மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

நீட் மசோதா நிராகரிப்பு: நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு!

நீட் மசோதா நிராகரிப்பு: நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு!

நீட் மசோதா நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிருந்தும் இன்று (ஜூலை 8) திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 2017ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 6ஆம் தேதி மத்திய அரசு வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசிய அதே வேளையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று அதிமுக, திமுக எம்.பி.க்களால் எழுப்பப்பட்டது.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது நீட் மசோதா நிராகரிப்பு தொடர்பாக மத்திய அரசைக் குற்றம்சாட்டிப் பேசிய திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “நீட் விலக்கு தொடர்பான மசோதாக்கள் மீது 27 மாதங்களாக எந்த எந்த முடிவையும் எடுக்காத மத்திய அரசு, தற்போது மசோதாக்களை நிராகரித்துவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய அரசு எவ்வாறு மசோதாக்களை நிராகரிக்கலாம். மத்திய அரசா தமிழகத்தை ஆள்கிறது? மாநிலங்களுக்கென தனி அரசாங்கம் உள்ளது. அதன் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களின் நிலை குறித்து 27 மாதங்களாக எதுவும் தெரியவில்லை. நீட் விலக்கு கோரும் மசோதாவை மத்திய அரசு பரிசீலிக்குமா அல்லது பரிசீலிக்காதா? எனக்கு பதில் தேவை. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் ” என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் மத்திய அரசுத் தரப்பில் யாரும் பதில் தராததால் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன், “நீட் விலக்கு கோரும் மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் முன்பாக மத்திய அரசே நிராகரித்துள்ளது. மத்திய அரசின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்காமல், சட்டமசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியிருக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகள் தொடர்ந்து இதைத்தான் செய்துவருகின்றன. மத்திய அரசு நிராகரித்திருப்பது சட்டவிரோதமானது. அரசியலமைப்புக்கு எதிரானதும் கூட” என்று விமர்சித்தார்.

தொடர்ந்து திமுக சார்பாக பேசிய திருச்சி சிவா, “மாநிலப் பாடத்திட்டத்தில் தேர்வெழுதி மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் நீட் தேர்வில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி நடத்தப்படுகிறது. ஆனால் கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலும் மாநிலப் பாடத்திட்டத்தில்தான் படிக்கின்றனர். மேலும், பயிற்சி வகுப்புகளில் படித்த மாணவர்களால் மட்டுமே தேர்ச்சி பெற முடிந்தது. சாதாரண மாணவர்களால் தேர்ச்சி பெற முடியவில்லை. இந்த சூழலில்தான் சட்டமன்றத்தில் நீட் விலக்கு கோரி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை மத்திய அரசு நிராகரித்துள்ளது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. இதனைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்” என்று தெரிவித்துவிட்டு திமுக, மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் படிக்க

ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகம் முற்றுகை!

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு!


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon