மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

உள்ளாட்சி தனிஅதிகாரிகள் பணி நீட்டிப்பு: மசோதா நிறைவேற்றம்!

உள்ளாட்சி தனிஅதிகாரிகள் பணி நீட்டிப்பு: மசோதா நிறைவேற்றம்!

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளுக்கு 6 மாதம் பணி நீட்டிப்பு வழங்கும் சட்டத் திருத்த மசோதா சட்டமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகள் இல்லாத சூழல் நிலவிவருகிறது. இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனாலும், இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

இதற்கிடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீட்டிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிந்தது. தொடர்ந்து தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு அதாவது டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு கடந்த ஜூன் 21ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த நிலையில் சட்டமன்ற மானியக் கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று (ஜூலை 20) புதியதாக உருவாக்கப்பட்டிருக்கும் ஆவடி மாநகராட்சி தொடர்பான சட்ட மசோதா, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பது தொடர்பாக, நகராட்சிகள், ஊராட்சிகள் சட்டங்கள் திருத்த மசோதா ஆகியவற்றை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கொண்டுவந்தார்.

அப்போது, தனி அதிகாரிகள் பதவிக் காலத்தை நீட்டிப்பது தொடர்பான திருத்த மசோதாக்களுக்கு திமுக உறுப்பினர்கள் ரங்கநாதன், ஆஸ்டின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், எதிர்ப்பையும் மீறி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொண்டுவந்த இந்த மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: துரைமுருகனுக்கு திமுக தந்த அதிர்ச்சி - வேலூர் திருப்பம்!


அத்தி வரதர்: கலெக்டரை கண்டித்த முதல்வர்


ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


ஞாயிறு, 21 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon