மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜூலை 2019

அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!

அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!

கொற்றவை

தமிழகமே அத்தி வரதர் அதிசயத்தைக் கடந்த சில நாள்களாகப் பேசிக்கொண்டிருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் (48 நாள்கள்) மட்டுமே வெளியே தோற்றம் தரும் வரதர் அல்லவா? ஆத்திகர், நாத்திகர் என்று அனைவரையும் கவர்ந்திருக்கிறார் வரதர். அத்தி வரதரைக் காண மக்கள் அலைமோதுகிறார்கள். அத்திவரதரைச் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். நாள் ஒன்றுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் 500 ரூபாய், அதுவும் 500 நபர்களுக்கு மட்டும்!

எவ்வளவு முன்னேற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அரசின் அத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி இரு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கோயில் அருகே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அதை எதிர்த்துத் தீக்குளித்து மரணமடைந்திருக்கிறார், பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தாக்கியதால் இளைஞர் ஒருவர் மரணமடைந்ததாக அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இதையெல்லாம் தாண்டி, அத்தி வரதரைக் காண மக்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதற்கு வி.ஐ.பி.களும் வி.ஐ.பி.கள் வீட்டு அம்மணிகளும் விலக்கல்ல! சிபாரிசுகளுக்குப் பஞ்சமில்லை!

மறையும் வழிபாட்டு உருவங்கள்

1781ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று முதல்முறையாக அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு ஒரு மண்டலம் கோயிலில் வாசம் செய்த பின் மீண்டும் குளத்துக்குள் இறக்கப்பட்டிருக்கிறார் வரதர் என்கிறது கல்வெட்டுச் செய்தி. அதற்கு முன் அத்தி மரத்தால் செய்யப்பட்ட வரதர் வெளியே தோன்றியதாகவோ, 40 ஆண்டுக்கொரு முறை தோன்றி சேவை சாதித்ததாகவோ ஆழ்வார்கள் பாசுரங்களிலோ, கல்வெட்டுகளிலோ குறிப்புகள் இல்லை! ஆனால் குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் தோன்றி, வழிபாட்டில் இருந்து, பின் மறைக்கப்படும், மறையும் வழிபாட்டு உருவங்கள் தமிழகத்துக்குப் புதிதல்ல!

சமீபத்தில் தன்னார்வலர்கள் குழு ஒன்று 162 ஆண்டுகளுக்குப் பின் நார்த்தாமலை தலையருவிசிங்கம் சுனையின் நீரை வடித்து அங்கிருந்த சுரகரேசுவரர் லிங்கத்தை வெளிக்காட்டி பூசைகள் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 162 ஆண்டுகளுக்கு முன் 14 மே, 1857 அன்று மன்னர் ராமச்சந்திரத் தொண்டைமான், சுனை நீரை வெளியேற்றி தன் மனைவி ஜானகிபாயுடன் சுரகரேசுவரரை வணங்கியதாகக் குடைவரையின் மேலுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. விடேல்விடுகு முத்தரையன் மகனான சாத்தன் பழியிலி என்ற குறுநில மன்னன் இந்தக் குடைவரையை 9ஆம் நூற்றாண்டில் உருவாக்கினான் என்கிறது வரலாறு. சுனை நீர் பெருகி, நீர் அகற்றப்படாவிட்டால் இந்த குடைவரைக் கோயில் நீருக்குள் மூழ்கியே இருக்கும்!

அதே போல மேட்டூர் அணை நீர் வற்றியதும் காட்சி தரும் மேட்டூர் ஜலகண்டேசுவரர் கோயிலும் உண்டு! மேட்டூரில் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தப் புராதனக் கோயில், 1920களில் அணை அமைக்கப்பட்ட போது நீருக்குள் மூழ்கியது. ஆனால் நீர் வறண்டு நந்தி தெரிந்து, கோயிலின் கோபுரமும் தெரியும்போது, மக்கள் அங்கு சென்று பூசைகள் செய்வது வழக்கம். 2013ஆம் ஆண்டு கோடையில் அணை முற்றிலும் வறண்டுவிட, ஜலகண்டேசுவரர் பூசைகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. மழைக்காலத்தில் அணை நீர் மீண்டும் கோயிலை மூடிவிட்டது! தலக்காடு காவிரியாற்றினுள் பஞ்சலிங்கக் கோயில்களும் இவ்வாறே வண்டல் மணல் மூடியும், பின் அது சுத்தப்படுத்தப்பட்டு வணங்கப்படுவதும் உண்டு. இதேபோல கோவாவின் பாம் ஜீசஸ் பசிலிக்காவில் உள்ள கிறிஸ்துவ மத போதகரான ஃபிரான்சிஸ் சேவியரின் பதப்படுத்தப்பட்ட உடல் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. சென்ற 2014-2015ஆம் ஆண்டு வைக்கப்பட்ட அவரது உடல், அடுத்து 2024-2025ஆம் ஆண்டு மீண்டும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

பௌத்த மதத்திலும் இந்த குறிப்பிட்ட கால வழிபாடு உண்டு. இலங்கையின் கண்டி நகரில் உள்ள ஸ்ரீ தலத மலிகவா (தூய பல் கோயில்) கோயிலில் புத்தரின் பல் மிச்சங்கள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை இந்த மிச்சங்கள் நகரைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த வழக்கம் பொ.ஆ. 5ஆம் நூற்றாண்டு முதல், கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளாகத் தொடர்கிறது! அதேபோல கர்நாடகத்தின் பிரபல சமணக் கோயிலான சரவணபெலகோலாவில் உள்ள கோமதேசுவரரின் (பாகுபலி) திரு-உருவுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமஸ்தகாபிஷேகம் என்னும் நீராட்டு நடைபெறுகிறது. இதுபோலப் பல்வேறு மதங்களிலும் குறிப்பிட்ட காலச் சுழற்சியில் இறை உருவங்களை வழிபடும் வழக்காறுகள் விரவிக் கிடக்கின்றன.

கோயில் நகரமான காஞ்சியின் மீது பல்வேறு படையெடுப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், காஞ்சி, திருவரங்கம் போன்ற தமிழகத்தின் முக்கியக் கோயில்களின் மீது தங்கள் பார்வையைப் பதித்தபடியேதான் இருந்திருக்கிறார்கள். கோல்கொண்டா சுல்தான், விஜயநகர மன்னர்கள், ஆற்காடு நவாப், மைசூரு நவாப், மராட்டியர், ஆங்கிலேயர், ஃபிரெஞ்சுக்காரர்கள் என்று 15ஆம் நூற்றாண்டுக்குப் பின் காஞ்சியின் மேல் தங்கள் அதிகாரத்தைச் செலுத்திய அரசுகள் பல!

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. ஆழ்வார்களால் பாடப்பெற்ற இத்தலம் பல்வேறு வழிபாட்டு இடையூறுகளைக் கடந்து இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோயிலின் கருட சேவை உற்சவமும் தேர்த் திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றவை.

அத்தி வரதரின் வரலாறு என்ன?

இந்தக் கோயிலில் பல சிறப்புகள் இருந்தாலும் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சி தரும் இந்த அத்தி வரதரின் வரலாறு என்ன என்பதை நாம் தேடிப் பார்ப்போம். பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் குடமுழுக்கு நடைபெறும். இந்தக் குடமுழுக்குக்கு முன்னால் கருவறை உள்பட கோயிலின் பகுதிகளில் மராமத்தும் புனரமைப்புப் பணிகளும் நடைபெறும். அந்தக் காலகட்டத்தில் கருவறையில் உள்ள திரு உருவங்களின் சக்தி கும்பத்துக்கு மாற்றப்படுகிறது. கோயில் வளாகத்தில் இதற்கென பாலாலயம் என்னும் இளம் கோயில் ஒன்று உருவாக்கப்படும். இந்த பாலாலயத்தில் அத்தி மரத்தாலான திரு உருவங்கள் அமைக்கப்பட்டு இந்தக் கும்பத்தில் உள்ள சக்தி அவற்றுக்கு மாற்றப்படும். குடமுழுக்கு வரை இவ்வுருவங்களே வழிபாட்டில் இருக்கும். குடமுழுக்கின்போது இவற்றின் சக்தி கோயில் மூலவருக்கு மாற்றப்பட்டு, பாலாலய உருவங்கள் கோயிலில் இருந்து அகற்றப்படும். இவ்வாறு அகற்றப்படும் உருவங்கள் குளங்களிலோ நீர்நிலைகளிலோ விடப்படுகின்றன.

இதற்கு உதாரணமாக 1958ஆம் ஆண்டு திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் குடமுழுக்குக்கு முன் செய்யப்பட்ட புனரமைப்புப் பணிகளைச் சொல்லலாம். அப்போது அத்தி மரத்தால் ஆன வெங்கடேசப் பெருமாளின் திரு உருவம் செய்யப்பட்டு பாலாலயம் அமைக்கப்பட்டது. இந்த பாலாலயம் 25-10-1957 முதல் 01-11-1957 வரை வழிபாட்டில் இருந்துள்ளது.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடந்ததாகக் கூறும் முதல் வரலாற்றுக் குறிப்பு 1487ஆம் ஆண்டு என்கிறது. விஜயநகரப் படைத் தளபதியான விருப்பாட்சி தண்டநாயகன் என்பவர் வரதரையும் தாயாரையும் மீண்டும் எழுந்தருளச் செய்ததாகக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. இதற்குப் பிறகும் காஞ்சி மீது தொடர்ந்து படையெடுப்பு அச்சுறுத்தல்கள் நீடித்தன. 1690ஆம் ஆண்டு அவுரங்கசீப் முகலாயப் பேரரசராக இருந்த காலத்தில் காஞ்சியின் ஃபவுஜ்தார் (படைத் தலைவன்) மற்றும் திவானாக நியமிக்கப்பட்டிருந்தவர் அலி மர்தன் கான். முகலாயப் படைகளை அப்போது காஞ்சியை அடுத்த செஞ்சிப் பகுதியில் நிர்வகித்துவந்தவர் சுல்ஃபிகர் கான். 1692ஆம் ஆண்டு முகலாயரிடமிருந்து மராட்டியர் காஞ்சியைக் கைப்பற்றினர். 1688ஆம் ஆண்டே முகலாயர் படையெடுப்பு வரக்கூடும் என்று உணர்ந்து கொண்ட காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் ஜீயர்கள், வரதரைக் காக்கும் பொருட்டு வழிபாட்டு உருவத்தை இன்றைய திருச்சி மாவட்டத்தில் இருக்கும் உடையார்பாளையத்துக்கு இடம் மாற்றியதாக வரலாற்றுத் தரவுகள் சொல்கின்றன.

ஆபத்து நீங்கிய பின், 1710ஆம் ஆண்டு பரமஹம்ச பரிவாஜகசார்ய அட்டாங் ஜீயர் முயற்சியில் மீண்டும் காஞ்சி வந்து சேர்ந்தார் மூலவரான வரதராஜர். அவரைக் கொண்டுவந்து காஞ்சி சேர்த்தது ஆற்காடு நவாபின் படையில் முக்கியப் பொறுப்பில் இருந்த இஸ்லாமியரான ராஜா தோடர்மால்! இந்த ராஜா தோடர்மால் குடும்பத்துக்கு காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் மட்டுமல்லாமல் திருமலை திருப்பதியிலும் சிற்பங்கள் உண்டு! 1710ஆம் ஆண்டு வரதராஜர் காஞ்சி திரும்பியதற்குச் சற்று முன்னதாகவோ அல்லது பின்பாகவோ புனரமைப்புப் பணிகளும் குடமுழுக்கும் நடைபெற்றிருக்கக்கூடும்.

கோயில்களில் ‘போர்க்கால’ நடவடிக்கைகள்!

இந்தக் காலகட்டத்தில் இஸ்லாமியர் படையெடுப்புக்கு அஞ்சி கோயில் திரு உருவங்கள் மற்றும் புழங்கு பொருள்கள் காக்கப்பட வேண்டி, பல்வேறு வகைகளில் மறைக்கப்பட்டன.

1. மதமாற்றம் செய்ய ஏதுவாக, பிடிக்கப்பட்ட நகரங்களின் வழிபாட்டுத் தலங்களைச் சூறையாடி அழிப்பது என்பதை ஒரு போர்த் தந்திரமாகக் கொண்டிருந்தனர் பண்டைய மன்னர்கள்.

2. ஆனால், மதம் என்பதையும் தாண்டி இந்த மன்னர்கள் கோயில்களில் பெரும் செல்வம் இருந்ததை எப்போதும் அறிந்தே வைத்திருந்தவர்கள் என்பதால், நகரைக் கைப்பற்றியதும் அதன் கோயில்களைச் சூறையாடத் தயங்கியதே இல்லை. அரங்கனே தில்லிக்கு பயந்து ஆண்டுக்கணக்கில் ஒளிக்கப்பட்டு வந்தவர்தான்!

3. கோயில்களில் உள்ள செப்புத் திருமேனிகளின் உலோகம், ஆயுதத் தளவாடங்கள் செய்யப் பயன்பட்டிருக்கிறது. கோயில் ஒன்றைக் கைப்பற்றியதும் அதன் செப்புத் திருமேனிகள் மற்றும் பூசை பொருள்களை உருக்கி தளவாடங்கள் செய்வதன் மூலம் போர் நெருக்கடி காலத்தில் சுரங்கங்களில் வெட்டி எடுத்து, உலோகத்தைப் பிரித்து ஆயுதங்கள் செய்ய ஆகும் நேர, பொருள் விரயத்தைத் தவிர்த்திருக்கிறார்கள்.

ஆகவேதான் இஸ்லாமிய / ஐரோப்பியப் படைகள் நெருங்குவது அறிந்ததும் கோயில்களில் செப்புத் திருமேனிகளை செப்பு பூசைப் பொருள்களுடன் மண்ணுக்கு அடியில் புதைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. ஆபத்து நீங்கியதும் அவற்றை வெளிக்கொணர்ந்துள்ளார்கள். அவ்வப்போது மண்ணுக்கடியில், நிலவறைகளில், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் அண்மையில் இருந்து நமக்குக் கிடைக்கும் இந்த பொருள்கள் அப்படி ஒளிக்கப்பட்டவையே! கல்லாலான திரு உருவங்களின் மேல் சுதை பூசி மறைக்கும் தந்திரமும், வழிபாட்டு உருவத்தை மறைத்துச் சுவர் எழுப்பி வேறோர் சிலையைக் கண்துடைப்புக்காக நிறுவும் தந்திரமும் இஸ்லாமிய / ஐரோப்பிய படையெடுப்புகளின்போது தொடர்ச்சியாகச் செய்யப்பட்டுள்ளதற்கு வரலாற்றுத் தரவுகள் உள்ளன.

(கட்டுரையின் தொடர்ச்சி மதியம் 1 மணிப் பதிப்பில்)

பகுதி 2

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

நீதிமன்றத்திற்கு சவாலா? தலைமை நீதிபதி கேள்வி!


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 13 ஜூலை 2019