மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

நீதிமன்றத்தில் தியானம் செய்த நிர்மலா தேவி

நீதிமன்றத்தில் தியானம் செய்த நிர்மலா தேவி

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கின் தீர்ப்பைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது. இதற்கிடையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நிர்மலா தேவி தியானத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தேவாங்கர் கலை கல்லூரியில் கணிதத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்த நிர்மலா தேவி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் கடந்த மார்ச் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அவருடன் கைது செய்யப்பட்டவர்களும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இவ்வழக்கில் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.

இதற்கிடையே நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிசிஐடியிடமிருந்து சிபிஐக்கு மாற்ற கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க செயலர் சுகந்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில். மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்த விவகாரத்தில் கல்லூரியில் சில மூத்த அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது. அவர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. யாருக்காக மாணவிகளிடம் நிர்மலா தேவி பேசினார் என்பது விசாரிக்கப்படவில்லை. இதனால் சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இவ்வழக்கு இன்று (ஜூலை 8) நீதிபதிகள் சத்யநாராயணா, புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன்,” நிர்மலா தேவி வழக்கில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது என்று வாதிட்டார். இதனை விசாரித்த நீதிபதிகள் சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இதற்கிடையே ஜாமீன் பெற்ற விவகாரம் தொடர்பான வழக்கில் நிர்மலா தேவி இன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது ஜூலை 22ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியேற மறுத்த நிர்மலா தேவி, தனக்கு சாமி வந்துள்ளதாக கூறி நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டார். தன் மீது குற்றம்சாட்டிய மாணவிகள், தூக்கிட்டு இறந்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகம் முற்றுகை!

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு!


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon