மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

கொடநாட்டையும் நினைவிடமாக மாற்றுவீர்களா?: நீதிபதிகள் கேள்வி!

கொடநாட்டையும் நினைவிடமாக மாற்றுவீர்களா?: நீதிபதிகள் கேள்வி!

மக்கள் வரிப்பணத்தில் ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் கொடநாடு பங்களாவையும் நினைவிடமாக மாற்றுவீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி புகழேந்தி தாக்கல் செய்த மனுவில் ‘மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் ஏராளமான சொத்துகள் உள்ளன. ஹைதராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு, கொடநாடு எஸ்டேட் என்று சுமார் ரூ.913 கோடிக்கும் மேல் சொத்து உள்ளது. இந்த சொத்துகள் யாருக்கு சொந்தமாகும் என்று ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. அதனால், இந்தச் சொத்துகளையெல்லாம் நிர்வகிக்க ஒரு நிர்வாகியை உயர் நீதிமன்றம் நியமிக்க வேண்டும்’ என்று கேட்டிருந்தார்.

இதற்கிடையே தீபக், தீபா சார்பில், தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜெயலலிதாவின் சொத்துகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று (ஜூலை 8) நீதிபதிகள் கிருபாகரன் அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், வருமான வரி பாக்கிகளுக்காக ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள சொத்துகள் ஆகியவை 2007, 2013ஆம் ஆண்டுகளில் முடக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், ஜெயலலிதாவின் 1000 கோடி ரூபாய் சொத்துகளைத் தனி ஒருவராக நிர்வகிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், தீபா, தீபக் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அப்போது, தீபா, தீபக் தரப்பில், ”அரசு நினைவிடமாக போயஸ் தோட்ட இல்லத்தை மாற்ற ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. தங்களது ஆட்சேபனை மாவட்ட ஆட்சியரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நகரின் மையப்பகுதியில் உள்ள 10 கிரவுண்ட் நிலத்தை வெறும் 35 கோடிக்கு எடுப்பதாக அரசு அறிவித்துள்ளது. 100 கோடிக்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட இடம் அது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிபதிகள், மக்கள் வரிப்பணத்தில் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றவேண்டிய அவசியம் என்ன, என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ”ஜெயலலிதா புகழைப் பரப்ப பல வழிகள் உள்ளன. அமைச்சர்கள் தினமும் ஜெயலலிதா பெயரைச் சொல்லித்தான் பேசுகிறார்கள்” என்று தெரிவித்த நீதிபதிகள், கொடநாட்டில் ஜெயலலிதா தங்கினார் என்பதற்காக அதையும் நினைவு இல்லமாக மாற்றுவீர்களா? என்றும் கேள்வி எழுப்பினர்.

திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon