மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

வைகோ எம்.பி.யாக சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு!

வைகோ எம்.பி.யாக சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு!

வைகோ மாநிலங்களவை உறுப்பினராவதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தொமுச சண்முகம், வழக்கறிஞர் வில்சன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, முகமது ஜான், சந்திரசேகர் ஆகியோர் அடுத்த வாரத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினரானதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான சசிகலா புஷ்பா, வைகோவை மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க அனுமதிக்கக் கூடாது என துணை குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் வைகோ மாநிலங்களவை உறுப்பினராவதற்கு பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணை தலைவருமான வெங்கைய்ய நாயுடுவுக்கு அவர் நேற்று (ஜூலை 16) கடிதம் எழுதியிருக்கிறார்.

கடிதத்தில், “இந்தி வளர்ந்த மொழியல்ல என்றும் இந்தியில் இலக்கியமாக வெளியிடப்பட்ட ஒரே புத்தகம் ரயில்வே நேர அட்டவணைதான் எனவும் வைகோ கூறியிருக்கிறார். இது அனைத்து இந்தியர்களையும் மோசமாக இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆங்கிலத்தில் மட்டும்தான் பேச வேண்டும் என வலியுறுத்தி, இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்றான இந்திக்கு களங்கம் விளைவித்துள்ளார். மேலும் சமஸ்கிருத சொல்லகராதிதான் இந்திக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சமஸ்கிருதம் செத்துப்போன மொழி, அதனை படிப்பது பயனற்றது என்றும் வைகோ விமர்சித்துள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்த நாட்டையும் இழிவுபடுத்தியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது அரசியல் சாசனத்தை நிலைநிறுத்துவேன் என்று தான் எடுத்த சத்திய பிரமாணத்தை வைகோ மீறியுள்ளார்” என்று கூறியுள்ள சுப்பிரமணியன், இது கடும் ஆட்சேபத்திற்குரியது எனவும், எனவே வைகோ மாநிலங்களவை உறுப்பினராக இடம்பெறுவது குறித்து தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!

மணிரத்னம் - நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!

தயாராகிறது பாகுபலி 3?

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

“மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்


புதன், 17 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon