மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!

டிஜிட்டல் திண்ணை:  சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குப் போய் சுமார் இரண்டரை வருடங்கள் ஆகிறது. இந்த சிறை காலத்தில் அவரை சந்திக்க தினகரன், விவேக், சசிகலாவின் கணவர் நடராஜன் குடும்பத்தார் என்று பலரும் பல்வேறு தேதிகளில் பல்வேறு பிரச்சனைகளுக்காக சென்று பேசியிருக்கிறார்கள்.

கடந்த மக்களவை சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் படுதோல்வி சசிகலாவை மிகவும் பாதித்துவிட்டது. ஆனால் அதை விட இப்போது அவருக்கு பெரும் தலைவலியாக இருப்பது குடும்பத்துக்குள் நடக்கும் சடுகுடு கள் தான்.

தினகரனுக்கும் விவேக்குக்கும் சரிப்பட்டு வரவில்லை என்பது பல்வேறு மாதங்களாகவே உலவி வரும் தகவல்தான். கடந்த முறை தினகரனும் அவரது மனைவி அனுராதாவும் சிறைக்குச் சென்று சசிகலாவை சந்தித்தபோது ஜெயா டிவி உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் சசிகலா சில அறிவுரைகளை வழங்கியதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஜூலை 19ஆம் தேதி தினகரன்,விவேக், நடராஜனின் தம்பிகளான ராமச்சந்திரன் உள்ளிட்டோர் என அனைவரும் தத்தமது குடும்பத்தினரோடு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குள் சென்னையில் இருந்து ஐந்து கார்களில் புறப்பட்டு சென்றனர். தினகரன் மட்டும் தனியாக சென்றிருக்கிறார். விவேக் அவரது மனைவி, குழந்தை, நடராஜனின் தம்பிகள் குடும்பத்தார் என சுமார் பதினைந்து பேர் இன்று சசிகலாவை சந்தித்திருக்கிறார்கள்.

சிறைக்குச் சென்றதில் இருந்து தன் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக வரவழைத்து சசிகலா சந்தித்தது இதுதான் முதல்முறை என்கிறார்கள். மதியம் 12 மணிக்கு சசிகலாவை சந்திக்கச் சென்ற தினகரன் அவரோடு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தி விட்டு வெளியே வந்தார்.

அதன் பிறகு விவேக், கிருஷ்ணப்பிரியா, நடராஜன் தம்பிகள் ஆகிய தனது குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார் சசிகலா இந்த சந்திப்புகளில் சொத்து பிரச்சனை கட்சி பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

’நானே இப்ப ரொம்ப உடைஞ்சு போய் இருக்கேன். இந்த நேரத்துல வெளியில் இருக்கும் நீங்க நடந்துகிற விதம் தான் எனக்கு தெம்பையும் நிம்மதியையும் கொடுக்கும். ஆனால் உங்களுக்குள் நடக்கிற பல விஷயங்களைக் கேள்விப்பட்டு அங்கே எனக்கு உடம்பு, மனசு இரண்டும் தாங்க முடியல. இன்னும் கொஞ்ச நாள்ள நான் வெளியில் வந்து விடுவேன். அதுவரைக்கும் சற்று பொறுமையாக இருங்கள் என்று குடும்பத்தினருக்கு உருக்கமாக சொல்லி அனுப்பியிருக்கிறாராம் சசிகலா” என்ற மெசேஜை செண்ட் செய்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

மேலும் படிக்க

பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!

டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!

அடிக்கப் பாய்ந்த சத்யா - அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!

அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!

அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


வெள்ளி, 19 ஜூலை 2019

அடுத்ததுchevronRight icon