மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 18 செப் 2020

குரூப் 4 தேர்வுக்கு கல்வித் தகுதி நிர்ணயிக்க உத்தரவு!

குரூப் 4 தேர்வுக்கு கல்வித் தகுதி நிர்ணயிக்க உத்தரவு!

குரூப் 3, குரூப் 4 தேர்வுகளுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 3, குரூப் 4 தேர்வுகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்நிலையில் கூடுதல் கல்வித் தகுதியை காரணம் காட்டி தனக்கு பணி மறுக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சக்கரைசாமி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் பொறியியல் பட்டதாரியான தான், வருவாய்த் துறை உதவியாளர் பணியிடத்துக்கு, டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றும் கூடுதல் கல்வித் தகுதி எனக்கூறி தன்னை நிராகரித்து விட்டதாகவும், இதனை ரத்து செய்து பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி சுப்பிரமணியம் அமர்வு முன்பு இன்று (ஜூலை 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, ”அரசு பணிக்கு தேர்வான கூடுதல் தகுதி உடையவர்களிடம் வேலை வாங்க அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலை அரசு அலுவலகங்களிலும், நீதிமன்றங்களிலும் நடக்கிறது. கூடுதல் கல்வித் தகுதி உடையவர்களாய் இருக்கும் நிலையில், பணிக்குத் தேர்வான பின், அவர்கள் முறையாக பணியாற்றுவதில்லை. வேலை நேரங்களில் பணி செய்யாமல், போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதையே பணியாக வைத்துள்ளனர்” என்று நீதிபதி குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, குரூப் 3, குரூப் 4 போன்ற அரசு துறை பணிகளுக்கு, மூன்று மாதங்களுக்குள் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக நிர்வாகத் துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டார். மேலும், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து அவருடைய மனுவைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon