மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 25 பிப் 2020

கண்கொத்தி பாம்பாகக் கண்காணிக்கிறோம்: விஜயபாஸ்கர்

கண்கொத்தி பாம்பாகக் கண்காணிக்கிறோம்: விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மருத்துவ இடங்களில் வெளி மாநில மாணவர்களுக்கு இடம் வழங்கப்படாது என்றும், இவ்விவகாரத்தை கண்கொத்தி பாம்பாகக் கவனித்து வருவதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள், 13 தனியார் மருத்துவக் கல்லூரிகள், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி, 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. கடந்த 8ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போலி இருப்பிடச் சான்றிதழ் மூலம் கர்நாடகம், தெலங்கானா, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த 218 மாணவர்கள் தமிழக மருத்துவ இடத்துக்கு விண்ணப்பித்திருப்பதாகவும், இவர்களுக்கு அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து சட்டமன்றத்தில் நேரமில்லா நேரத்தின் போது, திமுக எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு இன்று (ஜூலை 10) விளக்கமளித்துப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”மருத்துவ படிப்புக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் விண்ணப்பங்கள் கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை பெறப்பட்ட 39,013 விண்ணப்பங்களில் கண்காணிப்புக்கு பிறகு, 3,056 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழக மருத்துவ இடங்களில் வெளி மாநில மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளோம். இதற்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களின் பிறப்புச் சான்றிதழ், மாணவர்களின் பெற்றோர்கள் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், நியாய விலை அட்டையில் உள்ள விவரங்கள் ஆகியவை பெறப்பட்டு சரிபார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, மாணவர்களிடம் இருந்து ஒரு பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டுப் பெறப்படுகிறது. அதில், மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் மற்றும் அவர்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களில் உள்ள தகவல்கள் உண்மையானவையா என கண்டறியப்படும். அதில் தவறு இருந்தால் அந்த மாணவரைத் தகுதி நீக்கம் செய்யலாம், கிரிமினல் வழக்குத் தொடரலாம். அதற்குச் சம்மதிக்கிறேன் என்று மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் கையெழுத்து வாங்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நீட் விவகாரம் தொடர்பாகப் பேசிய விஜயபாஸ்கர், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற, பிரதமர், அமைச்சர்களிடம் பேசி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்த வேலையில், நீட் தேர்வுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். அதற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் இனி நீட் தேர்வுக்கு விலக்கு பெறவே முடியாது என்று தெரிவித்தார். இந்தச்சூழலில், எந்த முகத்தை வைத்துக் கொண்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் நீட்டை பற்றி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புகின்றனர் என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல் நடக்காது!

பதவி விலகத் தயார்: அமைச்சர்!

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

நேர்கொண்ட பார்வை: யுவனின் ‘பப்’ சாங்!


புதன், 10 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon