மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜூலை 2019

என்.ஐ.ஏ.சோதனை: கடற்கரையில் ஆளில்லா பங்களாக்களில் என்ன நடக்கிறது?

என்.ஐ.ஏ.சோதனை: கடற்கரையில் ஆளில்லா  பங்களாக்களில் என்ன நடக்கிறது?

தேசியப் புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று தமிழத்தின் பல பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை நீடித்துள்ளது

இந்தியாவுக்கு எதிரான வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகவும், உதவிகள் செய்ததாகவும் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில்தான் நேற்று இந்த சோதனை நடந்துள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் தமிழ்நாட்டு அரசின் அனைத்து பொறிமுறைகளும் அரசைக் காப்பாற்றும் செயல்பாடுகளிலேயே இறங்கியிருந்த நிலையில் 2017 ஜூலை 3 ஆம் தேதி மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரிப் பத்திரிகையில், திறந்து கிடக்கும் தமிழ்நாடு! நெருங்கும் ஐ.எஸ். அபாயம்! என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.

அதில்,”ஏற்கனவே அரபி மற்றும் ரஷ்ய மொழியினையே பெரும்பாலும் பயன்படுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் தமிழ் மொழியினையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலும் இப்போது கிடைத்துள்ளது.இன்னும் இதில் அதிர்ச்சி என்ன வென்றால்… தமிழகத்தில் ஐ.எஸ். தாக்குதல் திட்டத்துக்கு இலங்கையில் இருக்கும் முஸ்லிம்களைப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது என்பதுதான்.

ஏற்கனவே கிழக்கு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் மோதல்கள் ஏற்பட்டன. 2009-க்குப் பின் தென்னிலங்கையிலும் முஸ்லிம்கள்மீது பௌத்த மத அடிப்படைவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டன. சில நாள்களுக்கு முன் கொழும்பு அகதிகள் முகாமில் மியன்மாரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் பாலியல் கொடுமைக்கு ஆளானார். இதைச் சொல்லிச்சொல்லி இலங்கையில் இருக்கும் முஸ்லிம்களை ஐ.எஸ். இயக்கம் தங்களது வலையில் வீழ்த்தியுள்ளது.

ஏற்கெனவே புலிகளுக்கு எதிரான மன நிலையில் இருக்கும் இலங்கை முஸ்லிம்களைத் தமிழ்நாட்டில் பயங்கரவாதம் நிகழ்த்த கருவியாகப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது ஐ.எஸ். இதெல்லாம் மத்திய அரசுக்கும் நன்றாகவே தெரியும்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

2017 லேயே மத்திய அரசு எச்சரிக்கை கொடுத்த நிலையில்தான், 2019 ஏப்ரல் 21 ஆம் தேதி இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நடந்திருக்கிறது. இது தொடர்பான என்.ஐ.ஏ. அமைப்பின் தீவிர விசாரணையில் இலங்கையில் நடந்த தாக்குதல் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடந்திருக்க வேண்டியது என்றும், அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் ஐ.எஸ். இயக்கத் தொடர்புகள் வலுப்பட்டு வருவதாகவும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் விரிவான விசாரணையை முடுக்கிவிட்டு வருகிறது என்.ஐ.ஏ.

இதன் ஒரு பகுதியாகத்தான் அன்சருல்லா என்ற அமைப்புக்கு நிதி உதவி செய்ததாக மொத்தம் 16 பேரை கடந்த வாரம் கைது செய்த என்.ஐ.ஏ, அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 8 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க ஜூலை 19 ஆம் தேதி அனுமதி பெற்றது. அதன் பிறகே நேற்று (ஜூலை 20) இந்த சோதனைகள் நடந்திருக்கிறது.

இந்த சோதனைகள் பற்றி என்.ஐ.ஏ. அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கும் பத்திரிகை செய்தியில்,

“அன்சாருல்லா விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 14 பேரின் வீடுகளில் ஜூலை 20 ஆம் தேதி என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது. முகமது இப்ராஹிம், முகமது ஷேக் மைதீன், மீரான் கனி, குலாம் நபி ஆசாத், அகமது அசாருதீன், தௌஃபிக் அஹ்மத், முகமது இப்ராஹிம், முகமது அஃப்சார், ரஃபி அகமது, முன் தாசிர், உமர் பாருக், முகைதீன் சீனி சாகுல் ஹமீது, ஃபைசல் ஷெரிப், ஃபாரூக் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐந்து இடங்கள், தேனி மாவட்டத்தில் இரு இடங்கள், சென்னையில் ஒரு இடம், மற்றும் திருநெல்வேலி,மதுரை நகரங்களில் ஒரு இடம், மேலும் தஞ்சாவூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையின் போது லேப்டாப்,7 மொபைல் போன்கள், 5 சிம் கார்டுகள், 3 மெமரி கார்டுகள், ஒரு ஹார்ட் டிஸ்க், 2 பென் டிரைவ், ஒரு இண்டர்நெட் டாங்கிள், 9 சிடி, டிவிடிக்கள், மற்றும் 50 ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் இவ்வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும், கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் பொருட்கள் உரிய ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன” என்று கூறியிருக்கிறது என்.ஐ.ஏ.

ராமநாதபுரத்தில் சோதனை நடத்தப்பட்ட வீடுகளில் பலவற்றில் யாருமே வசிக்கவில்லை என்பதும், வாட்ச்மேன்கள் மட்டுமே இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஃபி அகமது, சாகுல் அமீது, ஃபைசல் ஷெரிப் ஆகியோரது பங்களா டைப் வீடுகளில் வாட்ச்மேன்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். இப்போது கைதானவர்கள் நெடு நாட்களாக துபாயிலேயே இருந்துள்ளார்கள். இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவர்கள் இந்த வீடுகளுக்கு வருவதே இல்லை என்றும் என்.ஐ.ஏ.வுக்கு தகவல் கிடைத்துள்ளது. ரஃபி அமகதுவின் வீட்டில் நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகள் இருந்துள்ளன.

அதேநேரம் வாலிநோக்கத்தில் சோதனையிடச் சென்ற என் ஐஏ அதிகாரிகளுக்கு இன்னொரு வகையில் அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. பாரூக்கின் வீடு ஓட்டு வீடாகக் காட்சியளித்துள்ளது. அவரது அப்பா டீ கடையில் டீ மாஸ்டராக இருப்பதையும் குடும்பத்தின் ஏழ்மை நிலையையும் கிராம நிர்வாக அதிகாரி மூலமாக விசாரித்து அறிந்துள்ளனர் என்.ஐ.ஏ. அதிகாரிகள்.

சோதனைக்கு முன்னும் பின்னும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் ஆகியோரிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகள். இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஆரம்பித்து, இப்போது அன்சருல்லா அமைப்புடன் தமிழக இளைஞர்களுக்கு இருக்கும் நெருங்கியத் தொடர்புகளைப் பற்றி என்.ஐ.ஏ.வுக்கு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

கிராமங்களில் ஆளில்லாத பங்களாக்களை அவர்கள் எதற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள், அங்கே யார் யார் வந்து போயிருக்கிறார்கள் என்பதையும் இப்போதும் விசாரித்துக்கொண்டிருக்கிறது என்.ஐ.ஏ.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: துரைமுருகனுக்கு திமுக தந்த அதிர்ச்சி - வேலூர் திருப்பம்!


அத்தி வரதர்: கலெக்டரை கண்டித்த முதல்வர்


ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

ஞாயிறு 21 ஜூலை 2019