மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஏப் 2020

டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!

டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது. ‘டைப்பிங்’ மோடு சில நிமிடங்கள் நீடித்த நிலையில் செய்தி வந்து விழுந்தது.

“புதிய கல்விக் கொள்கை பற்றி நடிகரும் அகரம் கல்வி அறக்கட்டளை பொறுப்பாளருமான சூர்யா பேசிய பேச்சு அவருக்கு கடுமையான எதிர்ப்புகளை கிளப்பிவிட்டிருக்கிறது. சூர்யா வன்முறையைத் தூண்டுகிறார் என்று பாஜகவின் ஹெச்.ராஜா சொன்னார். தமிழிசையோ, ‘இந்த புதிய கல்விக் கொள்கையை அதைப் பற்றி தெரியாதவர்களெல்லாம் பேசுகிறார்கள். உதய சூரியனை சின்னமாக கொண்டவர்தான் பேசுகிறார்கள் என்றால், நடிகர் சூர்யாவும் பேசுகிறார்’ என்று சாடினார். கல்வித் துறை அமைச்சர்கள் யாரும் சூர்யாவுக்கு பதில் சொல்லாத நிலையில், சினிமா துறையை உள்ளடக்கிய செய்தித்துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ, ‘சூர்யா அரைவேக்காட்டுத் தனமாக பேசுகிறார்’ என்று கடுமையாக பேசினார்.

இத்தனை பேர் இவ்வளவு கண்டித்தும் சூர்யா தர்பபில் இருந்து பதில் ஏதும் வரவில்லை. ஊடகங்கள் இது தொடர்பாக அவரைத் தொடர்புகொள்ள முயன்றும் சூர்யா பிடி கொடுக்கவில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் தரப்பினரை அழைத்தும், ‘நீங்க விவாதம் நடத்துங்க. ஆனால் நாங்க டைரக்டா பங்கெடுக்க வேணாம்னு சார் சொல்லிட்டாரு’ என்றே பதில் வந்திருக்கிறது.

புதிய கல்விக் கொள்கை பற்றி மாணவர்கள் விவாதிக்கவில்லை என்று வருத்தப்பட்ட சூர்யா, இதுபற்றி ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளின் கண்டனம் வந்த நிலையில் அதுபற்றி ஏன் விவாதம் நடத்த மறுக்கிறார்? அதற்கும் காரணம் இருக்கிறது.

செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் அலுவலகத்தில் இருந்து சூர்யாவுக்கு போன் போட்டிருக்கிறார்கள். அமைச்சரின் தரப்பில் சூர்யாவின் உதவியாளரிடம் பேசியிருக்கிறார்கள்.

‘என்ன சார்... சூர்யா அரசாங்கத்தை எதிர்க்கிறதுன்னு முடிவு பண்ணிட்டாரா? அப்படின்னா சொல்லுங்க அரசாங்கத்தால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிக்கிறோம். உங்க அகரம் ஃபவுண்டேஷன் ஏராளமான அரசுப்பள்ளிகள்ல பல நிகழ்ச்சிகள், உதவிகள் செஞ்சுக்கிட்டு வருது. அதை உடனே நிறுத்தச் சொல்லிடறீங்களா? கல்வித் துறை சார்பா இனி அகரம் ஃபவுண்டேஷனுக்கு எந்த ஒத்துழைப்பும் தேவையில்லைனு சூர்யாவை அறிவிக்கச் சொல்லுங்க. அப்புறமா அரசாங்கத்தை விமர்சிக்க சொல்லுங்க. ஜோதிகாவும் இப்பதான் ராட்சசி படம் மூலமா அரசுப் பள்ளிகளையும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள்லாம் மோசமானவங்கனு விமர்சனம் பண்ணாங்க. இப்ப என்னடான்னா சூர்யா கல்விக் கொள்கை பத்தி அரசை விமர்சிக்கிறாரு. குடும்பத்தோட அரசாங்கத்த எதிர்க்கிறதுனு முடிவு பண்ணிட்டாங்களா? அகரம் ஃபவுண்டேஷன் அரசுப் பள்ளிகள்ல தொடர்ந்து செயல்படணும்னா சூர்யாவை வாய மூடிக்கிட்டு இருக்க சொல்லுங்க’ என்று பொரிந்து தள்ளியிருக்கிறார்கள் அமைச்சர் தரப்பில். பாஜக தரப்பில் இருந்தும் சில நிர்ப்பந்தங்கள் சூர்யாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன.

தனக்கு ஹெச்.ராஜா, தமிழிசை, கடம்பூர் ராஜூ ஆகியோர் அளித்த பதிலுக்கு காட்டமாக மீண்டும் பதிலளிப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்தார் சூர்யா. மாடசாமி, விழியன் போன்ற தனக்கு நெருக்கமான கல்வியாளர்களோடு கலந்து பேசி பதிலையும் தயார் செய்துவிட்டிருந்தார் சூர்யா. அப்போதுதான், அமைச்சர் அலுவலகத்தில் இருந்து வந்த போன் தகவல் சூர்யாவுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அகரம் ஃபவுண்டேஷன் தொடர்பாக விடப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து சூர்யா வேறு மாதிரி சிந்திக்க ஆரம்பித்துவிட்டார். இது தொடர்பாக அப்பா சிவகுமாரிடமும் ஆலோசித்திருக்கிறார்.

‘இன்னிக்கு நாம பதில் கொடுக்கறதால மீடியாவுக்கு தீனி போடலாம். ஆனா அரசாங்கம் என்னை எதிர்க்கிறதா நினைச்சு, அரசுப் பள்ளிகள்ல அகரம் ஃபவுண்டேஷன் செயல்பட தடை போட்டுட்டாங்கன்னா, இப்போ பலன் பெறும் பிள்ளைங்கதான் பாதிக்கப்படுவாங்க. அதனால் பதிலுக்கு பதில் கொடுக்குறதுல்லாம் இப்போதைக்கு வேணாம். இத்தோடு நிறுத்திக்குவோம்’ என்று சொல்லியிருக்கிறார் சூர்யா. இந்தப் பின்னணியில்தான் சூர்யாவிடம் இருந்து அடுத்த கட்டமான பதில்கள் எதுவும் வரவில்லை என்கிறார்கள்.

திமுக ஆட்சிக் காலத்தில், ‘என்னை மிரட்றாங்கய்யா’ என்று முதல்வர் கலைஞரை மேடையில் வைத்துக் கொண்டே பேசினார் அஜீத் குமார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடிகர் கமல்ஹாசன் மிரட்டப்பட்டார். தலைவா படத்தின் போது விஜய் மிரட்டப்பட்டார். இப்போது அவர்களின் வழியில் எடப்பாடி ஆட்சியில் சூர்யா மிரட்டப்படுகிறார்’ என்ற தகவலைப் படித்து முடிக்கையில் வாட்ஸ் அப் ஆஃப் லைனுக்கு போயிருந்தது.

மேலும் படிக்க

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

“மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்

தயாராகிறது பாகுபலி 3?

என் மகனாகப் பார்க்காதீர்கள்... ‘திமுக’காரனாகப் பாருங்கள்!

அதிமுக தலைவராகிறாரா ரஜினி?


புதன், 17 ஜூலை 2019

அடுத்ததுchevronRight icon