மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

ஓநாய்களின் ஓலமும் காதலின் வாதையும்!

ஓநாய்களின் ஓலமும் காதலின் வாதையும்!

திரை தரிசனம் 10: மார்கெட்டா லாசரோவா

முகேஷ் சுப்ரமணியம்

மத்திய காலத்தில் ஓர் கடும் பனிக்காலம். செக் குடியரசு உருவாவதற்கு முன்புள்ள பொஹிமியன் நிலப் பகுதியில் மக்களின் தொன்மையான சமயங்கள் தன் கடைசித் துடிப்புடன் நிலங்களில் வாழ்ந்து கொண்டிந்தது. கிறிஸ்தவம் செக் குடியரசில் இன்னும் முழுமையாக ஊடுருவாத 13ஆம் நூற்றாண்டின் தொடக்கம். மைக்கோலஸ் மற்றும் அவனது சகோதரன் ஆடம் ஆகியோர் கட்டுக்கடங்காத கொள்ளையிடும் கூட்டத்தைச் சேர்ந்த தலைமை வாரிசுகள். தந்தை கோஸ்லக்கின் கட்டளைக்கிணங்க அந்த நிலப்பரப்பை கடக்கும் பயணிகளைக் கொள்ளையடித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அப்படியொரு நாள், அவர்கள் பகுதியை கடக்கும் ஒரு வண்டியை வழி மறிக்கையில், கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவர் தன் இளம் மகன் கிறிஸ்டின், உதவியாளரோடு மாட்டுகின்றார். அவர்களை மிரட்டிக் கொள்ளையிட, பாதிரியார் அங்கிருந்து தப்பி ஓடுகிறார். தலை நகரத்திலுள்ள மன்னனுக்கு நெருக்கமான பாதிரியார், கடத்தல் மற்றும் கொள்ளை பற்றிய செய்திகளை மன்னரிடம் கூறுகிறார்.

இதனை அறிந்த கோஸ்லிக் தனது மூத்த மகன் மைக்கோலஸ் மீது கோபம் கொள்கிறான். மன்னனின் கோபத்தையறிந்த கோஸ்லிக் போருக்கு தயாராகும் நோக்கில், தனது அண்டை நிலப்பிரபுவான லாசரை அவருடன் போரில் சேருமாறு அழுத்தம் கொடுக்க மைக்கோலஸை அனுப்புகிறார். திட்டம் தோல்வியடைகிறது. அதற்குப் பழிவாங்கும் விதமாக மைக்கோலேஸ் லாசரின் மகள் மார்க்கெட்டா லாசரோவாவை தேவாலயத்தினுள்ளே கன்னியாஸ்திரியாக சேரவிருந்தபோது கடத்திச் செல்கிறான். திரும்பும் வழியில், மைக்கோலஸ் அவளை பாலியல் வன்புணர்வு செய்கிறான். ஆனால், எதிர்பாராவிதமாக இருவரும் காதலின் வலையில் விழுகின்றனர். மைக்கோலஸ் அவளைப் பாதுகாத்து நேசிக்கிறான். சூழும் வன்முறையிலும் அப்பாவித்தனத்தின் ரேகைகளை இருவரும் வாசிக்கிறார்கள்.

மிகவும் சுவாரஸ்யமான மற்றொரு காதலும் அங்கே நிகழ்கிறது. மைக்கோலசின் தங்கை அலெக்சாந்திராவும் பாதிரியாரின் மகன் கிறிஸ்டினும் காதலில் விழுகிறார்கள். அலெக்சாந்திரா அவளாகவே தன்னை விடுவித்துக் கொண்ட வலிமையான பறவை, ஒரு புரோட்டோ-பெண்ணியவாதி: என்ன செய்ய வேண்டும், யாருடன் உறங்க வேண்டும் என்று எந்த ஆணும் அவளிடம் சொல்ல முடியாது. அவள் தனது விருப்பத்தைத் தீர்ப்பதற்கும் தேர்ந்தெடுப்பதற்கும் தனது சொந்த முடிவுகளை மட்டுமே நம்புபவள். மார்கெட்டா, அலெக்சாண்டிரா இருவருமே காதலினால் கருவுறுகின்றனர்.

இருள் மற்றும் இரத்தம் கொண்ட அந்த போர்ச்சூழலில் மார்கெட்டா, அலெக்சாந்திரியாவின் இருப்பு ஒரு புது விதமான வெண்மையையும் வெளிச்சத்தையும் அளிக்கிறது. பழிவாங்கும் எண்ணமும், எதற்கும் வளைந்து கொடுக்காத, இன்னும் தீர்க்கப்படாத வஞ்சங்களை சுமந்தலையும் ஆண்களின் உலகத்திற்கு இதைப் போன்ற பெண்களே ஆறுதல்களை அளிக்கிறார்கள். அவர்களே உயிர்த்தலுக்காக போராடுகிறார்கள்.

ஆனால், விதி தனது சதிர் ஆட்டத்தை எப்போதோ தொடங்கிவிட்டது. அலெக்சாந்திரியாவை காதலித்த பாதிரியாரின் மகன் கொல்லப்படுகிறான். மன்னர் இராணுவத்தை அனுப்பி மார்கெட்டாவின் தந்தை லாசரை கோஸ்லிக்கிற்கு எதிராக கைகோர்க்க அழைக்கின்றார். லாசர் தன் மகளை மீட்க ஒத்துக்கொள்கிறார். கோஸ்லிக்கின் தொன்மைக் குடியும் பலம் வாய்ந்த மன்னரின் நவீனப் படையும் போர் புரிகின்றன. பெரும் படையுடன் மோதும் கோஸ்லிக்கின் சிறு படை தோல்வியடைகிறது, கோஸ்லிக் சிறைபிடிக்கப்படுகிறார்.

தன் தந்தையை மீட்க மைக்கோலேஸ் எடுக்கும் முயற்சியில் அவனும் வீழ்கிறான். மரணத்தின் தருவாயில் மைக்கோலசை திருமணம் செய்து கொள்கிறாள் மார்கெட்டா.

போர் முடிவடைகிறது. ஆனால், போரின் எச்சம் நிலமெங்கும் வீச்சதுடன் அப்பிக் கிடக்கின்றது. இது மற்றொரு போர் போல் காட்சியளிக்கிறது. தன் தந்தையால் ஏற்கனவே நிராகரிக்கப்படும் மார்கெட்டா, அலெக்சாந்திராவுடன் அந்த நிலத்தை விட்டு புதிய வாழ்க்கை தொடங்க பயணிக்கிறாள். இருவருக்கும் பிள்ளை பிறக்கறது. மன நலம் சிதைந்த அலெக்சாந்திரா பிரசவத்திற்குப் பின் தற்கொலை செய்துகொள்கிறாள். அந்த நிலத்தின் கடைசி தேவதையாக மார்கெட்டா இரு பிள்ளைகளையும் பராமரிக்கின்றாள்.

கிறிஸ்தவத்திற்கும் பாகனிசத்திற்கும் இடையிலான மோதலையும், தொன்மையான குலங்களுக்கும் மத்திய அதிகாரத்திற்கும் இடையிலான மோதலையும் பிரதிபலிக்கிறது மார்கெட்டா லாசரோவா. சிக்கலான கதையமைப்பைக் கொண்ட இப்படம் அதன் முரட்டுத் தனமான அனுகுமுறைக்காகவும், காட்சியமைப்புக்காகவும், மந்திர அழகியலுக்காகவும் போற்றப்படுகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவு பார்ப்பவர்களை வசியம் செய்யும் தன்மை கொண்டது. சப்தங்களை பயன்படுத்திய விதம் நாடக அரங்கினை நினைவு படுத்துகிறது. படம் முழுவதும் குரல்களின் எதிரொலி ஒலித்துக் கொண்டே இருக்கும். அது பார்வையாளனை அக்காலகட்டதிற்கே அழைத்து செல்கிறது. மேலும் இப்படத்தின் ஆடை வடிவமைப்பில் இயக்குநர் அதிக கவனம் செலுத்தியுள்ளார். பராகுவே கலைஞன் தியோடர் பிஸ்டெக் இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர். இவர் அமெதியூஸ் படத்தின் ஆடை வடிவமைப்புக்காக ஆஸ்கர் விருது பெற்றவர் என்பது குறிப்படத்தக்கது.

1967 ஆம் ஆண்டு வெளியான மார்கெட்டா லாசரோவா(Marketa Lazarová) செக் குடியரசின் ‘ஆல் டைம் பெஸ்ட்’ என இன்றளவும் கொண்டாடப்படுகிறது . இப்படைப்பு தர்காவெஸ்கியின் Andrei Rublev படத்துடன் ஒப்பிடப்படும் படைப்பாக கருதப்படுகிறது. பொஹீமியன் எழுத்தாளராக கொண்டாடப்படும் லாடிஸ்லாவ் வென்குயூரா(Vladislav Vančura) எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டது. 1930ஆம் ஆண்டு ஹிட்லரின் ஆட்சியில் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையின் நேரடி சாட்சியாக இருந்த லாடிஸ்லாவ் அதன் பாதிப்பில், வரலாறையும் இணைத்து இந்த நாவலை எழுதியிருக்கிறார். 1942ஆம் ஹங்கேரியைச் சேர்ந்த இவர் ஹிட்லரின் நாஜி படையால் கொல்லப்பட்டார்.

இப்படத்தை இயக்கியவர் ஃபிராண்டிசெக் லாசில்(František Vláčil). திரைப்பட இயக்குநர், ஓவியர், வரைகலை நிபுணர் என பல்வேறு முகங்கள் கொண்டவர். தனது உயர்தரமான கலைப்படைப்பிற்காக திரை ஆர்வலர்களால் போற்றப்படுபவர்.

பாரிஸ் டெக்சாஸ்

பிளைண்ட் பீஸ்ட்

கம் அண்ட் சீ

டாக் டே ஆஃப்டர்னூன்

24 ஃப்ரேம்ஸ்

நைஃப் இன் தி கிளியர் வாட்டர்

அவ் ஹசர்ட் பேல்தஸார்

துவிதா

பேலட் ஆப் நரயாமா

திங்கள், 15 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon