மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஏப் 2020

“மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்

“மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ஏற்கனவே நடந்த பண கைப்பற்றல்களால் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஆகஸ்டு 5 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட ஏ.சி. சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி சார்பாக ஏற்கனவே போட்டியிட்ட தீபலட்சுமி மீண்டும் போட்டியிடுகிறார். இவர் கடந்த ஜூலை 8 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம், மாநிலத் தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், ”வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தானதற்கு காரணமான கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் ஆகியோர் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

தீபலட்சுமி தன் மனுவில், “ஏற்கனவே ஏப்ரல் 18 ஆம்தேதி நடக்க இருந்த வேலூர் பொதுத் தேர்தலில் நான் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டேன். அப்போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக நடந்த பணப் பட்டுவாடா அது தொடர்பாக கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதிமுக சார்பாக நின்ற ஏ.சி. சண்முகத்தின் சார்பிலும் கடந்த முறையே அதிக அளவு பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

மீண்டும் ஆகஸ்டு 5 ஆம் தேதி வேலூர் மக்களவைக்குத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மேற்கண்ட கதிர் ஆனந்த், ஏ.சி சண்முகம் இருவரையும் அந்தக் கட்சிகள் வேட்பாளராக அறிவித்திருக்கின்றன. ஆக யாரால் தேர்தல் ஏற்கனவே நிறுத்தப்பட்டதோ அவர்களே மீண்டும் வேட்பாளராகியிருக்கிறார்கள்.

கடந்த முறையே நான் தேர்தலில் நின்றதற்கு கடன் வாங்கி செலவழித்திருக்கிறேன். எனது நண்பர்கள், கட்சியினரின் இருபது நாள் உழைப்பும் வீணாகப் போய்விட்டது. தேர்தல் ஆணையமும் தேர்தல் நடத்த செலவு செய்திருக்கிறது. இந்த நிலையில், ஏற்கனவே தேர்தல் ரத்தானதற்கு காரணமானவர்களுக்கு மீண்டும் அந்த கட்சிகள் வாய்ப்பு அளிக்கக் கூடாது. மீண்டும் அவர்களே போட்டியிட்டால், வெற்றிபெறுவதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். இதனால் மீண்டும் பணப் பட்டுவாடா அதிகரிக்கும். எனவே இவர்கள் இருவரையும் தகுதி நீக்கம் செய்யாவிட்டால் வேலூரில் வெளிப்படையான நேர்மையான தேர்தலை நடத்த வாய்ப்பே இல்லை. எனவே கதிர் ஆனந்தையும், ஏ.சி. சண்முகத்தையும் வேட்பாளர்களாக நிறுத்த தடை விதிக்க வேண்டும்” என்று அம்மனுவில் கோரியிருக்கிறார். இம்மனுவுக்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், “உங்கள் மனு உரிய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறது.

இந்த சூழலில்தான் நேற்று (ஜூலை 15) அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் தந்தை துரைமுருகனும், திமுக தலைவர் ஸ்டாலினும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு முன்னர் விவாதித்திருக்கிறார்கள்.

அப்போது ஸ்டாலின், ‘இந்த முறை மாற்று வேட்பாளராக யாரை நிறுத்தப் போறீங்க?’ என்று கேட்டிருக்கிறார். ஸ்டாலின் இப்படிக் கேட்டதுமே துரைமுருகனுக்கு ஷாக் ஆகிவிட்டது. ‘போன முறை மாதிரி இந்த தடவை நடக்காது. அதனால மாற்று வேட்பாளர் யார் என்ற கவலையும் தேவையில்லை. போன முறை கதிர் மனைவி சங்கீதாவைதான் நிறுத்தினோம். அவரையே நிறுத்திடலாம்’ என்று சொல்லியிருக்கிறார் துரைமுருகன்.

அதற்கு ஸ்டாலின், “இல்ல... நாம எதற்கும் தயாராக இருக்கணும். கதிர் மேலயும், ஏசி சண்முகம் மேலயும் தேர்தல் கமிஷனுக்கு தொடர்ந்து புகார்கள் போயிட்டிருக்கு. ஏதாவது மறுபடியும் சூழ்ச்சி பண்ண நம்ம எதிரிகள் தீவிரமா இருப்பாங்க. இந்த முறை தேர்தலை ரத்து பண்ண மாட்டாங்க. ஆனா நம்ம வேட்பாளரைக் குறிவச்சி ஏதாவது மறுபடியும் சதி பண்ண வாய்ப்பிருக்கு. அதனால மாற்று வேட்பாளரை கட்சி அனுபவம் உள்ளவரா பார்த்து நிறுத்துங்க “ என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். துரைமுருகனோ இது தொடர்பாக ஸ்டாலினிடம் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த விஷயம் வேலூர் திமுகவினருக்குள் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த முறை கதிர் ஆனந்தை குறிவைத்து ரெய்டுகள், விசாரணைகள் என்று தொடர்ந்தபோது அவரால் பிரச்சாரத்துக்கே போக முடியவில்லை. அப்போது கதிரின் மனைவி சங்கீதாதான் களமிறங்கி தன் கணவருக்காக பிரச்சாரத்தை தொய்வில்லாமல் தொடர்ந்தார். அதனால் ஒரு கட்டத்தில் கதிர் ஆனந்த் நிற்க வாய்ப்பில்லை என்றால் சங்கீதாவையே திமுக வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று அப்போதே வேலூர் திமுகவினர் மத்தியில் கோரிக்கைகள் எழுந்தன. அது அப்போதே ஸ்டாலின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் இப்போது கதிர் ஆனந்தின் மாற்று வேட்பாளரை மாற்றுங்கள் என்று துரைமுருகனிடம் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, மாற்று வேட்பாளர் அவரது மனைவியா அல்லது கட்சி நிர்வாகிகள் யாராவதா என்று தெரியும்,

மேலும் படிக்க

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

நியூசிலாந்துக்கு 'விதி' செய்த 'சதி'!

தயாராகிறது பாகுபலி 3?

டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !

அதிமுக தலைவராகிறாரா ரஜினி?


செவ்வாய், 16 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon