மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

மதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை: வைகோ

மதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை: வைகோ

என் குடும்பத்திலிருந்து யாரும் கட்சியில் பதவிக்கு வரமாட்டார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்றதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்த வைகோவின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், திமுக சார்பில் நான்காவது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ மனுத் தாக்கல் செய்தார் . ஆனால், மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட மதிமுகவிலிருந்து யாரும் மாற்று வேட்பாளர்கள் இல்லையா எனக் கட்சிக்குள் மனக்கசப்பு எழுந்துள்ளதாக சில நாளேடுகள் செய்தி வெளியிட்டன.

நேற்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் வைகோவின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து நாளை தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுகிறார் என்.ஆர்.இளங்கோ. இந்த நிலையில் சென்னை எழும்பூரிலுள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நாளேடுகளில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தார்.

“என்னுடைய முடிவுகளால் கட்சியில் அதிருப்தி நிலவுவதாக சில நாளேடுகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. மேஜையில் உட்கார்ந்துகொண்டு எழுதுகிறவர்களின் கற்பனை இது. இரண்டு முறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டபோதும் அதை நிராகரித்தவன் நான். இருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தேன். சிறையிலிருந்து வந்தபிறகு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வாய்ப்பிருந்தும் நான் போட்டியிடவில்லை.

என்னுடைய குடும்பத்தில் யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை. என்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். எனது தம்பியும், மகனும் எனக்கு உறுதுணையாகக் கட்சியில் இருக்கிறார்கள். ஆனால், அடுத்த வாரிசாக எனது மகன் வரப்போகிறான் என்று கற்பனையில் எழுதுவது மதிமுகவினர் உள்ளத்தில் காயத்தை ஏற்படுத்துகிறது. எந்த காலத்திலும் எனது குடும்பத்திலிருந்து யாரும் எந்தப் பதவிக்கும் வரமாட்டார்கள். நான் இதைத் திட்டவட்டமாகச் சொல்வேன்” என்று சொன்னவர்,

“நான் போட்டியிடுவதாக இருந்தால்தான் மாநிலங்களவை உறுப்பினர் சீட் வழங்குவதாக ஸ்டாலின் கூறினார். என்னுடைய மனு தள்ளுபடி செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக ஸ்டாலினிடம் நான் கூறினேன். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றே அவர் தெரிவித்தார். எனக்குத்தான் அந்த சீட் என்ற நிலையில், அதை வேறு ஒருவருக்கு வழங்க மறுபரிசீலனை செய்வதில் இடமில்லை என்ற சூழலில் என்.ஆர்.இளங்கோ மனுத் தாக்கல் செய்தார். இதனால் மதிமுகவில் மனக்கசப்பு, கொந்தளிப்பு என்று தினமலரும், தினமணியும் எழுதியிருப்பது கற்பனை. கடந்த 26 ஆண்டுகளில் மதிமுக எத்தனையோ சோதனைகளைக் கடந்திருக்கிறது. பதவி பெற்றவர்கள்தாம் கட்சியை விட்டுச் சென்றார்களே தவிர லட்சியவாதிகள் யாரும் கட்சியை விட்டு விலகவில்லை. கட்சியில் மத்திய அமைச்சர் பதவியை நிராகரித்தது, 2004 மக்களவைத் தேர்தலில் போட்டியிட மறுத்தது என இரண்டு முடிவுகளை மட்டும்தான் நான் தனிப்பட்ட முறையில் எடுத்தேன். மற்ற அனைத்து முடிவுகளும், காலை தொடங்கி இரவு வரை, மறுநாள் விடியற்காலை வரையிலும்கூட இதே அரங்கில் கருத்துகளைப் பரிமாறி ஒட்டுமொத்தமாக ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள்தாம். எங்கள் கட்சியில் கருத்து உரிமை இருக்கிறது” என்று கூறினார்.

மேலும், “தடா சட்டத்தின்கீழ், சிறையில் ஓராண்டுக் காலம் கைவிலங்கு பூட்டப்பட்டுக் கிடந்த என் தம்பி இரவிச்சந்திரனுக்குக் கட்சியில் நான் எந்தப் பதவியும் கொடுக்கவில்லையே? எல்லா வகையிலும் எனக்குப் பக்கபலமாக இருக்கிறார் என் மகன். அவரை நான் அரசியலுக்குக் கொண்டு வரவில்லையே? பதவி அரசியலை அவரும் விரும்பவில்லை. நானும் விரும்பவில்லை. எல்லோரையும் போல அவரும் வாட்ஸ் அப்பில் தன் நண்பர்களோடு ஒரு குழுவில் இருக்கிறார். அதை வைத்துக்கொண்டு, அதற்குப் பெயர் எல்லாம் சூட்டி, அடுத்த கட்ட வாரிசு என்றெல்லாம் எழுதுவது வேதனை அளிக்கிறது. அந்த எண்ணம் எங்கள் குடும்பத்தில் எவருக்கும் இல்லை. எல்லாத் துன்பங்களும், துயரங்களும் என்னோடு போகட்டும். இந்த இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்வதற்கு எத்தனையோ இளைஞர்கள், ஆற்றல் உள்ளவர்கள் இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்கள் இருக்கிறார்கள். எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். இதை எல்லாம் இன்றைக்கு மனம் திறந்து சொல்வதற்கான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது” என்றும் விளக்கம் அளித்தார்.

மேலும் படிக்க

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5


புதன், 10 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon