மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

பிறமொழிச் சொற்களை உள்வாங்குவது எப்படி?

பிறமொழிச் சொற்களை உள்வாங்குவது எப்படி?வெற்றிநடை போடும் தமிழகம்

ஒரு சொல் கேளீரோ! – 30: அரவிந்தன்

தமிழில் எழுதும்போது கூடியவரை தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்றாலும் சில சமயம் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். சில சொற்கள் தமிழுக்கு மிகவும் பழக்கமாகிவிட்டவை. சில சொற்கள் தமிழில் சொன்னால் புரியாததால் (அல்லது அப்படிக் கருதப்படுவதால்) அப்படியே பயன்படுத்தப்படுபவை. அவற்றின் வகைமைகளைப் பார்க்கலாம்.

1. தமிழில் பிறமொழிச் சொற்கள் சில இயல்பாகப் புழங்குகின்றன.

எடுத்துக்காட்டுகள்: வார்த்தை, சந்தோஷம், ஆஜர், சைக்கிள், கார், கம்ப்யூட்டர், ஆக்ஸிலேட்டர், தேசம், ஸ்கேன், ஜெராக்ஸ், கேமரா, பிரகாசம், உதயம், ஃபேஷன், பேப்பர்...

2. துறை சார்ந்த சொற்கள்: புதிதாக ஒரு துறையில் உருவாகும் சொற்கள் பிறமொழியில் இருக்கும்போது அதைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது.

எடுத்துக்காட்டுகள்: கோட்-சூட், சாஃப்ட்வேர், புரொகிராம், விர்ச்சுவல், ரியாலிட்டி, வீடியோ ஸ்ட்ரீமிங், ஜெனிட்டிக் கோட்.

இத்தகைய சொற்களுக்கு உடனடியாகத் தமிழ்ச் சொற்கள் உருவாவது கடினம். எனவே இவற்றை அப்படியே பயன்படுத்த வேண்டிவருகிறது. நாளடைவில் இவற்றில் சில சொற்களுக்குத் தமிழ் வடிவங்கள் உருவாக்கப்பட்டாலும் ஒரு சில சொற்கள் பிறமொழி வடிவங்களிலேயே நிலைபெற்றுவிடுகின்றன. மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணங்களில் சாஃப்ட்வேர் என்பது மென்பொருளாக வழங்கப்பட்டுவந்தாலும் வீடியோ ஸ்ட்ரீமிங் என்பது தமிழில் வழங்கப்படுவது அரிதாகவே இருக்கிறது.

3. நடையில் வித்தியாசம் காட்டுவதற்காகவும் நகைச்சுவை, அதிர்ச்சி, கலகலப்பு, முதலான நோக்கங்களுக்காகவும் பிறமொழிச் சொற்கள் சேர்க்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டுகள்: மரண பங்கம், ஷாக், அலட்டிமேட், ஆசம், க்யூட், லைக் அண்ட் ஷேர், சால்ட் அண்ட் பெப்பர், ட்யூட், ப்ரோ, டிஸ்கி…

இதில் மூன்றாவது காரணம் எழுத்தாளரின் / ஊடகத்தின் தன்மையைப் பொறுத்தது என்பதால் அதைப் பொது விதிக்குள் அடக்க முடியாது. என்றாலும், நகைச்சுவை, வித்தியாசமான ரசனை, இளமைத் துள்ளல் முதலான காரணங்களால் ஆசம், அல்ட்டிமேட், மாஸ் போன்ற சொற்களைப் பயன்படுத்தத் தொடங்கினால் அதற்கு முடிவே இருக்காது. எனவே இவற்றை ஒரு கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது ரகத்தில் புதிய துறைகள் சார்ந்த புதிய சொற்கள் வருவதைத் தவிர்க்க இயலாது, ஆனால், விரைவிலேயே அந்தத் துறை சார்ந்த சொற்களைத் தமிழில் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது மொழி வளம் பெறும்.

கம்ப்யூட்டர் - கணினி, புரொகிராம் - நிரல், Browser - உலாவி, Upload - பதிவேற்றம், Download - பதிவிறக்கம், Genetical - மரபணு, Demonitisation - பண மதிப்பு நீக்கம்....

இப்படிப் பல சொற்கள் தமிழில் வந்ததற்குக் காரணம், தமிழில் சொல்ல வேண்டும் என்னும் முயற்சிதான். இந்த முயற்சி இல்லாவிட்டால் Ink, Paper. Plane, Bomb போன்ற சொற்களுக்குக்கூடத் தமிழ்ச் சொற்கள் வந்திருக்க முடியாது. இத்தகைய முயற்சிகள் சில சமயம் வெற்றிபெறாமல் போகலாம். சரியான சொற்கள் கிடைக்கத் தாமதமாகலாம். ஆனால், முயற்சி தொடர்ந்து நடைபெற வேண்டும். அப்போதுதான் புதிய வார்த்தைகள் தமிழில் உருவாகும். Virtual Reality என்பதற்கு மெய்நிகர் யதார்த்தம் என்னும் சொல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப் பல ஆக்கங்கள் பலரது முயற்சியால் சாத்தியமாகியிருக்கின்றன.

முதல் ரகம், தமிழில் ஏற்கனவே இயல்பாகப் புழங்கும் பிறமொழிச் சொற்களைப் பற்றியது. சில சொற்கள் பிறமொழிச் சொல் என்று கண்டுபிடிக்க இயலா வண்ணம் தமிழோடு இயல்பாகக் கலந்துள்ளன. சில எடுத்துக்காட்டுகள்:

வார்த்தை - சொல்

அர்த்தம் - பொருள்

ஆரம்பம் - தொடக்கம்

பேப்பர் - தாள்

ஃபைல் - கோப்பு

சீக்கிரம் – விரைவில் / விரைவாக / விரைந்து

தேகம் - உடல்

சினிமா - திரைப்படம்

கேமரா - ஒளிப்படக் கருவி

கீபோர்டு - விசைப்பலகை

டைப்பிங் - தட்டச்சு

ஜாக்கிரதை - எச்சரிக்கை

சாவி - திறவுகோல்

கீதம் - பாடல்

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழில் உரிய சொல் இல்லாத பிறமொழிச் சொற்களும் உள்ளன (எடுத்துக்காட்டு: Bottle). இந்தச் சொற்களைத் தவிர்த்துவிட்டுத் தனித்தமிழில் எழுத வேண்டுமா, வேண்டாமா என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது. வெகு மக்களைச் சென்றடைய வேண்டிய ஊடகங்கள் இந்த விஷயத்தில் கறாராக இருக்க முடியாது. அதே சமயம் எந்த மொழியாக இருந்தால் என்ன என்னும் போக்கில் இருந்தால் தமிழ்ச் சொற்கள் சில வழக்கொழிந்து போய்விடக்கூடும்.

தமிழுக்கு நம்மால் இயன்ற தொண்டினைச் செய்வது நம் கடமை. எனவே கூடியவரை தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தலாம்.

சரி. தவிர்க்க முடியாத காரணங்களால் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தும்போது அவற்றை எப்படி எழுதுவது?

அடுத்த பத்தியில் பார்ப்போம்...

இடங்களின் பெயர்களை எப்படி எழுதுவது?

மேலும் படிக்க

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5


புதன், 10 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon