மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜூலை 2019

அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2

அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2

கொற்றவை

1710 காலவாக்கில் பாலாலயத்துக்காக அத்தி மரத்தில் செய்யப்பட்ட வரதர் கோயில் குளத்தில் மறைக்கப்பட்டிருக்கலாம். 1781இல்தான் அத்தி வரதர் அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளிப்பட்டார் என்பது அவரைக் குறித்த முதல் வரலாற்றுப் பதிவாகும். இந்த காலகட்டத்தின் அரசியல், சமூக, பொருளாதார சூழல்நிலை எவ்வாறு இருந்தது எனப் பார்ப்போம். 1781ஆம் ஆண்டு தமிழகத்தில், குறிப்பாக சென்னை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் தெருக்களில் கொத்துக் கொத்தாக மடிந்து விழுந்தனர். முதன்முதலில் தெளிவான தரவுகளுடன் ஆங்கிலேயர் எழுதிவைத்த பஞ்சம் இது. இதற்கான காரணம் உணவு, விளை பொருள்கள் மீதான விற்பனைத் தடை! வங்கத்திலிருந்து கப்பல்களில் அரிசியும் தானியமும் மதராஸ் வந்தன. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இதில் லாபம் பார்த்தது!

ஆங்கிலேயரான தாலியல், அரசு தானியக் கமிட்டி ஒன்றை நியமித்து, 1781ஆம் ஆண்டு தினசரி தானிய விலையை நிர்ணயம் செய்தது என்று எழுதியிருக்கிறார். 3 முதல் 6 ஆழாக்கு அரிசியின் விலை ஒரு ரூபாய்! அன்று அது பெரிய பணம். விற்பனைத் தடையை ஆங்கிலேயர் கொண்டுவரக் காரணம் ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனமான ஹைதர் அலி! இரண்டாவது ஆங்கில - மைசூரு போர் 1780ஆம் ஆண்டு தொடங்கியிருந்தது. அதன் காரணமாக தானியங்களை ஆங்கிலேய அரசு தன் படைகளுக்காகப் பதுக்கியது. இதனால், உண்ண உணவின்றி மக்கள் மாண்டனர்.

1781ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அன்றைய மதராஸ் ஆளுனர் சார்லஸ் ஸ்மித், ஹைதரின் மேல் மக்களுக்கு இருந்த பயத்தை விவரிக்கிறார். "மக்கள் ஊரைக் காலி செய்துகொண்டு கூட்டம் கூட்டமாக வெளியேறினர். பெரும் பணக்காரர்கள்கூடத் தங்கள் குடும்பங்களை ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர். கறுப்பர் நகரக் குடிமக்கள் பாதியாகக் குறைந்து போனார்கள்", என்று எழுதுகிறார்.

பஞ்சத்தின் எதிரொலி காஞ்சியிலும் இருந்தது. ஆனால் அதை விட முக்கியமாக, சி.எஸ். கிரோல் என்ற ஆங்கிலேய அதிகாரி, ஆங்கிலேயர் அவமானப்படும் விதமாக காஞ்சியில் நடந்தவற்றை தன் செங்கல்பட்டு, லேட் மெட்ராஸ், டிஸ்டிரிக்ட் புத்தகத்தில் விளக்குகிறார்.

"1780ஆம் ஆண்டு காஞ்சியின் மூன்று முக்கியக் கோயில்களின் நிர்வாகத்தார், தங்களது கோயில் சிற்பங்களை ஹைதர் அலியிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தனர். காஞ்சி வரதராஜப் பெருமாள், ஏகாம்பரேசுவரர் மற்றும் காமாட்சியம்மன் கோயில்களில் உள்ள வழிபாட்டு உருவங்களை (idols) கோடித் துணி போர்த்தப்பட்ட உடல்கள் போல (disguised as corpses) ஒளித்துக் கோயில்களிலிருந்து வெளியேற்றினார்கள்" என்று எழுதியிருக்கிறார்.

இதில் ஆங்கிலேயருக்கு என்ன அவமானம்? தங்கள் படைவலிமை மீது மக்கள் ஐயம் கொண்டதாக ஆங்கிலேயர் கருதினர்!

(இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரில் உயிரிழந்தவர்களுக்காக அயர் கூட் நிறுவிய நினைவு ஸ்தூபிகள்- புள்ளலூர்)

கோயிலில் பதுக்கப்பட்ட உணவு

காஞ்சிக்கு அருகில் 1780ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி நடந்த புள்ளலூர் இரண்டாம் ஆங்கிலேய - மைசூரு போரில் ஹைதரும், திப்புவும் வில்லியம் பெயிலி, ஹெக்டர் மன்ரோ ஆகிய இரு ஆங்கிலேயப் படைத் தளபதிகளுடன் போரிட்டனர். இதில் ஹெக்டர் புள்ளலூர் சென்றடைந்த கதை சுவாரஸ்யமானது. மதராஸிலிருந்து அனுப்பப்பட்ட ஹெக்டர், நெல்லூரிலிருந்து அனுப்பப்பட்ட பெயிலியைச் சந்தித்துக் கூட்டுப் படைகள் ஹைதர் படைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது திட்டம். பெயிலியைக் காஞ்சியில் எதிர்பார்த்த ஹெக்டர், எட்டு நாள்கள் தாங்கக்கூடிய உணவு மற்றும் போர்த்தளவாடங்களுடன் காஞ்சியை ஐந்தாம் நாள் அடைந்தார். அங்கு "இந்துக் கோயில்" ஒன்றில் தங்கிய ஹெக்டர், காஞ்சியில் உள்ள ஆற்காடு நவாப் முகமது அலியின் ஆள்களிடம் உணவு மற்றும் தளவாடங்களுக்கு உதவி கோரினார். அவர் தேடிய உதவி கிடைக்கவில்லை. இரண்டு நாள்களுக்கான உணவு மட்டுமே அந்தச் சிறிய, ஆளற்ற நகரத்தில் அவருக்குக் கிடைத்தது. அதை கோயிலில் பதுக்கினார்.

ஹெக்டர் எந்தக் கோயிலில் பாசறை அமைத்தார் என்ற நேரடிக் குறிப்புகள் இல்லை. காஞ்சியில் ஒரு இந்துக் கோயில் என்றே ஹெக்டர் தன் அறிக்கையில் குறிப்பிடுகிறார். ஆனால் ஆங்கிலேயருக்கு அணுக்கமான அவர்களது பாசறை அமைக்கப்பட்ட கோயில் வரதராஜர் கோயிலாகத்தான் இருந்திருக்க வேண்டும்! இதற்கான காரணத்தை நாம் பின்னர் காண்போம்.

காஞ்சியிலிருந்து கொரற்றலையாறு ஓரம் ஹெக்டர் செல்கையில் அவர் வருகையை உணர்ந்துகொண்ட ஹைதர், ஏற்கனவே ஆற்றின் அக்கரையில் தங்கியிருந்த பெயிலியைத் தனிமைப்படுத்தி விரட்டினார். சரணடைய வந்த பெயிலியையும் அவரது படைகளையும் ஈவிரக்கம் இன்றித் துண்டு துண்டாக வெட்டி வீசினார். சில மணிநேரமே நீடித்தது இந்தப் "போர்"! பயந்து சிதறிய ஹெக்டர் தலைமையிலான படைகள் மீண்டும் காஞ்சிக்கு ஓடின. கோயிலில் தஞ்சம் புகுந்தார் ஹெக்டர். அங்கிருந்து மதராசுக்குத் தப்ப எண்ணியவர், தன்னிடம் உள்ள தளவாடங்களை காஞ்சியின் குளத்தில் மூழ்கடித்துச் சென்றார் என்று தன் அறிக்கையில் குறிப்பிடுகிறார் அவர்.

அதற்குப் பிறகு இந்த பொருள்களை மீட்பதற்கு குளம் அனேகமாகத் "தூர்" வாரப்பட்டிருக்க வேண்டும்", அல்லது ஆயுதங்கள், வெடி பொருள்கள் அமிழ்க்கப்பட்டதால் தண்ணீர் விஷமாகியிருக்கும் என்ற பயத்தால் மக்களால் / படைகளால் சுத்தப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பெரும்பாலும் போரில் பங்கெடுக்க வரும் படைகள் பாதுகாப்பு கருதி குளங்களின் நீரைப் பருகுவதில்லை! குடிக்கும் நீரில் விஷம் கலப்பது போர்த் தந்திரமாகவே அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. பயத்தைத் தோற்றுவிக்கவும் செய்யப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயரின் இந்தத் தோல்வி காஞ்சியை நடுங்கச் செய்தது. போர் நடந்த அதே 1780ஆம் ஆண்டு வழிபாட்டு உருவங்களை அங்கிருந்து அவசர அவசரமாக அப்புறப்படுத்தினர் மூன்று கோயில் நிர்வாகத்தினர். ஹைதர் எப்போது வேண்டுமானாலும் காஞ்சியைத் தாக்கக்கூடும் என்ற பேரச்சம் நிலவியது.

1781ஆம் ஆண்டு ஆகஸ்டு 27 அன்று அதே புள்ளலூரில் அயர் கூட் என்ற ஆங்கிலேயப் படைத்தலைவனின் தலைமையில் மீண்டும் ஹைதர், திப்பு படைகள் மோதின. இந்தப் போர் முடிவுக்கு வந்தபோது இருவருமே இந்தப் போரில் தாங்களே வென்றதாக அறிவித்துக்கொண்டார்கள்! திப்பு தன் கோடை அரண்மனையில் புள்ளலூர் வெற்றியை ஓவியமாக வரையச் செய்தார். அயர் கூட் தன்னுடன் போரிட்டு மடிந்த ஜேம்ஸ் ஹிஸ்லாப் மற்றும் ஜார்ஜ் பிரவுன் ஆகிய இரு வீரர்களுக்கும், புள்ளலூர் போரின் வெற்றியைக் கொண்டாடவும், அவர்கள் நினைவாகவும் ஸ்தூபிகளை புள்ளலூரில் நிர்மாணித்தார்! "போரில்" வெற்றி பெற்ற அயர் கூட் காஞ்சிக்குச் செல்ல, அவரைத் துரத்திச் சென்ற ஹைதர் அலி, அவ்விடம் அவர் இல்லை என்பது தெரிந்து அங்கிருந்து அகன்றார். காஞ்சிக்கு வந்த பெரும் ஆபத்து அத்துடன் நீங்கியது!

கிரோல், தன் செங்கல்பட்டு புத்தகத்தில் 1785ஆம் ஆண்டு மதராஸ் ஆளுனர் அன்றைய சந்திரகிரி ஆளுனருக்குக் கடிதம் ஒன்றை எழுதியதாகக் குறிப்பிடுகிறார். காஞ்சி வரதராஜ சுவாமி கோயிலுக்கு திருப்பதியிலிருந்து சில சிலைகள் கொண்டுவரப்படும் என்றும், அதைக் கொண்டுவரும் அந்தணருக்குத் தகுந்த படைப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோருகிறது அந்தக் கடிதம். பெரும்பாலும் இதுபோலச் சிலைகளைக் கோயில்களிலிருந்து பாதுகாப்புக் கருதி அப்புறப்படுத்தும்போது அவற்றை எடுத்துச் செல்லும் அந்தணர்களுக்குக் காவலாகப் பெரும் படைகளை ஆங்கிலேயர் அனுப்பிவைப்பது வழக்கம். இந்தியர்களுடன், அந்தணர்களுடன், இந்துக்களுடன் "இணக்கமாக" இருப்பதைக் காட்டிக்கொள்ள அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பு அது என்றும் கூறுகிறார் கிரோல்.

ஹெக்டர் குறிப்பிட்ட இந்துக் கோயில் வரதராஜப் பெருமாள் கோயிலாகத்தான் இருக்க வேண்டும் என்பதற்கு காரணம், பெரும் திருவிழாவின் (பிரம்மோத்சவத்தின்) மூன்றாம் நாள் வரதருக்கு அணிவிக்கப்படும் மகரகண்டிகை என்னும் ஆபரணம். இந்த மகர கண்டிகை எனும் ஆபரணம் யாரால் எப்பொழுது வரதருக்கு வழங்கப்பட்டது என்பதை ஆய்வோம். ஏறக்குறைய அத்தி வரதர் வெளிப்பட்ட காலத்தில் ஆங்கிலேயரான கிளைவ் வழங்கிய ஆபரணம் என்ற குறிப்பு கோயில் தரவுகளில் மகர கண்டிகை குறித்து உள்ளது. வரதரைப் பார்த்திருந்த, அவர் அருள் கிடைத்தது என்று நம்பிய காரணத்தால் மட்டுமே மகர கண்டிகை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால், வரதராஜர் கோயிலில்தான் ஆங்கிலேயரின் படைப் பாசறை இருந்திருக்க வேண்டும்.

மகர கண்டிகை குறித்த குறிப்புகள் கோயில் தரவுகளில் இருப்பதுபோல, அத்தி வரதர் பற்றிய வினாக்களுக்கான விடைகளும் கோயில் தரவுகளில் இருக்கக்கூடும். 1781ஆம் ஆண்டு அத்தி வரதர் முதன்முதலில் வெளிப்பட்டிருப்பதால், அதன் பின் ஒவ்வொரு 40ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்நிகழ்வு தொடர்ந்து நடந்திருக்கும் அல்லவா? 1939, 1979, 2019 என்று 40 ஆண்டு இடைவெளி சரியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 1781ல் இருந்து 1939 வரை உள்ள காலகட்டத்தில் 40 ஆண்டு சுழற்சியில் இரண்டு ஆண்டுகள் விடுபட்டிருக்கின்றன! இது எதனால் என்று தெரியவில்லை. இதுவும் ஆய்வுக்குரியதே!

வரலாற்று நோக்கில் இந்தக் வினாக்களுக்கு விடையளிக்கக் கோயில் தரவுகள் மட்டுமல்லாமல், மெட்ராஸ் கசெட்டியர், செங்கல்பெட் மானுவல், மைசூர் கசட் போன்ற ஆங்கிலேயரது குறிப்புகள் பற்றிய ஆய்வுகளும், இஸ்லாமியரின் குறிப்புகளும் விரிவாக ஆராயப்பட வேண்டும். இவை விரிவாக ஆராயப்படாத வரையில், அத்தி வரதர் பற்றிய கட்டுக்கதைகள்தான் வரலாறாகத் திரித்து முன்வைக்கப்படும். வாசித்தலும் உள்வாங்கலும் கூர் சிந்தனையும் மட்டுமே நம் கேள்விகளுக்கு விடை தரும்!

தகவல் உதவி:

1. டயலாக் அண்டு ஹிஸ்டரி: கன்ஸ்ட்ரக்டிங் சவுத் இண்டியா, 1795-1895, யூஜின் எஃப். இர்ஸ்சிக்

2. செங்கல்பெட், லேட் மெட்ராஸ், டிஸ்ட்ரிக்ட் (செங்கல்பெட் மானுவல்), சி.எஸ்.கிரோல்

3. ரிப்போர்ட் ஆஃப் ஹெக்டர் மன்ரோ, மைசூர் கசெட்டியர்- வால்யூம் 2, பார்ட் 4

4. லேன்ட், பாலிடிக்ஸ் அண்டு டிரேட் இன் சவுத் ஏசியா, எஸ்.சுப்பிரமணியம்

5. மெமராண்டம், தாலியல்

6. அங்கூரார்ப்பணம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை, 1958

பகுதி 1

மேலும் படிக்க

அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்

நிர்வாகிகள் விலகுவதை தடுக்க...சசிகலா போட்ட பட்ஜெட்!

அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!


வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

சனி 13 ஜூலை 2019