மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

நாட்டிற்கே வெட்கக்கேடு!

நாட்டிற்கே வெட்கக்கேடு!

ரயில்வே துறையில் இன்னும் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவது தேசத்திற்கே வெட்கக்கேடு என்று கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரயில்வே துறைக்கான மானியங்கள் குறித்து இன்று (ஜூலை 11) மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது, திமுக எம்.பி கனிமொழி பேசுகையில், “எல்லா திட்டங்களுக்கும் மத்திய அரசு இந்தியில் மட்டுமே பெயர் சூட்டி வருகிறது. எனது மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமவாசியால் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியுமா?

தூத்துக்குடியில் ‘பிஎம் சதக் யோஜனா’ என அச்சடிக்கப்பட்ட பேனர்களை பாத்திருக்கிறேன். அதற்கு எந்த மொழிபெயர்ப்பும் வழங்கப்படவில்லை. எனக்கு இந்தி புரியவில்லை. ரயில்வே நிலையங்களில் எல்லா பெயர் பலகைகளும் இந்தியில் இருக்கின்றன. அவை மாநில மொழிகளிலும் இருக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்யத்தான் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். பெயர்கள், குறியீடுகள், வாக்கியங்கள் மாநில மொழிகளிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் சாமானிய மக்களும் படித்து புரிந்துகொள்ள முடியும்.

ரயில்வே துறையை தனியார்மயமாக்குவது, கார்ப்பரேட் மயமாக்குவது, சேலம் உருக்கு ஆலையை தனியார்மயமாக்குவது போன்ற முயற்சிகளில் அரசு ஈடுபட்டால் தமிழக மக்களும், திராவிட முன்னேற்றக் கழகமும், எனது தலைவர் மு.க.ஸ்டாலினும் கடுமையாக எதிர்ப்பார்கள். நம்மிடம் புல்லட் ரயில்கள் இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. இன்னும் ரயில்வே துறையில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவது வெட்கப்பட வேண்டியதாகும்.

துப்புரவுத் தொழிலாளர்கள் நேரடியாக பணியமர்த்தப்படுவதில்லை என்று ரயில்வே துறை கூறுகிறது. ஆனால் ஒப்பந்த ரீதியாக அவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இதை மேலும் தொடர்வது நாட்டிற்கே வெட்கக்கேடாகும். திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரியை ஒருங்கிணைத்து புதிய ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட வேண்டும். ஈரோடு ரயில் நிலையத்திற்கு தந்தை பெரியாரின் பெயரை சூட்டவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon