மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

இருளின் மையத்திலிருந்து வெளிச்சம் பாய்ச்சியவன்!

இருளின் மையத்திலிருந்து வெளிச்சம் பாய்ச்சியவன்!

முகேஷ் சுப்ரமணியம்

சமூகத்தின் இருள் நிறைந்த, சாலைகளற்ற பாதைகளில் தன் கதைகளின் வழி வெளிச்சத் தடம் போட்ட இயக்குநர் பாலாவின் 54 ஆவது பிறந்த தினம் இன்று.

நாம் வேடிக்கையாய் கண்டும் காணாமலும் கடப்பவற்றைத் தன் கேமராவின் வழியாகப் பதிவு செய்து நம்மைக் கூர்ந்து பார்க்க வைத்த கலைஞன் இயக்குநர் பாலா. மேற்குத் தொடர்ச்சி மலையின் கதகதப்புக்குள் அனுபவங்களைச் சேகரித்து, பாலுமகேந்திராவிடம் திரைமொழியை கற்று, தனக்கென ஒரு புது மொழியை உருவாக்கியவர் பாலா. அதுவரை யதார்த்தம் என நாம் திரைவழி அடைந்த அனுபவங்களை இவரது படங்கள் உடைக்கத் தொடங்கின.

‘அணு அணுவாய் சாவதென்று முடிவு செய்த பின் காதல் சரியான வழி தான்’ அறிவுமதியின் இந்தக் கவிதை கொடுத்த திகைப்பு தான் பாலாவின் முதல் படமாக வந்த சேது. 1999ஆம் ஆண்டு வெளியான இப்படம், சினிமாவிற்காக எந்த சிலுவையும் சுமக்கத் தயார் எனக் காத்திருந்த விக்ரம், பாலா என்ற இருவரையும் ஒரு சேர திரையுலகிற்குள் அடியெடுத்து வைக்க அஸ்திவாரம் போட்டது.

நூறு நாட்களுக்கு மேல் பிரிவூயூ தியேட்டரில் ஓடிய படம் என கிண்டிலடிக்கப்பட்ட சேது, பல்வேறு சிக்கல்களுக்குப் பின் ரிலீஸானது. ஆரம்பத்தில் மதிய காட்சியாக மட்டுமே ஓடிய சேது, பின்னர் விமர்சனங்கள், படம் பார்த்த மக்களின் வார்த்தைகளால் மெல்ல கவனம் ஈர்த்தது. அதன் பின் திரையரங்குகளிலும் நூறு நாட்களைக் கடந்து ஓடி, சேது தோற்கும் என கணித்தவர்களின் கணிப்பைப் பொய்யாக்கியது. அந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ் மொழிப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது சேது.

அதன் பின் இவர் இயக்கிய நந்தா, பிதாமகன், நான் கடவுள் ஆகிய படங்கள் பாலாவின் காத்திரமான படைப்புகளாகக் கொண்டாடப்பட்டன. நாம் நிற்கத் தயங்கும் இடங்களில் எல்லாம் பாலாவின் கேமராக்கள் அசையாமல் நிற்கும்; பார்க்கத் தயங்கிய முகங்கள் எல்லாம் அருகாமைக் காட்சிகளில் நிறைந்திருக்கும்; சமூகத்தின் அழகு சார்ந்த கற்பிதங்களைத் தொடர்ந்து கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கினார் பாலா.

நான் கடவுள் படத்தைப் பார்த்த பின், பிச்சைக்கார்களைக் காணும் போதெல்லாம் அப்படத்தின் படிமம் மனதிற்குள் தோன்றாமல் இருப்பது அரிது. அப்படத்தின் பிச்சைக்காரர்கள் உலகத்தை பாலா கட்டமைத்த விதம் (குறிப்பாக அவர்களுக்குள் நிகழும் உரையாடல்கள், புலம்பல்கள், பகடி) உலகின் மகத்தான படைப்புகளுடன் ஒப்பிடத் தகுந்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், சிலி இயக்குநர் அலிஜாண்ட்ரோ ஜொடரோவ்ஸ்கியின் El Topo, வெர்னர் ஹெர்சாக்கின் Even Dwarfs Started Small, அகிரா குரசோவாவின் Lower Depths போன்ற படங்களை நாம் ஒரே தளத்தில் வைத்து ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

நான் கடவுளுக்குப் பின், பாலாவிற்கு என்ன ஆனது என்று கேட்கவைப்பதைப் போல ரசிகர்களை தன் அடுத்தடுத்த படங்களின் மூலம் சோதிக்கவும் செய்தார். நான் கடவுளுக்குப் பின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, அவன் இவன் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அடுத்த வந்த பரதேசி திரைப்படம் நன்றாக அமைந்தாலும் பாலா-வின் ஆரம்பப் படங்களில் இருந்த முழுமை இதில் அமையவில்லை. அதன் பின் வந்த தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகிய படங்கள் பாலாவின் படைப்பு வீழ்ச்சியை நோக்கி பயணிக்கிறதோ எனும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளிம்பு நிலை மக்களின் கதைக்களம், அழுக்கடைந்த கதாநாயகன், அதிர்ச்சிகரமான கிளைமாக்ஸ், சோகம், வன்முறை என எதற்காக பாலா துவக்கத்தில் கொண்டாடப்பட்டாரோ தற்போது அதற்காகவே கடுமையான விமர்சனங்களையும் பெற்று வருகிறார். தேக்க நிலையா இல்லை கலை மீதான மந்தமா என அறியாதபடி பாலாவின் இந்த சரிவு அவரது ஆரம்பப் படங்களினால் உத்வேகம் பெற்று திரைத்துரைக்குள் நுழைந்தவர்களுக்கே அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் புதிய தலைமுறை இயக்குநர்களில் முதன்மையானவராக கருதப்படும் பாலா, மீண்டும் அதே வேகத்துடனும் வீர்யத்துடனும் திரும்பவேண்டும் என்பதே அவர் மீதான அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon