீன மனத்தையும், அனைத்து காதல்களிலும் உண்மைத்தனையுடன் இருக்கும் அவளது தீவிர நிலையையும் நம்மிடம் கடத்தியது முக்கியமானது.

படம் முழுவதுமே அரங்கேறும் சர்க்கஸ் காட்சியில், பெரும்பாலும் பார்வையாளர்கள் தெரிவதில்லை. ஒரு எல்லைக்கு வெளியே அமர்த்தப்பட்டிருக்கும் பார்வையாளர்கள் சமூகம் போலவும், காட்சி நிகழும் வட்டமான அரங்கு நம் வாழ்க்கை போலவும், உள் நுழைந்து வெளியேறும் மாடல்கள் நம் வாழ்வில் கடந்து செல்லும் மனிதர்கள் போலவும், ரிங் மாஸ்டர் சாட்டையை சுழற்ற லோலா எதிர்வினையாற்றுவது வாழ்வின் நிர்பந்தம் போலவும் தோற்றமளிக்கின்றன. ஆரம்பக்கட்ட காட்சிகளில், லோலாவை கண்ணுக்கு புலப்படாத பார்வையாளர்கள் கேட்கும் கேள்விக்கு அவள் அச்சமுறுவது, நம் தலைக்குள் ஏற்றப்பட்டிருக்கும் கற்பனை சமூகம் நம்மை கேள்விகளால் துளைக்கும் மாயைக்கு நாம் அஞ்சி நடுங்குவதை போல் அவ்வளவு அந்தரங்கமாய் புகையுடன் கூடிய நீல ஒளிகளில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.

படம் முழுவதுமே ஒரே விதமான தொனி ஒழுங்குடன் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. படத்தின் மனநிலை, நடிகர்களில் தேர்ந்த நடிப்பு, இசை, திரவம் போல வழிந்தோடும் கேமராவின் இயக்கம், அரங்க வடிவமைப்பு, உடைகள் எனப் படத்தின் அனைத்து கருவிகளும் ஒரு சர்க்கஸ் ரிங் மாஸ்டரின் சாட்டைக்குக் கட்டுப்படுவதைப் போல இயக்குநரின் செரிவான மொழிக்குள் அனைத்தும் கட்டுப்பாட்டுடன் இயங்கியுள்ளது.

மார்கெட்டா லாசரோவா

பாரிஸ், டெக்சாஸ்

பிளைண்ட் பீஸ்ட்

கம் அண்ட் சீ

டாக் டே ஆஃப்டர்னூன்

24 ஃப்ரேம்ஸ்

நைஃப் இன் தி கிளியர் வாட்டர்

அவ் ஹசர்ட் பேல்தஸார்

துவிதா

பேலட் ஆப் நரயாமா


மேலும் படிக்க

ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!


அத்தி வரதர்: கலெக்டரை கண்டித்த முதல்வர்


ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்


என்.ஐ.ஏ.சோதனை: கடற்கரையில் ஆளில்லா பங்களாக்களில் என்ன நடக்கிறது?


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


திங்கள், 22 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon