மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

சபாநாயகருக்கு அவசர உத்தரவு!

சபாநாயகருக்கு அவசர உத்தரவு!

கர்நாடகாவில் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள 10 எம்.எல்.ஏ.க்கள் இன்று சபாநாயகர் முன்பு ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் இவ்வாறான முடிவுக்கு பாஜகதான் காரணம் என்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

கர்நாடகாவில் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், மஜத கட்சிகளுக்கிடையே மோதல் போக்கு நிலவி வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, கடந்த சில தினங்களாக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். காங்கிரஸ், மஜத, சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் என தற்போது வரை 17 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஆளும் கட்சியின் பலம் 99 ஆக உள்ளது. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவுக்குக் பாஜகதான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

இதற்கிடையே, மும்பை தனியார் விடுதியில் தங்கியுள்ள 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். பிரதாப் கவுடா, பாட்டீல் பைரது பசவராஜ் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.க்கள், “தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சட்டத்துக்கு எதிராக சபாநாயகர் செயல்படுவதாக” குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “எம்.எல்.ஏ.க்கள் முறைப்படி ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில் சபாநாயகர் ரமேஷ் குமார், அவற்றை வேண்டுமென்றே நிராகரித்து அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார். இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இம்மனு மீண்டும் இன்று (ஜூலை 11) தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா, அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள 10 எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகர் முன்பு இன்று மாலை 6 மணிக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து சபாநாயகர் இன்றே முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பெங்களூரு வரும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு கர்நாடக டிஜிபிக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடகாவைத் தொடர்ந்து கோவாவிலும் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஆளும் பாஜகவில் இணைந்தனர். துணை முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் டெல்லி சென்றுள்ள அவர்கள் இன்று பாஜக தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இதற்கிடையே, கர்நாடகா மற்றும் கோவாவில் எம்.எல்.ஏக்கள் பதவி விலகுவதற்கு பாஜகவின் செயல்பாடே காரணம் என கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கையில் பதாகைகளை ஏந்தி பாஜகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக, மும்பை தனியார் விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற கர்நாடக அமைச்சர் சிவக்குமாருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அவரைச் சந்திக்க எம்.எல்.ஏ.க்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். நாங்கள் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்றும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என மும்பை காவல்துறைத் தலைமை அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இவ்வாறு பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், அவசரநிலை காரணமாக சிவக்குமார் முன்பதிவு செய்த அறையை மும்பை ஓட்டல் நிர்வாகம் ரத்து செய்திருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிவக்குமார், எனக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், நாள் முழுவதும் காத்திருப்பேன் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

அஜித் சம்பளம் 100 கோடியா?


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon