மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜூலை 2019

கர்நாடகாவில் என்னதான் நடக்கிறது?

கர்நாடகாவில் என்னதான் நடக்கிறது?

ஜூன் இறுதிவாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி தன் சொந்தப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். ஜூலை 2 ஆம் தேதி அமாவாசையன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான ஆனந்த் சிங், ரமேஷ் ஜர்கி ஹோலி ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த இரு எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினை இவ்வளவு பெரிதாகும், 14 எம்.எல்.ஏ.க்கள், ஒட்டுமொத்த அமைச்சர்கள் வரை ராஜினாமா செய்வார்கள் என்று குமாரசாமி எதிர்பார்த்திருக்கவில்லை.

கடந்தவருடம் கர்நாடகாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் பாஜக 105 இடங்களில் ஜெயித்து தனிப்பெரும் கட்சியாக திரண்டது. ஆனால் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் 8 இடங்களே குறைவாக இருந்தது. அதேநேரம் காங்கிரஸ் 78 இடங்களில் வென்றிருந்தது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வென்றிருந்தது. எப்படியாவது பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பின், மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சியில் அமரவைத்து அதை ஆதரித்தது காங்கிரஸ். 105 இடங்களைப் பெற்ற பாஜகவின் எடியூரப்பா இரு நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்தார்.

ஆனால் வெறும் 37 இடங்களை பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் குமாரசாமி முதல்வராகப் பொறுப்பேற்று காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமைத்தார். இப்படி ஒரு கூட்டணி என்பது பிள்ளைப் பூச்சியை மடியில் கட்டிக் கொண்டது போலத்தான் என்பதை சில நாட்களிலேயே உணர ஆரம்பித்தார் குமாரசாமி. காங்கிரஸ் சார்பில் பரமேஸ்வரய்யா துணை முதல்வர் ஆனார். முப்பதுக்கும் மேற்பட்ட கேபினட் அமைச்சர்களில் 21 பேர் காங்கிரஸ் காரர்கள். 9 பேர்தான் மதச்சார்பற்ற ஜனதா தள காரர்கள்.

இந்த ஆட்சி ஆரம்பித்தபோதே சித்தாராமையா, ‘கூட்டணி வெகுநாள் நீடிக்காது’ என்று கருத்து சொன்னார். இதைத் தொடர்ந்து காங்கிரசார் பலரும் பல கருத்துகளை சொல்ல ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் குமாரசாமி, ‘இவ்வளவு துன்பங்களை நான் தாங்க வேண்டியிருக்கிறது’ என்று பொதுக்கூட்டங்களில் கண்கலங்கிய சம்பவமும் கூட நடந்திருக்கிறது.

இந்த நிலையில் கடந்த அமாவாசை அன்று ஆரம்பித்த இந்த ராஜினாமா தீ, இப்போது கர்நாடக அமைச்சரவை முழுதும் பற்றிப் பரவியிருக்கிறது. காங்கிரஸ் தனது எம்.எல்.ஏ.க்களை காப்பாற்றுவதற்காக அவர்களை மும்பைக்கு கொண்டுபோய் வைத்திருக்கிறது. காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் தனியாக கோவா சென்றுவிட்டார்கள். காங்கிரசாரோ, ‘பாஜகதான் இதற்கெல்லாம் காரணம். பாஜகவின் குதிரை பேரங்களால்தான் கர்நாடகாவில் இந்த நிலைமை’ என்று குதிரை மேல் மோடி வேடம் அணிந்த ஒருவரையும், பணப்பெட்டியுடன் அமித் ஷா வேடம் அணிந்த ஒருவரையும் நிற்க வைத்து போராட்டம் நடத்துகிறார்கள். குலாம் நபி ஆசாத், ‘மாநிலத்தின் முதல்வர் யார் என்பதை பாஜக மதுக் கூடங்களில்தான் முடிவு செய்கிறது’ என்று காட்டமாக பேசுகிறார். கர்நாடக அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையிலேயே முழங்குகிறார்.

சித்தராமையாவின் சித்து வேலை

இதெல்லாம் கர்நாடகத்துக்கு வெளியே இருந்து பார்ப்பவர்களின் பார்வை. ஆனால் கர்நாடகத்தின் உள்ளே இருந்து பார்க்கும் பலருக்கும், நடக்கும் இந்தத் திருவிளையாடல்களுக்கு பாஜகவை விட காங்கிரசே அதிக பொறுப்பு என்பதும் தெரியும்.

“பரமேஸ்வரய்யா இப்போது துணை முதல்வராக இருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு சித்தராமையா கர்நாடகா முதல்வராக பதவியேற்ற போதே பரமேஸ்வரய்யாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் அதை சித்தாராமையா காதில் வாஙகிக் கொள்ளவே இல்லை. காரணம் காங்கிரஸ் கட்சியில் பரமேஸ்வரய்யா ஒரு பெரும் சக்தியாக வளர்ந்துவிடுவாரோ என்ற போட்டிதான்.

இந்த நிலையில் 2018 புதிய அரசில் பரமேஸ்வரய்யா துணை முதல்வராக பதவியேற்றது முதலே சித்தராமையாவின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தார்கள். பரமேஸ்வரய்யா புதிய சக்தியாக எழுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்களின் நோக்கம் குமாரசாமியை முதல்வர் பதவியில் இருந்து அகற்றுவது அல்ல. பரமேஸ்வரய்யாவை துணை முதல்வர் பதவியில் இருந்து அகற்றுவதே. ராஜினாமா செய்த முதல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வில் இருந்து 13 பேரும் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர்களே. ஒட்டுமொத்த அமைச்சரவையை ராஜினாமா செய்துவிட்டு சித்தராமையாவின் ஆதரவாளர்கள் நிறைந்த புதிய அமைச்சரவை அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் ஆசை. ஆனால் பாஜக 105 இடங்களோடு அருகிலேயே இருப்பதால் இதெல்லாம் பாஜகவின் வேலை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

கர்நாடகா அரசியல் நெருக்கடியில் காங்கிரசுக்குதான் அதிக பொறுப்பு இருக்கிறது. தனது உள்கட்சிப் பிரச்சினையை அரசுப் பிரச்சினையாக்குகிறது காங்கிரஸ். வலுவான அளவு எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டிருக்கும் பாஜக இந்த குழப்பங்களை பயன்படுத்தி வருகிறது. இதுதான் கர்நாடகாவில் நடக்கிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களோடு பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சித்தாராமையா சொல்கிறார். அவர்தான் அவர்களோடு பேச முடியும். இதெல்லாமே சித்தராமையாவின் சித்து விளையாட்டுதான்” என்கிறார்கள்.

மேலும் படிக்க

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

5 நிமிட வாசிப்பு

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

5 நிமிட வாசிப்பு

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

3 நிமிட வாசிப்பு

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

புதன் 10 ஜூலை 2019