மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

விமர்சனம்: போதை ஏறி புத்தி மாறி!

விமர்சனம்: போதை ஏறி புத்தி மாறி!

தன் திருமணத்துக்கு முன்தினம் நாயகன் உட்கொள்ளும் போதையால் ஏற்படும் சீரியஸ் ‘ஹேங்க்-ஓவரே’ போதை ஏறி புத்தி மாறி.

அறிமுக நாயகன் தீரஜ், ப்ரதாயினி, துஷாரா, ராதா ரவி, சார்லி, அஜய் நடித்திருக்கின்றனர். தயாரிப்பு: ஸ்ரீநிதி சங்கர், கதை & இயக்கம்: சந்துரு K R, ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியெம், படத்தொகுப்பு: V.J சாபு ஜோசஃப், இசை: கேபி, எழுத்து: கதிர் நடராசன்.

பட ஆரம்பத்திலேயே சிவப்பு நிற கோகோயின் போன்ற பவுடரை உட்கொள்கிறான் நாயகனின் நண்பன். அந்தப் போதையினால் எந்த எல்லை வரை செல்கிறான் என்பதை காட்டி முன்னரே நம்மை திரைக்கதைக்குத் தயார்படுத்தி விடுகிறார்கள். இரண்டு புள்ளிகளாகப் படம் விரிகிறது.

1. சென்னையில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதை பழக்கத்தைத் தடுக்க பத்திரிகையாளர் ப்ரதாயினி எடுக்கும் முயற்சியில் கமிஷனரான அவரது காதலனே (அஜய்) முக்கிய குற்றவாளியாக இருப்பது தெரிகிறது. இதையறிந்த அஜய், ப்ரதாயினியிடமுள்ள ஆதாரங்களை கைப்பற்றி அவரது அப்பார்ட்மென்ட்டில் ஹவுஸ்-அரெஸ்ட் செய்கிறார்.

2. எவ்வித கெட்டபழக்கமும் இல்லாத நாயகன் தீரஜ், தன் திருமணத்துக்கு முந்தைய தினம் நண்பர்களின் அழைப்பின் பேரில் அதே அப்பார்ட்மென்ட்டிலுள்ள நண்பர்கள் வீட்டுக்குச் செல்கிறார். பேச்சுலர் பார்டியில் தீரஜ் விளையாட்டாகச் சிவப்பு நிற பவுடரை உட்கொள்ள, போதை தலைக்கேறுகிறது. ஆட்டம் ஆரம்பமாகிறது.

இந்த இரு புள்ளிகள் சந்திக்கும் இடமும், அதற்குப் பின் அவிழும் முடிச்சுகளுமே மீதிக் கதை.

இளைஞர்களின் போதை பழக்கத்தால் ஏற்படும் தீங்கை ஒரு சுவாரஸ்யமான த்ரில்லராக தர முயற்சி செய்திருக்கிறது இந்தப் புதிய அணி. அதனாலேயே கதையை விட்டு எங்கும் நகராமல் நூல் பிடித்தது போல சொல்ல வந்ததற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள்.

எளிமையாகக் கூற அனைத்து வாய்ப்பும் உள்ள திரைக்கதையை, வலிந்து குழப்பிச் சிக்கலாக்கியது படத்துக்கே பங்கமாக அமைந்துவிட்டது. தீரஜ் அந்த பவுடரைத் தொடாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் ப்ரதாயினி அந்தச் சிக்கலைச் சந்திக்கத்தான் போகிறார். தீரஜ் எலிப்பொறிக்குள் தவறுதலாகச் சிக்கிய முயல். அதற்காக இந்த எலிப்பொறியே அப்படித்தான் உஷார் என்ற வகையில் முக்கியமான கதைக்களத்தைச் சிறுபிள்ளைத்தனமாக அணுகியிருக்கிறார்கள். முன்பின் போதையை அனுபவிக்காத தீரஜ், போதையினால் வாழ்க்கையை இழந்தது என விரியும் காட்சிகள் நாடகீயமாகவே தோன்றுகிறது.

எடுத்துக்கொண்ட கதைக்களம் மிக விரிவானது. படத்தின் போக்கில் கதாநாயகன் அறைக்குள் மாட்டிவிடுவதைப் போல, கதையும் ஒரு வட்டத்துக்குள் சிக்கிவிடுகிறது. புதிதாக நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் தங்கள் பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக அனுபவமிக்க பாலசுப்பிரமணியெத்தின் ஒளிப்பதிவு படத்திற்கே பெரும் பலம். போதை ஏறி புத்தி மாறி தீம் மியூசிக் முக்கியமான இடங்களில் ஈர்க்கிறது.

புதிய அணியின் நல்ல முயற்சியாக போதை ஏறி புத்தி மாறி படத்தை வரவேற்கலாம். கதைக்களத்தை இன்னும் விரிவான தளத்தில் பேசியிருந்தால் கவனிக்கப்பட்டிருக்க வேண்டிய படமாக மாறியிருக்கும். க்ரைம் த்ரில்லரை விழிப்புணர்வு படமாக மாறாமல் பார்த்திருக்கலாம்.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon