மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

மக்களவையில் ராகுலுக்கு முதல் வரிசை மறுப்பு!

மக்களவையில் ராகுலுக்கு முதல் வரிசை மறுப்பு!

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸில் பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளன. முதலில், தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தேசிய தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள், மாநிலத் தலைவர்கள், மாவட்டக் கமிட்டி நிர்வாகிகள் வரை ஏராளமானோர் ராஜினாமா செய்தனர். கர்நாடக காங்கிரஸ் கமிட்டி முழுவதுமாகக் கலைக்கப்பட்டது மட்டுமல்லாமல் தற்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி அரசிலும் குழப்பங்கள் வலுத்துள்ளன.

இந்த நிலையில், மக்களவையில் முதல் வரிசையில் ராகுல் காந்திக்கு இடம் வழங்கப்படாது எனவும், இரண்டாம் வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்படும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பக்கம் முதல் வரிசையில் காங்கிரஸுக்கு இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக உட்பட மற்ற எதிர்க்கட்சிகளுக்கு தலா ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கர்நாடகத்தில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ராகுல் காந்தி நேற்று (ஜூலை 9) மக்களவையில் கோஷங்களை எழுப்பினார். அவருடன் மற்ற காங்கிரஸ் உறுப்பினர்களும் கோஷமிட்டனர்.

17ஆவது மக்களவையில் முதன்முறையாக ராகுல் காந்தி கோஷங்களை எழுப்பியுள்ளார். எனினும், அவர் கோஷம் எழுப்புவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். ஏற்கெனவே கர்நாடக விவகாரம் ஜூலை 8ஆம் தேதியன்று விவாதிக்கப்பட்டதாகவும், அதற்கு மக்களவைத் துணைத் தலைவர் ராஜ்நாத் சிங் பதிலளித்ததாகவும் ஓம் பிர்லா தெரிவித்தார். சபாநாயகரின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் ஆதிர் ரஞ்சன் சவுதரி மீண்டும் கர்நாடக விவகாரத்தை இழுத்தார். ஒரு காகிதத்தில் சில கோஷங்களை எழுதி அருகிலிருந்த மற்ற உறுப்பினர்களிடம் கொடுத்தார் சவுதரி.

பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள் “சர்வாதிகாரம் ஒழிக”, “வேட்டை அரசியலை நிறுத்துங்கள்” போன்ற கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். அப்போது அவர்களுடன் ராகுல் காந்தியும் சேர்ந்து கோஷமிட்டார். போஸ்டர்களைக் கொண்டுவரும் உறுப்பினர்களை சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்தார். “இது எங்களது உரிமை” என்று காங்கிரஸார் சொல்லவும், “இல்லை. இது உங்கள் உரிமை இல்லை. நாடே உங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது” என்றார் ஓம் பிர்லா.

இந்த நிலையில், ராகுல் காந்திக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. மேலும், முதல் வரிசையில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு இருக்கைகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்திக்கும், காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுதரிக்கும் தலா ஓர் இருக்கை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு முதல் வரிசையில் இருக்கை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5


புதன், 10 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon