மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

இடங்களின் பெயர்களை எப்படி எழுதுவது?

இடங்களின் பெயர்களை எப்படி எழுதுவது?

ஒரு சொல் கேளீரோ! – 29: அரவிந்தன்

நாடுகள், ஊர்கள் ஆகியவற்றை எழுதுவதில் பல நேரம் குழப்பம் ஏற்படும். வெவ்வேறு மொழிகளுக்கு உள்ள England என்பதை ஆங்கில முறைப்படிச் சொன்னால் இங்க்லேண்ட் என்று வரும். ஆனால், அதைத் தமிழ் ஒலிப் பண்புக்கு ஏற்ப இங்கிலாந்து என்று எழுதும் மரபு 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. எனவே இங்கிலாந்து என எழுதுவதே சரி.

அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய இடங்களுக்கும் இது பொருந்தும்.

சான்ஃபிரான்சிஸ்கோ (அல்லது சான்பிரான்சிஸ்கோ), மிஷிகன் முதலான இடங்களின் பெயர்களில் குழப்பம் வரும்போது இணையத்தில் அவற்றின் சரியான உச்சரிப்புகளைக் கேட்டு, தமிழ் ஒலிப் பண்புக்கு ஏற்ப எழுத வேண்டும். (இங்கே குறிப்பிடப்பட்ட வடிவங்கள் முறையாகச் சரிபார்க்கப்பட்டவை; எனவே அவற்றைப் பின்பற்றலாம்.)

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க், ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் முதலான இடங்களுக்கும் இதே வழிமுறை பொருந்தும்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சண்டீகர், பிகார், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், உத்தராகண்ட் ஆகிய இடங்களின் பெயர்களை மேற்கண்ட விதங்களில் எழுத வேண்டும். இவை அந்தந்த மொழிகளைச் சார்ந்த ஒலிகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டவை. கூடவே தமிழ் ஒலிப் பண்புக்கு ஏற்பச் சிறிது உருமாற்றம் பெற்றவை (பிரதேஷ் - பிரதேசம், ராஷ்ட்ரா – ராஷ்டிரம், பிஹார் - பிகார்).

கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றைக் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என எழுதுவதே முறையானது.

தெலங்கானா என்பது சரி. தெலுங்கானா என்பது தவறு.

Ganges அல்லது Ganga என எழுதப்படும் நதியை கங்கை என்று தமிழில் குறிப்பிடும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக உள்ளது. எனவே, கங்கை என்றே குறிப்பிட வேண்டும். (கங்கா என ஒருவருடைய பெயர் இருந்தால் அதை கங்கை என எழுதக் கூடாது. கங்கா ஸ்வீட்ஸ் என்னும் கடையின் பெயரையும் கங்கை ஸ்வீட்ஸ் என மாற்றக் கூடாது.)

கங்கை, யமுனை, நர்மதை, மகாநதி, காவிரி, கோதாவரி, துங்கபத்திரை என எழுதுவதே சரி.

பிரம்மபுத்ரா என்பதை வலிந்து பிரம்மபுத்திரர் அல்லது பிரம்மபுத்திரம் என்று எழுத வேண்டாம். பிரம்மபுத்ரா என்றே பல ஆண்டுகளாக அது தமிழில் நிலைபெற்றுள்ளது.

அயோத்யா, மதுரா, துவாரகா, பாடலிபுத்ரா என்றெல்லாம் எழுதுவதற்குப் பதிலாக

அயோத்தி, மதுரை, துவாரகை, பாடலிபுத்ரம் எனத் தமிழ் ஒலிப் பண்புக்கு ஏற்ப எழுதலாம். இவை நிலைபெற்ற வடிவங்கள்.

நிறுவனங்களின் பெயர்கள்

நிறுவனங்களின் பெயர்களை எழுதும்போது ஒரு நிறுவனம் / அமைப்பு எந்த மொழியில் பெயரிடப்பட்டிருக்கிறதோ அந்த மொழியில் அதன் உச்சரிப்பு என்ன என்பதைப் பொறுத்துத் தமிழில் எழுத வேண்டும். ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், காஸ்மோபோலிடன் கிளப், ரெட்கிராஸ், ஃபோர்டு ஃபவுண்டேஷன் ஆகியவற்றை அவற்றின் உச்சரிப்பின்படி எழுத வேண்டும்.

தமிழகத்தில் புழங்கும் ஒரு நிறுவனம் தன் பெயரைத் தமிழில் சொல்லிக்கொள்ளும் வழக்கம் இருந்தால் அதையே நாமும் பின்பற்றலாம்.

எடுத்துக்காட்டு:

லயன்ஸ் கிளப் - அரிமா சங்கம்

ரெட் கிராஸ் - செஞ்சிலுவைச் சங்கம்

ஆனால், ப்ளூ கிராஸ் என்பதை நீலச் சிலுவைச் சங்கம் என அவர்கள் தமிழில் குறிப்பிடுவதில்லை. எனவே நாமாகவே அப்படிக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 'ப்ளூ' என்பதைத் தமிழ்ப் பண்புக்கு ஏற்ப 'புளூ' என்று குறிப்பிடலாம்.

ஒரு சொல் கேளீரோ!

மேலும் படிக்க

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

பொன்னியின் செல்வன்: விக்ரம் ரியாக்ஷன்!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

மாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்!

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon