மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

கர்நாடகா: அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா!

கர்நாடகா: அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா!

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினரிடையே விரிசல் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். கடந்த சனிக் கிழமை வரை 13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் இன்று சுயேச்சை எம்.எல்.ஏவும், அமைச்சருமான நாகேஷூம் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார். அதில் பாஜகவில் இணைய போவதாக தெரிவித்திருந்தார். மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக தனக்கு தகவல் வந்ததாக கூறியிருந்தார். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழும் சூழல் உருவாகியுள்ளது.

இதுவொருபுறம் இருக்க காங்கிரஸ் அமைச்சர்களுடன் இன்று காலை துணை முதல்வர் பரமேஸ்வரா ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் அமைச்சர்கள் 21 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார்.

காங்கிரஸ் அமைச்சர்களை தொடர்ந்து மஜத கட்சியைச் சேர்ந்த 11 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். தற்போது கர்நாடகாவில் நிலவும் அரசியல் சூழலால் எந்த பயமும் இல்லை என்று தெரிவித்துள்ள அவர் விரைவில் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அந்தவகையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவியை வழங்க குமாரசாமி முன்வந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தங்களது முடிவில் எந்தமாற்றமும் இல்லை என்று 14 எம்.எல்.ஏக்களும் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், டெல்லியில் இன்று இரவு கர்நாடகாவில் நிலவும் அரசியல் சூழல் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கூடி ஆலோசிக்க உள்ளனர்.

224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்தில் தற்போது ஆளும் கூட்டணியின் பலம் 104 ஆகவும், பாஜகவின் பலம் 106ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகம் முற்றுகை!

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு!


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon