மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா

டிஜிட்டல் திண்ணை:  கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“நேற்றைய டிஜிட்டல் திண்ணையில், புதிய கல்விக் கொள்கைக் குளத்தில் கல் எறிந்த சூர்யா அதையடுத்து எழுந்த சலசலப்புகளுக்கு பதில் சொல்லாமல் மௌனம் காப்பது பற்றி தெரிவித்திருந்தோம். அந்த மௌனத்துக்குப் பின்னால் முக்கியமான செயல் திட்டங்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் சூர்யா. இது அகரம் வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த தகவல்.

புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் அதுபற்றி அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தும் பொதுமக்கள் விவாதத்துக்கு போதிய அளவில் வரவில்லை. அதேநேரம் சூர்யா இதுபற்றிப் பேசியதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் புதிய கல்விக் கொள்கை பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதை அறிந்துதான் பாஜகவினரும், அதிமுக அமைச்சர்களும் சூர்யாவின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், சூர்யா மீது தனி நபர் தாக்குதல் நடத்தினர்.

இதனிடையே சூர்யாவின் கருத்துக்கு கமல், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். சூர்யா புதிய கல்விக் கொள்கை பற்றி முன் வைத்த கருத்தைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார். அகரம் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்றுள்ள சூர்யா, தனது கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வரும் கருத்துகளை எல்லாம் தனக்கு தொகுத்து அனுப்புமாறு சென்னையிலுள்ள தனது குழுவினரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். தனக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்ட திரைப் புள்ளிகள், அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கு தன் சார்பில் நேரில் சென்று நன்றிக் கடிதத்தை சேர்ப்பிக்கவும் உத்தரவிட்டிருக்கிறார் சூர்யா. அதன்படி சூர்யாவின் பிரதிநிதிகள் இந்த வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.

இதுமட்டுமல்ல...வெளிநாட்டுக்குப் புறப்படும்போது இன்னொரு முக்கியமான முடிவினையும் எடுத்து, அதற்கு செயல் வடிவம் கொடுக்குமாறு அகரம் ஃபவுண்டேஷனுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் சூர்யா.

அதாவது அரசுப் பள்ளிகளில் கல்வித் துறையின் மூலமாக பள்ளி மேலாண்மைக் குழு ( School Management Committee) என்றொரு அமைப்பு துவக்கப்பட்டது. மத்திய அரசின் உத்தரவின் பேரில் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்த அமைப்பு பெற்றோர் ஆசிரியர் கழகம் போன்றது. ஆனால் கல்வித்துறையுடன் மிகவும் நெருக்கமானது. இந்த குழுவில் பள்ளித் தலைமையாசிரியர், ஊர் பெரிய மனிதர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இருப்பார்கள். அந்தந்த பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளை பற்றி கல்வித்துறை அதிகாரிகள் மூலமாக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று அவற்றை நிவர்த்தி செய்வதுதான் பள்ளி மேலாண்மைக் குழுவின் நோக்கம். பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசு மூலம் மட்டுமல்லாது, இந்தக் குழுவில் உள்ளவர்கள் தனியார் பங்களிப்போடும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். இந்தக் குழு வாராவாரம் வெள்ளிக் கிழமை கூட வேண்டும் என்பது நியதி. ஆனால் சில வருடங்களாகவே இந்தக் குழு சரியாகக் கூடுவதில்லை.

இதை சூர்யாவின் கவனத்துக்கு அகரம் பொறுப்பாளர்கள் கொண்டுபோயிருக்கின்றனர். மேலும் இந்த பள்ளி மேலாண்மைக் குழுக்களில் அகரம் தன்னார்வலர்களும் இடம்பெற வேண்டும், அதன் மூலம் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களை நடத்த வைக்க வேண்டும். அந்தந்த பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை அரசு மூலமாகவோ, தனியார் பங்களிப்பு மூலமாகவோ, அகரம் ஃபவுண்டேஷன் மூலமாகவோ பூர்த்தி செய்யலாம் என்றும் சூர்யாவுக்கு யோசனை கூறியுள்ளனர். அதன்படி அனைத்து ஊர்களிலும் முன்னாள் மாணவர்களை அகரம் சார்பில் ஒருங்கிணைத்து இந்த குழுவில் இடம்பெற வைக்கவும் முயற்சித்து வருகிறார்கள்.

அடுத்த யோசனையாக, வரும் ஆகஸ்டு 15 ஆம் தேதி தமிழகம் எங்கும் சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அப்போது, பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்படும் பள்ளிகள் தொடர்பான பிரச்சினைகளை கிராம சபைக் கூட்டங்களில் பேசித் தீர்மானமாக நிறைவேற்ற வைக்க வேண்டும். கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் உள்ளாட்சித் துறையும் அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கு ஆளாகும்.

இதற்கிடையே பள்ளி மேலாண்மைக் குழுக்களிலும் அதையடுத்து கிராம சபைகளிலும் புதிய கல்விக் கொள்கை பற்றியும் விவாதிக்க வேண்டும். பள்ளிகளுக்கு பெஞ்ச் தேவை, கட்டிடம் தேவை போன்ற அடிப்படைப் பிரச்சினைகளைப் போலவே புதிய கல்விக் கொள்கை பற்றிய விவாதமும் அடிப்படைத் தேவையே. இதையும் அகரம் சத்தமின்றி முன்னெடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் முன் வைத்த யோசனையை ஏற்றுக் கொண்டிருக்கிறார் சூர்யா.

புதிய கல்விக் கொள்கை பற்றி கருத்து தெரிவிக்க இப்போது ஜூலை 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இன்னமும் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துகொண்டிருக்கின்றன. எனவே ஆகஸ்டு மாதம் வரை கூட நீட்டிக்கப்படலாம். அப்படி நீட்டிக்கப்பட்டாலும் சரி, நீட்டிக்கப்படாவிட்டாலும் சரி ஆகஸ்டு 15 அன்று கிராம சபைகளில் புதிய கல்விக் கொள்கை பற்றி பேச வேண்டும் என்று விரும்புகிறார் சூர்யா. இதற்காக அவரே கூட கிராம சபை கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அகரம் நிர்வாகிகள் சூர்யாவிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதை அவர் ஏற்கும் நிலையில் ஆகஸ்டு 15 ஆம் தேதி தமிழகத்தின் கிராம சபைக் கூட்டங்களில் சூர்யா கலந்துகொண்டு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட கல்விப் பிரச்சினைகள் பற்றியும் பேச வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அகரம் வட்டாரங்களில்.

ஏற்கனவே மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், திமுக தலைவர் ஸ்டாலின் போன்றோர் கிராம சபை கூட்டங்களை தங்களது அரசியல் ஆயுதங்களாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் அரசியலுக்குள் வராமலேயே கல்விப் பிரச்சினைக்காக கிராம சபைக் கூட்டங்களை கையிலெடுக்க காய் நகர்த்துகிறார் சூர்யா. இதை அரசுத் தரப்பு எப்படி கையாளும் என்பதுதான் அடுத்த கட்ட எதிர்பார்ப்பு” என்ற செய்திக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

இதை அப்படியே ஷேர் செய்துகொண்டது ஃபேஸ்புக்.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

மணிரத்னம் - நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!

தயாராகிறது பாகுபலி 3?

“மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்


புதன், 17 ஜூலை 2019

அடுத்ததுchevronRight icon