மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஏப் 2020

குல்புஷன் ஜாதவ் வழக்கில் இன்று தீர்ப்பு!

குல்புஷன் ஜாதவ் வழக்கில் இன்று தீர்ப்பு!

ஓய்வுபெற்ற இந்தியக் கடற்படை அதிகாரியான குல்புஷன் ஜாதவுக்கு 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உளவு பார்த்தல், தீவிரவாதம் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாகிஸ்தானிய ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 2017ஆம் ஆண்டு மே 8ஆம் தேதியன்று சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு மேல் முறையீடு செய்தது. அப்போது, விசாரணை முடியும் வரையில் குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பதற்றம் உச்சத்தில் இருந்தபோது கடந்த பிப்ரவரி மாதத்தில் குல்புஷன் ஜாதவ் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாகிஸ்தானில் இயங்கும் ராணுவ நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து இந்திய தரப்பு வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே கேள்வியெழுப்பினார். மேலும், கட்டாய வாக்குமூலத்தின் அடிப்படையில் குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

விசாரணையின் கடைசி நாளின்போது, பாகிஸ்தான் தரப்பு வழக்கறிஞர் கவர் குரேஷ், “தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். குல்புஷன் ஜாதவ் இரானுக்குள் நுழைந்தபிறகு 2016ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதியன்று அவரை கைது செய்ததாக பாகிஸ்தான் தரப்பு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. எனினும், குல்புஷன் ஜாதவ் பணி ஓய்வுபெற்ற பிறகு தொழில் காரணமாக இரான் சென்றபோது அவர் கடத்தப்பட்டதாக இந்தியத் தரப்பு கூறி வருகிறது.

குல்புஷன் ஜாதவ் தனது மனைவியைச் சந்திக்க இஸ்லாமாபாத்தில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதியன்று பாகிஸ்தான் அரசு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், குல்புஷன் ஜாதவ் வழக்கு இன்று (ஜூலை 17) 3 மணிக்கு (இந்திய நேரத்தில் மாலை 6.30) விசாரணைக்கு வரும் எனவும், தலைமை நீதிபதி அப்துல்ஹக்வி அகமது யூசுப் தீர்ப்பை வாசிப்பார் எனவும் சர்வதேச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

“மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்

தயாராகிறது பாகுபலி 3?

அதிமுக தலைவராகிறாரா ரஜினி?


புதன், 17 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon