மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்

மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 11) பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பேசுகையில், “இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்ததற்கு மட்டும் வருத்தமடையவில்லை, நமது நாட்டின் ஜனநாயகமும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கர்நாடகம், கோவா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களைப் பார்க்கிறோம். இதெல்லாம் பாஜகவின் அரசியல் இலக்குகளை மேம்படுத்த உதவலாம். ஆனால், அதே சமயத்தில் நாட்டின் பொருளாதார இலக்குகள் சீரழிந்து வருகின்றன.

இது வெறும் அரசியல் பிரச்சினையாக மட்டும் தோன்றலாம். ஆனால், நாட்டின் பொருளாதாரம், அந்நிய முதலீட்டாளர்கள், மதிப்பீட்டு நிறுவனங்களின் மீது எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்று நான் கருதுகிறேன். கடந்த இரண்டு நாட்களில் ஜனநாயகம் பாழாகியுள்ளது. இதுபோன்ற சூழல்கள் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பையே முழுமையாகச் சீரழித்துவிடும். இதையெல்லாம் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நிதியமைச்சரின் பட்ஜெட் உரை சுவையற்றதாக இருக்கிறது. முதலீட்டையும் சேமிப்புகளையும் ஊக்குவிக்க எவ்வித வழிமுறைகளும் பட்ஜெட்டில் இல்லை. ஒட்டுமொத்த வருவாய், செலவினம், நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட பொருளாதார விவரங்கள் பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை. பட்ஜெட் ஆவணங்களை அனைத்து மக்களும் புரட்டிப் பார்ப்பதில்லை. ஆகையால் நிதியமைச்சர் அவ்விவரங்களைத் தெரிவித்திருக்க வேண்டும்.

இதுபோல பொருளாதார விவரங்கள் இல்லாத பட்ஜெட் உரை இதுவரை நிகழ்ந்ததில்லை. எதிர்காலத்தில் வரும் பட்ஜெட் உரைகளில் பொருளாதார விவரங்களும் இடம்பெறுவதை நிதியமைச்சர் உறுதிசெய்ய வேண்டும். இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நன்று, மிக நன்று. இதைவிட சிறந்த இலக்குகளை நான் தருகிறேன். 1990-91ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 320 பில்லியன் டாலர். 2003-04ஆம் ஆண்டில் 618 பில்லியன் டாலராக பொருளாதாரம் உயர்ந்தது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபின் நான்கே ஆண்டுகளில் 1.22 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உருமாறியது. 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2.48 லட்சம் கோடி டாலராக மீண்டும் இரு மடங்கு உயர்ந்தது. அதேபோல அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலராக உயரும். அதற்குப் பிரதமரோ, நிதியமைச்சரோ தேவையில்லை.

பொருளாதாரம் நலிவுற்று இருக்கிறது. பட்ஜெட் உரையோ சுவையற்றதாக இருக்கிறது. நலிந்த பொருளாதாரத்துக்குத் தைரியமான அணுகுமுறை வேண்டும். தைரியமான முடிவுகளை எடுக்க பிரதமருக்குப் போதிய உறுதி இருக்கிறது என நம்புகிறேன். பட்ஜெட்டில் இருப்பதெல்லாம் நிறைவேறும் என நம்பவைக்கும் வகையில் பட்ஜெட் அமையவில்லை.

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த கட்டமைப்பில் சீர்திருத்தங்களை உறுதி செய்ய வேண்டும். பட்ஜெட்டில் ஒரே ஒரு கட்டமைப்பு சீர்திருத்தத்தையாவது காட்டுங்கள். உள்நாட்டு சேமிப்பை மேம்படுத்த பட்ஜெட்டில் எதுவுமே கூறப்படவில்லை” என்று பேசினார்.

முதல் பெண் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததில் பெருமை அடைவதாகக் கூறிய சிதம்பரம், பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்ற பாரதியாரின் பாடலை பாடினார். அப்போது, எதிர் தரப்பில் அமர்ந்திருந்த நிர்மலா சீதாராமன் புன்னகைத்தார்.

ஏற்கெனவே பட்ஜெட் உரையின்போது நிர்மலா சீதாராமன் புறநானூறு வரிகளைச் சுட்டிக்காட்டினார். அவருக்குப் பதிலளிக்கும் வகையில் பட்ஜெட் விவாதத்தின்போது திருக்குறளைச் சுட்டிக்காட்டினார் திமுக எம்.பி ஆ.ராசா. இந்த வரிசையில் தற்போது பாரதியார் பாடலைச் சுட்டிக்காட்டியுள்ளார் சிதம்பரம்.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon