மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஏப் 2020

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

அமமுகவைப் பலப்படுத்துவதற்காக புதிய திட்டம் ஒன்றை வகுத்திருக்கிறார் தினகரன்.

தருமபுரி, சேலம் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு சேலம் வழியாக தருமபுரிக்குச் சென்றார். தருமபுரி மஞ்சவாடி கணவாயில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்திருக்கும் முன்னாள் அமைச்சரும் அமமுக துணைப் பொதுச் செயலாளருமான பழனியப்பனின் பங்களாவில் இரவு ஓய்வெடுத்தார். தூங்குவதற்கு முன்பாக பழனியப்பன், சேலம் மாவட்ட அமமுக செயலாளர் எஸ்.கே.செல்வம் உள்ளிட்ட பிரமுகர்களோடு கட்சி விவகாரங்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

நேற்று காலை டிபன் சாப்பிட்டுவிட்டு பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியவர், பின்னர் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கட்சிக்காரர்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். செல்லும் வழியில் மோளையானூரில் அமைந்திருக்கும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். ஒவ்வோர் இடத்திலும் கட்சியினர் தந்த வரவேற்பையும் பொறுமையாக ஏற்றுக்கொண்டார்.

தினகரனுடன் தினகரன்

தருமபுரி மாவட்டச் செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தனது குடும்பத்தினருடன் தினகரன் சந்தித்தார். பேரனுக்குப் பெயர் வைக்க வேண்டுமென அவர் தினகரனிடம் சொல்ல, அவரோ ‘தினகரன்’ என்ற தனது பெயரையே குழந்தைக்குச் சூட்டினார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தினகரன் செல்லும் இடங்களிலெல்லாம் மிகப்பெரிய அளவு பொதுமக்கள் கூட்டம் கூடும். அவை மக்களவைத் தேர்தலில் வாக்காக மாறவில்லையே என்ற சந்தேகம் அமமுகவினர் மத்தியில் இருக்கிறது. ஆனால், தேர்தல் தோல்விக்குப் பிறகு தினகரன் நேற்று தருமபுரிக்குச் சென்றபோது பழையபடியே அவருக்குக் கூட்டம் கூடியிருக்கிறது.

இதைப் பார்த்த தினகரன் அருகிலிருந்த பழனியப்பனிடம், “கார், பைக்குன்னு நம்ம கூட எப்படியும் 400 வண்டிக்கும் மேல வரும் போல. பழையபடி ஸ்பெஷல் ஏற்பாடு ஏதாவது பண்ணீங்களா?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு “அப்படில்லாம் எந்த ஏற்பாடும் பண்ணல. அவங்கள்லாம் உங்களுக்காக வந்தவங்க” என்று சொல்லியிருக்கிறார் பழனியப்பன்.

பங்களாவில் நடந்த ஆலோசனையில் பழனியப்பன் உள்ளிட்டோரிடம் சில விஷயங்களை மனம்விட்டுப் பேசியுள்ளார் தினகரன். “நம்ம கட்சியில இருந்து திமுக, அதிமுகவுக்கு எத்தனை பேர் போவாங்கன்னு லிஸ்ட் போட்டு வெச்சிருக்கேன். ஒரு 50 பேர் வரைக்கு போறதுக்கு ரெடியா இருக்காங்க. அவங்க போனா போகட்டும். நம்ம கூட்டத்துல கலந்துகிறவங்க பாதிக்கு மேல இளைஞர்கள்தான் இருக்காங்க. அதனால 50 வயதைத் தாண்டி கட்சி பொறுப்புல இருக்குற பெரும்பாலானவங்களுக்கு இனி வாய்ப்பு கொடுக்குறதில்லேன்னு முடிவு பண்ணிருக்கிறேன்” என்று தனது எண்ணத்தைச் சொல்லியிருக்கிறார்.

பழனியப்பன் உள்பட அங்கிருந்தோர் அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்பதால் அவர்கள் தினகரனை ஒரு கணம் பார்க்க, “உங்களைப் போன்ற ஒரு சிலருக்கு அதில் விதிவிலக்கு உண்டு” என்று கூறி சிரித்திருக்கிறார்.

மேலும், “இதுக்கப்புறம் அமமுகவுல 30 வயசுல இருந்து 45 வயது வரைக்கும் இருக்குற துடிப்பா செயல்படுறவங்களுக்குப் பதவி தரலாம்னு இருக்கேன். பாஜக வரும் போகும் அது நமக்கு முக்கியமில்ல. நமக்கு நம்ம கட்சியைப் பலப்படுத்தணும்கிறதுதான் முக்கியம். அமமுக இப்ப எப்படி இருக்குங்கிறது முக்கியமில்ல. இன்னும் 10 வருஷத்துக்கு அப்புறம் எப்படி இருக்கப்போவுது அப்படிங்கறதுதான் முக்கியம். அதுக்காக இப்பவே ப்ளான் பண்றேன்” என்று சொல்ல அதனை ஆமோதித்திருக்கிறார்கள் அங்கிருந்த நிர்வாகிகள்.

இன்று (ஜூலை 16) சேலம் கொண்டாலாம்பட்டி அடுத்த பூலாவாரி பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் அமமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது நிர்வாகிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்க இருக்கிறார் தினகரன். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று கட்சியினரின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் தினகரன், தமிழக அளவில் இரண்டாம்கட்ட சுற்றுப் பயணத்தை சேலத்திலிருந்து தொடங்க இருக்கிறார்.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !

அதிமுக தலைவராகிறாரா ரஜினி?

திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!

அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்

நியூசிலாந்துக்கு 'விதி' செய்த 'சதி'!


செவ்வாய், 16 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon