மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 17 செப் 2019

நேற்று ஆடு மேய்த்தவர்: நாளை கால்நடை மருத்துவர்!

நேற்று ஆடு மேய்த்தவர்: நாளை கால்நடை மருத்துவர்!

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்தது சுண்டப்பூர் கிராமம். தமரைக்கரையில் இருந்து மேற்கில் 28, கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டினுள் இருக்கும் இந்த மலைக்கிராமத்தில் ஊராளிகள் என்ற பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள குழந்தைகள் எல்லோருமே பெற்றோர்களுடன் சேர்ந்து ஆடு, மாடுகள் மேய்க்கச் செல்வது வழக்கம். ஒரு சிலர் காடுகளில் கிழங்குகள் பறிக்க, தேன் எடுக்க என ஏதாவது ஒரு வேலைக்குச் சென்று விடுவார்கள். குழந்தைகள் பள்ளிக்குப் போகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மலைப்பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு ஆசிரியர்களும் வருவதில்லை.

இவ்வூரைச் சேர்ந்தவர் உடுமுட்டி. விவசாயத் தொழிலாளியான இவருக்கு ஆண் 9, பெண் 2, என 11, குழந்தைகள். இதில் ஐந்தாவது குழந்தையின் பெயர் சந்திரன். சந்திரனுக்கு எட்டு வயது ஆகும் வரை ஆடு, மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான்.

இந்த மலைப்பகுதியில் உள்ள ஏராளமான குழந்தைகள் இப்படி சிறுவயதிலேயே தொழிலாளர்களாக மாறிக்கொண்டிருப்பதைத் தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் சுடர் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நடராசன், இந்த மலைப்பகுதியில் உள்ள பல ஊர்களில் தொழிலாளர் பள்ளிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

அப்படி சுண்டப்பூரில் தொடங்கிய ஒரு பள்ளியில் சேர்ந்து படித்த சந்திரன், ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். படிப்பில் சுட்டியாக இருந்ததால், ஆறாம் வகுப்புக்கு குன்றியம் என்ற ஊரில் உள்ள ஆர்.சி.உயர்நிலைப் பள்ளிக்கும், பத்தாம் வகுப்புக்குப் பிறகு கோபி வைர விழா மேல்நிலைப் பள்ளிக்கும் சந்திரனைக் கூட்டிக்கொண்டுபோய் சேர்த்ததும் சுடர் நடராசனே.

2018, மார்ச் மாதம் +2 தேர்வு எழுதிய சந்திரன், தமிழில், 57, ஆங்கிலத்தில், 44, விலங்கியலில் 50, கருத்தியலில் 100-க்கு 93, செய்முறை 1 மற்றும் 2ல், ஒவ்வொன்றிலும் 100 என மொத்தம் 444 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவர் படிப்புக்குச் சந்திரன் விண்ணப்பித்ததில், அவருக்குப் பழங்குடியினர் பிரிவில் முதலிடம் கிடைத்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான செய்தியைச் சந்திரன் உடனே தெரிந்து கொள்ள வழியில்லை. காரணம், சந்திரன் குடியிருக்கும் சுண்டப்பூர் மற்றும் கொங்காடை மலைக் கிராமங்களிலிருந்து 20கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்றால் தான் செல்போன் தொடர்புகள் கிடைக்கும் என்ற நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை சுண்டப்பூர் சென்று சந்திரனைச் சந்தித்து உனக்குக் கால்நடை பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துள்ளது என்ற செய்தியை சொல்லியுள்ளார் சுடர் நடராசன்.

ஆனால், சந்திரனின் முகத்தில் எந்த விதமான மகிழ்ச்சியும் தெரியவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு பேசிய சந்திரனின் அப்பா உடுமுட்டி "பையன் இதுவரைக்கும் படுச்சதே போதுங்க சாமி. இனி ஊருக்குள்ளே எதாவது வேலை செஞ்சி பொளச்சுக்கிட்டுங்க. மெட்ராசுக்கு அனுப்பிப் படிக்கவைக்கும் அளவுக்கு எங்கிட்டே வசதியில்லிங்க..." என்று சொல்லியுள்ளார்.

"தமிழகத்தின் பாரம்பரிய மாட்டு இனமான பர்கூர் மாடுகள் வளரும் பர்கூர் மலைப்பகுதியில் அந்த மாடுகளை மேய்த்துக்கொண்டும், அதன் பாலைக் குடித்தும் வளர்ந்த ஒரு குழந்தை கால்நடை மருத்துவராகி, பர்கூர் மாட்டு இனங்களைப் பாதுகாக்கும் பணிக்கு வருவதென்பது மிகப்பெரிய சாதனை. சந்திரனை அந்த இடத்துக்குக் கொண்டுபோக முயற்சி எடுத்துள்ளேன்." என்கிறார் சுடர் நடராசன்

சுடர் நடராசன் மொபைல் நம்பர்:

+919994277404

+918248963723

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon