மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

புறநானூறு பட்ஜெட்டின் ‘அக’நானூறு என்ன?

புறநானூறு பட்ஜெட்டின்  ‘அக’நானூறு என்ன?

மணியன் கலியமூர்த்தி

2019- 20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்ற அவையில் புறநானூற்று விளக்கத்தோடு தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தக் கூட்டத் தொடரின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டாவது பெண் நிதியமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானோர் இந்த புறநானூற்றிலேயே நின்று பார்த்துச் செல்கின்றனர். அதையும் தாண்டி இந்த பட்ஜெட்டின் உள்ளே இருக்கும் அம்சங்களான,

‘அக’நானூறு என்ன? இதோ ஓர் அலசல்.

1.8 டிரில்லியனாக இருந்த இந்தியாவின் பொருளாதாரத்தைக் கடந்த ஐந்து வருடங்களில் 2.7 ட்ரில்லியனாக உயர்த்தியுள்ளதாகவும் இன்னும் சில ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தப்பட்டு உலகின் 11ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும் என்றும் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பட்ஜெட் உரையை வாசித்து வளர்ச்சியை மையமாகவைத்து, அடித்தட்டு மக்களுக்காக மோடி அரசாங்கம் உருவாக்கிய பட்ஜெட் இது என்று பல மேற்கோளுடன் கர்ஜனை புரிந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

விவசாயத்துக்காக ஜீரோ பட்ஜெட்!

பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் தம் உழவர்களுக்கே பெருமளவு நிதி ஆதரவைத் தருகின்றன. அதன்மூலம் தேவைக்கு அதிகமாக தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, தங்கு தடையற்ற வெளிநாடுகளின் வர்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி இந்தியா போன்ற வளரும் நாடுகளைக் குறிவைத்து உபரி தானியங்களைக் கொண்டுவருவதால் உள்நாட்டு விவசாயிகளின் பயிர்களுக்கான கொள்முதல் விலை குறைகிறது. இதன் மூலம் இந்திய வேளாண்மை சீர்குலையும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இதன் காரணமாகவே கடந்த பத்தாண்டுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது வரலாறு. ஆனால், இந்த அறிக்கையின் இறுதியில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று கூறியுள்ள அமைச்சர், வெளிநாட்டு முதலீடுகளுக்கும் வர்த்தகத்துக்கும் 100 சதவிகித அனுமதி அளித்திருப்பது எந்த வகையில் இந்திய விவசாயிகளைக் காப்பாற்றும் என்று தெரியவில்லை.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று கூறியுள்ளார் நிதியமைச்சர். 2014ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக இருந்த மதசார்பற்ற கூட்டணி முறைசாரா தொழிலாளர்களுக்கான தினக்கூலியை ரூ.137 என உயர்த்தியது. 2014ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை முறைப்படுத்தப்பட ஊதிய உயர்வு அறிவிக்கப்படவில்லை என்றிருக்கும்போது இன்னும் ஐந்தாண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது சாத்தியமில்லாத ஒன்று என்றுதான் கூற வேண்டும்.

இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மை துறைக்கு இது “ஜீரோ பட்ஜெட்” என்றுதான் கூற வேண்டும். இந்திய மக்கள் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பளிப்பது வேளாண்மை துறை‌. கடந்த 2018 பட்ஜெட்டில், விவசாயக் கடனுக்கும் கால்நடைத் துறை உட்கட்டமைப்புகளுக்கும் தலா 11,000 கோடி, உணவு பதப்படுத்தும் துறைக்கு 1,500 கோடி, விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்குக் கடன் அட்டை திட்டத்தை விரிவுபடுத்த 22,000 கோடி என்று ஒவ்வொரு திட்டத்துக்கும் இவ்வளவு ரூபாய் என ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த பட்ஜெட்டில் ரசாயனம் இல்லாத இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக அறிவிப்பு இருக்கிறது. மற்றபடி வேளாண்மை துறையை ஊக்குவிக்க நவீன உபகரணங்கள் வாங்குதல், பன்னாட்டுத் தொழில் நுட்ப விவசாயம், விவசாய கடன்கள் தள்ளுபடி, விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் சட்டம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய திட்டங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

மேலும், வேளாண்மையோடு ஒன்றியமைந்த ஊரக வளர்ச்சி, பொது விநியோக அமைப்பு, வேளாண் நலக்கல்வி, புதிய பயிர்களை உற்பத்தி செய்யும் முறை, கால்நடை வளர்ப்பு போன்ற விவசாயத்தின் அடிப்படை காரணிகளைப் பற்றி எதுவும் கூறாமல் வேளாண்மை துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று அறிவிப்போடு முடிக்கப்பட்டுள்ளது, இந்தியாவின் உயிர்நாடியான விவசாயம். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் “யானை புக்க புலம் போல” என்ற புறநானூற்றைக் கையில் எடுத்த நிதியமைச்சர் சீதாராமன் விவசாய நிலங்கள் அனைத்தும் இன்று விலை நிலங்களாக மாறிப் போன அவலங்களுக்கு விடை ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டார்.

நடுத்தர மக்களுக்கு வருத்தம்

இன்றைய சூழ்நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளாகிப்போன மின்னணு சாதனப் பொருட்களுக்கான டிவி, குளிர்சாதனப் பெட்டிகள், இருசக்கர வாகனங்களுக்கு வரி குறைப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்தனர். மேலும், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு, தானியங்கி துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க நிதி ஒதுக்கீடு, வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பது போன்ற பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும் இதுபற்றி எந்த ஓர் அறிவிப்பும் இல்லாதது வருத்தமளிக்கக் கூடிய ஒன்று.

ஆனால். உட்கட்டமைப்புத் துறை, தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களை ஊக்கப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரியல் எஸ்டேட், பொதுத் துறை வங்கிகளுக்கு 70,000 கோடி மூலதன உதவி அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பதால் மேற்கண்ட துறைகளுக்கு இது சாதகமான பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.

இந்த பட்ஜெட்டில். ரூ.45 லட்சத்திற்குள் முதன்முறையாக வீடு வாங்கும் தனி நபருக்குக் கொடுக்கப்பட்டுள்ள வரிச்சலுகையோடு, மேலும் 1.5 லட்சம் ரூபாய் வரை வரிச் சலுகை உயர்த்தப்பட்டுள்ளது. அதிக வரிச்சுமையால் பாதிக்கப்படுகின்றன நடுத்தர மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

ஆனால், வரியை சேமிக்க வழி சொல்லும் இந்த பட்ஜெட், கட்டுப்பாடுகள் இல்லாமல் உயர்ந்து செல்லும் ரியல் எஸ்டேட் துறைக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கூறவில்லை.

மேக் இன் இந்தியா என்னவாயிற்று?

மேலும். பனை உற்பத்திப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து வரிவிலக்கு அளித்தாலும், கைத்தொழில் அபிவிருத்தி பொருட்களுக்கான வரியில் மாற்றம் ஏதும் வரவில்லை. 30 கோடி சில்லறை விற்பனையாளர்களுக்கு பென்ஷன், உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களை ஏற்படுத்த திட்ட மேம்பாடு, புதிய ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்துதல், வருமானவரித் தாக்கல் செய்வதற்கு ஆதார் அட்டை உபயோகப்படுத்துதல், காந்தி பீடியா இணையதளம் திட்டம், வணிகம், விமானம் மற்றும் காப்பீட்டுத் துறையில் 100 சதவிகித அந்நிய முதலீடு, ரூ.1 லட்சத்திற்கும் மேல் மின் கட்டணம் செலுத்துபவர்களுக்கு வருமான வரி கட்டாயம், ஒரு கோடிக்கு மேல் வங்கியில் பணம் எடுப்பவர்களுக்கு 2 சதவிகித வரி, வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க எடுக்கப்பட்டுள்ள முனைப்பு என இந்திய இறையாண்மையை உலகறியச் செய்யும் சிறப்புப் பொருளாதார பட்ஜெட் இது. ஆனாலும், கடந்த ஐந்தாண்டுகளில் நெறிமுறைப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகள், மேக் இன் இந்தியா, க்ளீன் இந்தியா போன்ற திட்டங்களின் செயல்பாடுகளைப் பற்றி வாய் திறக்கவில்லை.

கங்கையில் எழுதிய எழுத்து

கங்கை நதியில் படகுப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார் அமைச்சர். 1986 ஜூன் மாதம் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி “கங்கா செயல் திட்டத்தை” Ganga Action Plan (GAP) தஷாஸ்வமேதா படித்துறையில் தொடங்கி வைத்தபோது 1990ஆம் வருடத்துக்குள் நம் கலாச்சாரத்துக்கும் ஆன்மிகத்துக்கும் பெட்டகமான கங்கை நிச்சயமாகத் தூய்மைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 40 சதவிகிதம் பேருக்கு வாழ்வளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திட்டம் 1990இல் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

மறுபடியும் பழைய திட்டத்துக்கு புதிய பெயர் இட்டு “நமாமி கங்கே” (Namami Gange) என்று ஆரம்பித்து ரூ.2,250 கோடி அத்திட்டத்துக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட பிறகும்கூட கடந்த ஆண்டில் ரூபாய் 750 கோடியை மட்டுமே அரசாங்கம் செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்தக் குழுவின் தலைவராக உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கங்கை பாதுகாப்புக் குழுவின் கூட்டம் இதுவரை நடைபெறவில்லை. இந்த நிலையில் கங்கையில் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வி எழுகிறது.

வீடுகளும் குடியேற்றங்களும்

2020ஆம் ஆண்டுக்குள் 1 கோடியே 95 லட்சம் இலவச வீடுகள் கட்டித்தரப்படும் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர். ஆனால், 2018ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 51 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் இதுவரை எத்தனை பயனாளிகள் இந்தத் திட்டத்தைப் பெற்றுள்ளனர் என்று கூறவில்லை. மேலும், ஊரக பகுதிகளில் ஏற்பட்டுள்ள வேலை இழப்புகளால் மக்களின் நகர்புற குடியேற்றங்கள் 2002 முதல் 2019 வரை கிட்டத்தட்ட 4 கோடி பேர் தங்களது குடியேற்றங்களை மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கிறது ஓர் ஆய்வு. அப்படி குடியேறும் மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய இந்த பட்ஜெட்டில் எந்தவிதமான அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றமே.

தனியார்மயமாகும் ரயில்வே

லல்லு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது லாபத்துடன் பயணித்த உலகின் மூன்றாவது பெரிய ரயில்வே துறையான இந்தியன் ரயில்வே, கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் பயணிப்பதாகத் தெரிவித்துவந்தாலும் 2030க்குள் இந்திய ரயில்வேயை விரிவுபடுத்த 50 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்ற ஓர் அறிவிப்பு இந்திய ரயில்வே துறை ஊழியர்களைப் புலம்ப வைத்திருக்கிறது. இந்திய ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கத்தான் இந்த அந்நிய முதலீட்டு அறிவிப்பு என்று மக்களும் அரசியல் கட்சிகளும் ஏகமனதாக குற்றம் சாட்டுகின்றனர்.

கவனிக்க வைக்கும் அறிவிப்புகள்

மேலும், மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு உடனடியாக 5,000 வரையிலான கடன்களைப் பெறுதல், ஒரே நாடு ஒரே கட்டமைப்பு திட்டம் மூலம் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவது, கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க வரிச் சலுகை, நாடு முழுவதும் ரயிலில் பயணம் செய்ய ஒருங்கிணைந்த கட்டண முறை, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முதலீடுகளுக்கு உள்ள விதிகள் தளர்த்தப்பட்டு முதலீடுகளுக்கான விண்ணப்பங்கள் எளிமையாக்கப்படுதல்,

2022ஆம் ஆண்டுக்குள் கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு 100 சதவிகித இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் கவனிக்க வைக்கின்றன.

பசுமை தொழில்நுட்பத்தோடு பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி 33,000 கிலோமீட்டருக்கு சாலைகள் போடப்படும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி மையம், சரக்கு போக்குவரத்து வழிதடங்கள் ரயில் பாதைகளுடன் இணைக்கப்படும், தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும், புதிதாக உருவாகும் தொழில்களுக்கு என பிரத்யேக தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படும், மின்சார வாகனங்களை ஊக்குவிக்க அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 30,000 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்படும், விண்வெளியில் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க இஸ்ரோவின் கீழ் புதிய நிறுவனம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்புகளும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.

ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிப்பதாக இந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்தாலும், கடந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட மேக் இன் இந்தியா மூலம் உள்நாட்டில் ஏற்படுத்திய மென்பொருள் முன்னேற்றங்கள் பற்றி ஓர் இடத்திலேயும் குறிப்பிடப்படவில்லை. அதிலும் வரியை உயர்த்துவதில் மட்டுமே குறிக்கோளாக இருக்கின்றனர் இந்த ஆட்சியாளர்கள் என்பதை தாக்கல் செய்த பட்ஜெட் படித்தாலே புரிகிறது.

கழிவை அகற்ற ரோபோக்கள்

சாக்கடைகளைச் சுத்தம் செய்ய மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார் அமைச்சர். 2011 வரையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1,67,487 குடும்பங்கள் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டினிப் போராட்டத்தில் உள்ள அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்று விளக்கவில்லை அமைச்சர். ரோபோக்கள் எவ்வளவு முக்கியமோ அவர்களின் வாழ்வாதாரத்துக்கான உறுதியும் முக்கியம்.

அதுமட்டுமின்றி 2014 தலைமை முறையீட்டு மன்ற ஆணையம் 2014 முதல் 2016 வரை மனிதக் கழிவுகளை அகற்றும் பணியின்போது சுமார் 1,370 பேர் உயிரிழந்ததாகவும். அந்த பணியாளர்களுக்கு தலா பத்து லட்சம் வழங்க வேண்டும் என்று முறையீட்டு மன்ற ஆணையமே அறிவுறுத்தியும் இதுவரை எட்டு பேருக்கு மட்டுமே உரிய இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாகவும். மீதமுள்ளவர்களின் குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாக இருக்கின்றனர் என்பதை மறைத்து ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என்பது எள்ளி நகைக்கப்படும் அறிவிப்பாகத் தோன்றுகிறது

அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் பதுங்கிவைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்பது, பங்குச் சந்தையின் சரிவைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஈரானிடம் இருந்து வாங்க இருக்கின்ற எண்ணெய் விலை, கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகள் பற்றியெல்லாம் பேசினால் எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை அறிந்து லாகவமாக நழுவிச்சென்று பாண்டிய மன்னனின் வரி விதிப்பையும். புறநானூற்றுக் கதையையும் கூறி தமிழக உறுப்பினர்களின் கவனத்தைத் திசை திருப்பி, ஒரு கண்ணாடி பிம்பத்திலான நிதிநிலையைத் தாக்கல் செய்துள்ளார் திருமதி நிர்மலா சீதாராமன்.

மேற்கண்ட அறிவிப்புகள் புதிது போன்ற தோற்றங்களைக் கொடுத்தாலும். அது செயல்படும் வடிவம் பெறும்போதுதான் அதில் உள்ள நிறை குறைகளைத் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: முகிலன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்?

என்.ஆர். இளங்கோ மனு தாக்கல்: வைகோ விளக்கம்!

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகம் முற்றுகை!


செவ்வாய், 9 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon