மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

மத்திய அமைச்சரும் முதல்வரும் பதவி விலக வேண்டும்: வைகோ

மத்திய அமைச்சரும் முதல்வரும் பதவி விலக வேண்டும்: வைகோ

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பதவி விலக வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (ஜூலை 17) மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பல குற்றங்களுக்கும், கலவரங்களுக்கும், பல பெண்களின் வாழ்க்கை சீரழிய காரணமாக இருக்கும் செல்போன்களை பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பயன்படுத்தக் கூடாது என்று கல்லூரி முதல்வர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஆனால், குரு பூர்ணிமா நாளில் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுடன் இணைந்து செல்போன்களில் செல்ஃபி எடுத்துக்கொண்டு அதை சமூக வலைதளங்களில் பகிர வேண்டுமென்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவின் பேரில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சந்திரயானைப் பயன்படுத்தி நிலவை ஆய்வு செய்யப் போகிறோம் எனவும் 2022ஆம் ஆண்டில் நிலவில் மனிதனை இறக்கப்போகிறோம் எனவும் சொல்கின்றனர். ஆனால், சந்திரனைப் பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதைகளை வைத்துக்கொண்டு அமாவாசை, பௌர்ணமி என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.

ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்கள் செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை விட முட்டாள்தனமான யோசனையை யாரும் சொல்ல முடியாது. கல்லூரி முதல்வர்களுக்கு இந்த சுற்றறிக்கையை அனுப்ப என்ன காரணம்? இந்தியைத் திணிப்பது மட்டுமல்லாமல் கலாச்சாரத்தையே பாழாக்கி அறிவியல் சிந்தனைகளை மழுங்கச் செய்கிற வகையில் சுற்றறிக்கை வெளியிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதவி விலக வேண்டும்.

நீட் தேர்வு வராது எனவும் அதைத் தடுத்து வைத்துள்ளோம் எனவும் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டு குடியரசுத் தலைவரையும் சென்றடைந்துவிட்டது என்றெல்லாம் கூறி நமது மாணவர்களை நம்ப வைத்தனர். 2017ஆம் ஆண்டில் இம்மசோதாக்களை அனுப்பியுள்ளனர். அப்போதே அது நிராகரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதை வெளியில் சொல்லாமல் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பரிசீலனையில் இருப்பதாகவும் இரண்டு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றியுள்ளனர். உண்மை தற்போது வெளிவந்துவிட்டது.

நீட் தேர்வு வராது என்று தமிழக மாணவர்களை நம்பச் செய்து, ஏழரைக் கோடி தமிழக மக்களை ஏமாற்றி கடைசியில் நீட் தேர்வு வந்து மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் ஆறு பேர் தற்கொலையே செய்து இறந்துபோய்விட்டனர். இந்த ஆறு பேரின் மரணத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியே காரணம் என்பதால் அவரும் பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

தயாராகிறது பாகுபலி 3?

மணிரத்னம் - நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!

டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா

வைகோ எம்.பி.யாக சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு!


வியாழன், 18 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon